எனது பார்வையில்…. இடம்பெறவிருக்கும் பிரித்தானியவாழ் முஸ்லிம்களின் ‘லண்டன் ஆர்ப்பாட்டம்’

protest-against-war-crimes– ராஜரட்ணம்

லண்டன்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பொதுபலசேனா எனும் சிங்கள அமைப்புக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பிரித்தானியவாழ் முஸ்லிம்களுக்கிடையில்

பல சர்ச்சைகள் இடம்பெற்றுவரும் இந்நிலையில், ஓர் சிறுபான்மை இனத்துக்கான போராட்டம் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் எவ்வாறு முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை எனது பார்வையில் கூறிக்கொள்ள விரும்புகின்றறேன்.

அதற்குமுன்,

தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் இலங்கையில் கடந்தகால கசப்பான அனுபவங்கள் இருந்தபோதிலும் மொழியால் ஒன்றுபட்ட நாங்கள் இன்றும் பேரினவாதத்துக்கு எதிராக குரல்கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாளையும் இதே நிலைமை நாங்கள் இனிமேலும் ஒன்றுபடாதபோது எற்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பொதுபலசேனாவின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை குறிப்பாக 2012 இல் இடம்பெற்ற தம்புள்ளைப் பள்ளிவாயல் உடைப்பிலிருந்து காட்டுத்தீ போன்று பரவி வருகின்றது.

இதனைக் கண்டிக்க முஸ்லிம்களின் குரலாகவும், சமயத் தலைமையாகவும் அமையும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா முன்வரவில்லை.

mahinda

அரசாங்கத்திலிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தைக் கண்டித்து, இந்த அராஜகத்திற்கு எதிராக கேள்வி கேட்க முன்வரவில்லை.

உள்ளுர் அமைப்புக்களால் உள்ளுர் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை பகைத்து போராட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலை.

‘அல்லாஹூ அக்பர்’ என்று முஸ்லிம்களின் ஒன்றுபட்ட குரல் உலகை ஆளும் என நான் படித்திருக்கின்றேன். எனினும் மேற்கூறப்பட்ட அரசியல் கூலிகளால் இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் எந்த அடக்குமுறைக்கும் இலங்கையில் சுபீட்சம் காண முடியாது.

இதே போல் இலங்கை முஸ்லிம்கள் நம்பி இருக்கும் அரபு நாடுகளும் என்ன? என்று ஒருவார்த்தை கேட்கவில்லை! இது ஓர் சிறுபான்மை இனத்தை நசுக்க அந்த சிறுபான்மையின எட்டப்பர்களை வைத்தே நசுக்குவது உலக வல்லரசு தத்துவங்களில் ஒன்று. அதைத்தான் இன்று அரசாங்கம் தந்திரமாக மேற்கொண்டு வருகிறது.

protest-against-war-crimes

நிற்க,

சுமார் 40 வருட ஐரோப்பா-இலங்கைவாழ் தமிழ், முஸ்லிம்களின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம்கள் எதிர்வரும் 5ம் திகதி பொதுபலசேனா இயக்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவிருக்கின்றனர். இந்த போராட்டத்தை இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்றது.

எதிர்வரும் மே 5ம் திகதி இங்கிலாந்தில் பொதுவிடுமுறை தினமாகும். இவ்வாறான பொதுவிடுமுறை தினத்தில் எல்லோரையும் ஒன்றுசேர்க்கும் நோக்கில் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இது ஓர் வேடிக்கையாக அமைகின்றது.

ஓர் திருமண விருந்துக்கு காத்திருந்து தேதி குறிக்கப்பட்டு, ஓர் விடுமுறைதினத்தில் விருந்து கொடுப்பதுபோல் இவ்வமைப்பின் செயற்பாடுகள் இருக்கின்றன.

ஏனெனில் பொதுவிடுமுறைதினத்தில் குறிப்பாக குடும்பஸ்தர்களும் முதலாளிமார்களும் கூடுவது இலகுவான காரியமென்றாலும், தங்களது போராட்டத்தின் நோக்கத்தை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டுமாயின், அது ஓர் வேலை நாளொன்றில் அமைய வேண்டும். லண்டன் நகரில் ஈயடிக்கக்கூட அதிகாரிகள் இல்லாத ஓர் விடுமுறைதினத்தில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது ஓர் தவறானதாகும்.

