ஆட்சியாளர்களை மதிக்கலாம் : ஆனால் துதிக்கலாமோ..?

alavi– அப்துல் வஹாப்

‘அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால் உலமாக்களும் இப்படித்தானா?

இதுபோன்ற சாஷ்டாங்கங்களை இஸ்லாம் அனுமதிக்கின்றதா?

இதுபற்றி நமது முற்போக்கு உலமாக்கள் பேச மாட்டார்களா?’

அண்மையில் ஊடகங்களில் வெளியான ஒரு புகைப்படத்தைக் கண்டபோது என் மனதில் எழுந்த கேள்விகளே இவை.

காத்தான்குடியில் ‘உலமாக்களின் தந்தை’ என எல்லோராலும் கண்ணியப்படுத்தப்படும் ஒரு உலமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் முன்னால் சிரம் தாழ்த்தி மிகுந்த பக்தி சிரத்தையுடன் அவரது கரத்தைப் பற்றிப் பிடித்து முத்தமிடும் காட்சியே அப்புகைப் படத்தில் பதிவாகியிருந்தது.

கடந்த 19.04.2014 அன்று மட்டக்களப்பு மண்முனை பாலத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வின்போதே இந்த சாஷ்டாங்கம் நடந்திருக்கிறது. இக் காட்சி என்னைப் போலவே இன்னும் பலருக்கு அதிர்ச்சியையும் ‘நமது உலமாக்களா இப்படி?’ என்ற அவமானத்தையும் கொடுத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.

இது போன்ற சாஷ்டாங்கங்களை நமது அரசியல்வாதிகள் தாராளமாகச் செய்வதினை நாம் தொடர்ந்தும் கண்டு வருகின்றோம். ஜனாதிபதியின் கரங்களைப் பற்றிப் பிடித்து அளவி மெளலானா முத்தமிடுவதையும், ஜனாதிபதிக்கு முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் போன்ற பலரும் கை கூப்பி நிற்பதனையும் நாம் கண்டு கவலையும் ஆத்திரமும் அடைந்திருக்கின்றோம். ‘இவர்களெல்லாம் சுயமரியாதையற்ற அரசியல் வியாபாரிகள், இவர்களிடமிருந்து இதனைவிட வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்’ என நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு அமைதிப்பட்டிருக்கின்றோம். ஆனால் இதுபோன்ற சாஷ்டாங்கங்களை நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய உலமாக்களே செய்யும்போது நமது வேதனையை யாரிடம் சொல்லி அழுவது?

alavi

நமது மார்க்கம் அடுத்தவர்களை மதிக்கச் சொல்லுகிறதுஇ அதற்கான வழி முறைகளையும் சொல்லித்தந்திருக்கின்றது. அது போலவே அடுத்தவர்களைக் கெளரவப் படுத்துகின்றபோது நாம் கவனிக்க வேண்டிய வரையறைகளையும் சொல்லித் தந்திருக்கின்றது.

தான் வருகை தருகின்ற போது தனக்கு மரியாதை செலுத்துமுகமாக சபையோர் எழுந்து நிற்பதைக் கூட முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்திருக்கின்றார்கள் என்பதனை நாம் அறிந்திருக்கின்றோம். ஆட்சியாளர்களின் முன்னால் அவர்களின் விவகாரங்களை துணிச்சலுடன் சுட்டிக் காட்டுகின்றவர்களாக உலமாக்கள் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முன்னால் சிரம் தாழ்த்தி கூனிக்குறுகி, அவர்களின் கரங்களை முத்தமிட்டு சாஷ்டாங்கம் செய்கின்றவர்களாக அவர்கள் இருக்கக்கூடாது. இதுவே நமது மார்க்கத்தின் வழிமுறையுமாகும்.

இன் நிலையில் நமது மதிப்பிற்குரிய உலமாக்கள் அவர்களது சுய மரியாதையினைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் இவ்வாறு நடந்து கொள்ளுவது வேதனைக்குரியது. மூத்த உலமாக்களால் செய்யப்படும் இதுபோன்ற தவறுகள் தொடர்பில் நமதூரின் முற்போக்கு உலமாக்கள் மெளனம் காப்பது அதனைவிடவும் வேதனைக்குரியது.

his

மார்க்கத்தின் வழி காட்டுதல்களை அறியாத நிலையில் பொது மக்கள் விடும் சிறு சிறு தவறுகளையும் கூட படு காரசாரமாகவும், பகிரங்கமாகவும் சுட்டிக்காட்டும் நமதூரின் முற்போக்கு உலமாக்கள், பாரதூரமான தவறுகளை ஆட்சியாளர்களும், உலமாக்களும் செய்கின்றபோது ‘அடக்கி வாசிப்பதை’ பல சந்தர்ப்பங்களிலும் அவதானிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணமாகும்.

எனவே நமது முற்போக்கு உலமாக்களாவது தமது மௌனம் கலைத்து, ஆட்சியாளர்களைக் கெளரவப் படுத்தல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இது போன்ற சாஷ்டாங்கங்கள் பற்றிய தெளிவான வழிகாட்டுதல்களை பகிரங்கமாக வழங்குவதற்கு முன்வரவேண்டுமென்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.

abd cader

Published by

One response to “ஆட்சியாளர்களை மதிக்கலாம் : ஆனால் துதிக்கலாமோ..?”

  1. காத்தான்குடியில் “உலமாக்களின் தந்தை ” எனக் குறிப்பிடுவது அப்துல்லாஹ் (பெரிய) ஹஸ்ரத் அவர்களைத்தானே,
    அவர் ஜனாதிபதியின் கையைப் பிடித்து முத்தமிடும் காட்சியை இணையத்தளம் (Newsbest) ஒன்றில் பார்த்தேன். அந்த போட்டோவையும் இணைத்துக் கொண்டால் இஸ்லாமிய சமூகம் இப்படியானவர்களை இனம் கண்டுகொள்ள உதவியாய் இருக்கும்.

Leave a comment