காத்தான்குடி: மண்முனை பாலம் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் தங்களது குடும்பசகிதம் சென்று மண்முனைப் பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
கடந்து வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட கல்லடி புதிய பாலத்தைப் பார்வையிட மக்கள் சென்றதைப் பார்க்கிலும் மண்முனைப் பாலத்தை பார்வையிடும் மக்கள் அதிகரித்திருப்பதாக தெரியவருகிறது.
காரணம், கல்லடிப்பாலம் திறக்கப்பட்டாலும் மக்களுக்கு பாலத்தின் இருகரைகளிலும் இருக்கும் ஊர்கள் பழக்கப்பட்டவை. எனவே கல்லடிப்பாலத்தினூடாக பயணிப்பதை ஆர்வமாக மேற்கொண்டார்களே தவிர, அக்கரைக்குச் செல்வதை நோக்காகக் கருதி சென்றுவரவில்லை.
எனினும், கடந்த 30 வருடங்களாக இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்ததின் காரணமாக, மண்முனை பாதை ஊடாக மட்டக்களப்பு வாவிக்கு அப்பால் சென்றுவருவதை குறிப்பாக முஸ்லிம்கள் நிறுத்திக் கொண்டனர்.
படுவான்கரை… காத்தான்குடி மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த ஓர் ஊர். அக்காலத்தில் இருந்த போடிமார்கள் என அழைக்கப்டும் விவசாய முதலாளிமார்கள் எண்ணிக்கணக்கிட முடியாத அளவுக்கு நெற்காணிகளை சொந்தமாக தங்களது சொத்துக்களாக வைத்திருந்தனர்.
திருமணங்களின் போது சீதனமாக அக்காலகட்டத்தில் படுவான்கரை நெற்காணிகள் ஏக்கர் கணக்கில் மாப்பிள்ளைக்கு அள்ளிக் கொடுக்கப்படும். கண்ணுக்கு எட்டும் தூரம்வரைக்கும் அக்காணிகள் காணப்படும்.
படுவான்கரை காத்தான்குடியின் மறு பூமி என அழைக்கப்பட்ட காலம் அது. 1985வரைக்கும் படுவான்கரை நெற்கானி செய்கைகளும், உளவு இயந்திரங்களும், நெல் மூடைகளும், அரிசி ஆலைகளும் காத்தான்குடியை பிரதிபளித்திருந்தன.
1985 தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தையடுத்து மட்டு வாவிக்கு அப்பால் படுவான்கரை மற்றும் அதன் சூழ்நிலங்களில் காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த காத்தான்குடி மக்களின் நெற்கானிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்து, பலவந்தமாகப் பறித்தெடுக்கப்பட்டிருந்ததும் வரலாறு.
சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி மக்களின் பொழுது போக்கும் மிக முக்கிய இடமாக படுவான்கரை காணிகள் இன்றியமையாதவையாக இருந்தன. உழவு இயந்திரங்களிலும், இரட்டை மற்றும் ஒற்றை மாட்டு வண்டில்களிலும் குடும்பங்கள் சகிதம் சென்று, ஆடு, மாடு, குளத்து மீன் கறி சமைத்து, அரிசி இடித்து சோறு சமைத்து, புத்தம்புது மரக்கறிகள், கீரைகள் சமைத்து உண்டு மகிழ்ந்த காலம் அது.
தற்போதுள்ள இளம் சமுதாயத்தினருக்கு மட்டு வாவிக்கு அப்பால் என்ன இருக்கின்றன என்பதைக் காண பேராவல். இதனால் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் எமது மக்களிடமிருந்த நடைமுறை அக்கால நடைமுறைகளுக்கு ஈடாகாவிட்டாலும், மண்முனைப் பாலத்ததைப் பார்த்து வருவது மாத்திரமன்றி அக்கரைக்கும் சென்று ஒரு ‘ரவுண்ட்’ அடித்து வருவதைக் காண முடிpகறது.
போக்குவரத்துக்கு அன்று உழவு இயந்திரங்களும் மாட்டு வண்டில்களும் இருந்தன. இன்று வாகனங்கள் அதிகரித்தாலும் பெரும்பாலும் மோட்டார் சைக்கில்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் குடும்ப சகிதம் சென்று வருவதையும் காண முடிகிறது.
காத்தான்குடி வரலாற்றில் வருடத்தில் கொண்டாட்டம் எனப்படும் தினத்தில் குடும்பத்துடன் காத்தான்குடி மக்கள், காத்தான்குடி கடற்கரைக்குச் சென்று வருவதுடன், நிலாக் காலங்களிலும் கடற்கரைக்குச் சென்றுவரும் வழக்கம் அன்று இருந்தது.
எனினும் 1990 காலப்பகுதியின் பின்னரே காத்தான்குடி மக்களின் பிரதான பொழுது போக்கும் இடமாக காத்தான்குடி கடற்கரை திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by






Leave a comment