ஓர் இனத்துக்கு எதிரான போராட்டம், சொந்த உழைப்பு, சுயநலத்தைத் தாண்டி அமையப்பெற வேண்டும். தங்களது வேலைத்தளங்களில் விடுமுறை எடுத்து, தங்ளது உழைப்பை துச்சமென மதித்து போராட்டத்தை உயிரோட்டமாக்க வேண்டுமே தவிர, கல்யாணச்சாப்படு போன்று விடுமுறை நாளொன்றில் ஒன்றுகூடிச் சேர்வதாக அமையக்கூடாது.

கடந்த 40 வருட தமிழர்களின் போராட்டங்கள் ஐரோப்பாவில் இடம்பெற்ற வரலாறுகளை ஐரோப்பா முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்வேண்டும். தங்களது உழைப்பை துச்சமென மதித்து இரவு பகலாக குளிரில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள அமெரிக்கா, இலங்கை உட்பட ஐரோப்பிய தூரகங்களுக்கு முன்னால் ஆண்கள், பெண்கள் என உருகிப் பெற்ற தியாகம் இன்று பல முஸ்லிம்களையும் பிரித்தானியாவில் தலை நிமிர்ந்து வாழவைக்கின்றது என்ற உண்மையை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

bothu

அகதிக் கோரிக்கையை முஸ்லிம்கள் முன்வைப்பதற்கு பிரதான காரணமே இலங்கையில் ஏற்பட்ட யுத்தம். அதே போல் தழிழ் என்ற மொழிக்கு உலக அந்தஸ்து. இலங்கை முஸ்லிம்களின் மொழியும் பெரும்பாலும் தமிழாக இருப்பதால் இதுவும் அகதிக் கோரிக்கையாளர்களுக்கு ஓர் வரமாக அமைகின்றது.

ஐரோப்பிய தமிழர்களின் இவ்வாறான போராட்டங்களின் விளைவு இன்று ஐக்கிய நாடுகள், இலங்கைக்கு எதிரான கடும்போக்கை எடுத்துவைத்திருக்கின்றன. இதன் காரணமாக ஐரோப்பாவில் அகதி அந்தஸ்த்து கோரி இருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு தற்போதைக்கு திருப்பி அனுப்புவதில்லை எனும் நிலைப்பாட்டை ஐரோப்பிய வலய மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன.

நாங்கள் அன்று செய்த போராட்டங்களை சிங்களவர்கள் கொச்சைப்படுத்தியிருந்தார்கள். அது எங்களுக்கு வேதனையளிக்கவில்லை. எனினும் எங்களது போராட்டங்களை பேரினவாதிகளுடன் சேர்ந்து சில ஐரோப்பிய முஸ்லிம்களும் கொச்சைப்படுத்தி இருந்தமை மனக்கசப்பு!

கடந்த 2012இல் லண்டன் வருகை தந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் தமிழர்கள் தங்களது உரிமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நசுக்கலுக்காக எதிர்ப்பு அணியை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வேளையில், தற்பொழுது இந்த லண்டன் போராட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் இலங்கை புலம்பெயர்ந்தோர் முஸ்லிம் அமைப்பு, குறித்த தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, வருகை தந்திருந்த ஜனாதிபதியை ஆரத்தழுவிக் கொண்டனர்.

அதுமாத்திரமன்றி, இவ் அமைப்பினர்களுள் சிலர் ஜனாதிபதியுடன் புகைப்படங்களை எடுத்து, முகநூலிலும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பெருமைக்காக உலாவிட்டார்கள்.

