காத்தான்குடி: 1980 களில் ஐரோப்பிய விளையாட்டு மைதானங்கள் போன்று இயற்கை புல் வெளியில் பச்சைப் பசுமையாகக் காணப்பட்டுவந்த காத்தான்குடி விக்டரி மைதானம் தற்பொழுது மீளமைக்கப்படும் நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1980-1990 காலப்பகுதியில் காத்தான்குடியின் அசைக்க முடியாத விளையாட்டாக உதைப்பந்தாட்டம் இருந்து வந்தது. அக்கால கட்டத்தில் யுனைட்டட், சன்றைஸ், விக்டரி, நூறானியா ஆகிய கழகங்கள் காத்தான்குடியில் சிறந்து விளங்கின.
சுற்றுப்போட்டிகளும், நட்புப் போட்டிகளும் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமளித்துவந்ததுடன், உதைப்பந்தாட்ட இரசிகர்களுக்கும் விருந்து படைத்தன. இம்மைதானத்திலும் பல போட்டிகள் இடம்பெற்று வந்தன.
காத்தான்குடி கர்பலா வீதிப் பள்ளத்தாக்கில் ஓர் அழகிய சூழலில் இந்த விக்டரி மைதானம் காணப்படுகிறது. இயற்கைப் புல் வெளியில் பசுமையாகக் காணப்பட்ட இம்மைதானம், விளையாட்டு வீரர்களின் அசமந்தப் போக்கினால் மாடுகள் மேய்க்கும் இடமாக மாற்றப்பட்டது.
மழைகாலத்தில் மீன்கள் பிடிக்கும் ஓர் குளமாகவும் இம்மைதானம் காணப்பட்டு வந்தது.
1986 காலப்பகுதியில் இம்மைதானத்தில் கிரிக்கட் சுற்றுப் போட்டிகளும் இடம்பெற்று வந்தன. அகாலத்தில் காத்தான்குடியில் புகழ்பெற்றிருந்த அஸார்டஸ், இம்ரான்ஸ் ஆகிய அணிகளும் இங்கு விளையாடி வந்தன. பின்னர் அவ்வப்போது இம்மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கட் விளையாடுவதையும் முன்னர் காண முடிந்தது.
இயற்கை எழில் கொஞ்சும் இவ் விக்டரி மைதானம் நேர்த்தியான முறையில் மீளமைக்கப்படின், நிச்சயமாக காத்தான்குடி விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பொக்கிசமாக அமையும்.



Leave a comment