இது ஒன்றும் தவறில்லை. ஆனால் இன்று நீங்கள் எதிர்க்கும் இந்த பொதுபலசேனா அமைப்பினர் தம்புள்ளைப் பள்ளிவாயலை உடைத்த ஒரு மாதத்திற்குள் உங்களது உரிமைகளையும், மானத்தையும் காற்றில் பறக்கவிட்டு, இப்புகைப்படத்தை அன்று நீங்கள் உலகுக்கு காண்பிதத்தால்தான், இன்றுவரைக்கும் எந்த ஐரோப்பிய தலைவர்களும் இலங்கையின் முஸ்லிம் பிரதேசங்களுக்கு வரவில்லை என்பதை இவ்விடத்தில் மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எனவே, போராட்டங்கள் நோக்கங்களுடையவை. வெறும் பெருமைக்காக கோர்ட், டை அணிந்துவந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது போராட்டமாகாது. இதுவரைக்கும் எந்தத் தமிழர்களாவது தங்களது போராட்டங்களை தனிப்பட்ட ரீதியில் சமூக வலைத்தளங்களில் பெருமைக்காக உலாவிட்டார்களா என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் தேடிப்பார்க்க வேண்டும்.

10268400_630685970349896_1529799134_n[1]

எனவே அன்புள்ள பிரித்தானியாவாழ் முஸ்லிம் சகோதர்களே!

ஓர் அமைப்புக்கு நோக்கம் இருக்க வேண்டும். கிரிக்கட்டுக்கு மாத்திரம் அறிக்கைகள் விடுவதோ, மற்றுமொரு சிறுபான்மையினத்தின் உரிமைக்கான போராட்டங்களைக் கொச்சைப்படுத்வதாகவோ தங்களது செயற்பாடுகள் இருக்கக்கூடாது. அமையவும் கூடாது.

ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்புக்கள் தெளிவாக அனைத்து முஸ்லிம்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

யார் யாருக்கு மகஜர்கள் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் போராட்டம் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பதை ஒத்திகை பார்க்க வேண்டும்.

போராட்டம் வாரநாட்களில் இடம்பெறவேண்டுமே தவிர, தங்கள் வசதிக்கு ஏற்ப அமைக்கக்கூடாது. ஏனெனில் தலைவர்களுககு ஓய்வு நாளாக இருக்கலாம். வேலை செய்யும் தனிநபர்களுக்கு அன்று விடுமுறைதிங்களில் கூடிய சம்பளங்கள் கிடைக்கும் நாளாக அமையும். சிலருக்கு கட்டாயம் வேலை செய்யவேண்டிய நாளாகவும் அமையும். தூர இடங்களில் இருந்து லண்டனுக்கு வருவதற்கான போக்குவரத்துக்கள் விடுமுறைதினத்தில் மட்டுப்படுத்தப்படுவதால் எல்லோராலும் கலந்து கொள்ள முடியாது. எல்லோரிடமும் வாகனம் இருக்காது.

இதற்கிடையில், இப்போராட்டம் அதாவது தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் அதிகமாக தனித்து வாழும் பிரித்தானியாவின் சில பகுதிகளில் உள்ளவர்களால் இவ்வேற்பாடு செய்யப்பட்டிருப்பதில் மற்றுமொரு விமர்சனம் எழுந்திருக்கின்றது.

அதாவது தலைநகர் லண்டனில் உள்ள முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் ஒன்றினைந்து இலங்கையின் தலைநகரத்தில் அதாவது கொழும்பில் பல்லினத்தவர்களுடனும் ஒன்றிணைந்து பலகிவருவதுபோல் இங்கும் வாழ்வதால், சிங்கவர்களை எதிர்க்க முடியாத அசௌகரிக நிலை தோன்றுவதைக் காணமுடியும்.

என்னதான் பொதுபலசேனாவை எதிர்த்தாலும் மறைமுகமாக ஓர் சிங்கள அமைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்போல் அமைவதால் தலைநகர் லண்டன் முஸ்லிம்களில் பலர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதைத்  தவிர்க்க விரும்புகின்றனர். இதைவிடவும், அரசாங்கத்திற்கு தங்களை யாரும் போட்டுக் கொடுத்து விடுவார்களோ என்ற பயமும் காரணமாக அமையும்

நாங்கள் 40 வருடங்களாக செய்யும் இப்போராட்த்தை முதன்முதலாக நீங்கள் செய்வதற்கு முன்வந்திருப்பதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒருவன் சிந்தித்தால்தான் அச்சமூகம் சிந்திக்கும். விடிவும் கிடைக்கும்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்.

இறைவனின் அருள் எங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

நன்றி

என்றும் உண்மையுள்ள

சி.து. ராஜரட்ணம்

வெஸ்ட்ஹம்,
லண்டன்

Published by

Leave a comment