கொழும்பு: இலங்கை அணி இந்த ஆண்டில் தனது நீண்ட சுற்றுப்பயணத்திற்கு தயாராகிவரும் நிலையில் அணியின் பயிற்சியாளர் போல் பாப்ரஸ் திடீரென விலகியுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை அணிக்கு மார்வன் அத்தப்பத்து இடைக்கால தலைமை பயிற்சியாளராக செயற்பட வாய்ப்பு உள்ளதாக சனத் ஜயசூரிய கணித்துள்ளார்.
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர் நிரந்தர பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க போதிய கால அவகாசம் இல்லாத நிலையிலேயே ஒரு தற்காலிக பயிற்சியாளரை நியமிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பாப்ரஸை இலங்கை அணி பயிற்சியாளராக நியமிப்பதில் சனத் ஜயசூரிய முன்னிலையில் நின்று செயற்பட்டார். எனினும் இங்கிலாந்து உதவிப் பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்ததும் பாப்ரஸ் இலங்கை அணி பயிற்சியாளர் பதவியை இராஜpனாமா செய்தார்.
‘துரதிருஷ்டவசமாக நாம் இப்போது சிக்கலான நிலையில் இருக்கிறோம்’ என்று ஜயசூரிய பி.பி.சி. சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். ‘இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஆரம்பமாகும் தறுவாயிலேயே நாம் இந்த சிக்கலுக்கு முகம்கொடுத்திருக்கிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். தற்போதைய நிலையில் மார்வனுக்கு அதிக பொறுப்புகள் உள்ளன. அதேபோன்று பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களுக்கு அதிக பொறுப்புகள் உள்ளன.
‘தற்போதைய நிலையில் எம்மால் மிக விரைவாக பயிற்சியாளர் ஒருவரை தேட முடியாது. இலங்கை கிரிக்கெட் ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. இவ்வாறான நிலை விளையாட்டிலும் வாழ்விலும் ஏற்படுகிறது. அதற்கு நாம் அனுபவத்தின் மூலம் முகம்கொடுப்போம். இதனை வீரர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். அவர்களுக்கு அதனை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.’
இலங்கை அணி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று 15 வார காலத்தில் பாப்ரஸுக்கான சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக வதந்திகள் வெளியாகியுள்ளன. அதேபோன்று அவரது பதவிக்காலத்தில் வீரர்களுக்கும் கிரிக்கெட் சபைக்கும் இடையிலான குழப்ப நிலையும் பாப்ரஸின் கவனத்திற்கு உள்ளாகி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் மீதான குற்றச்சாட்டுகளை ஜயசூரிய முற்றாக நிராகரித்தார்.
‘இந்த செய்திகளை நான் நம்பவில்லை. விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்கள் காரணமாக வங்கிகளில் தாமதம் ஏற்பட்டிருக்கக் கூடும்’ என்று குறிப்பிட்டார் ஜயசூரிய. ‘எனக்கு தெரிந்த அளவில் இவ்வாறான எந்த தீவிர பிரச்சினையும் இல்லை. அனைத்தும் 100 வீதம் முழுமையானதாக இல்லை. அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை எட்ட முடியும்.
‘சபை மீது குற்றம் சுமத்த நாம் எப்போதும் தாயாராக இருக்கிறோம். நான் விளையாடும் காலத்திலும் சபையுடன் சிறு பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இந்த விடயங்கள் உடனடியாக பேசி தீர்க்கப்பட்டன.’
முன்னர் இலங்கை கிரிக்கெட்டுக்கு மாற்றங்களை செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்காமல் பாப்ரஸ் இங்கிலாந்து பணிக்கு அவதானம் செலுத்தியது குறித்து ஜயசூரிய கவலை தெரிவித்திருந்தார்.
‘இருபது-20 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் அவர் விடுமுறையில் சென்றார். ஏதாவது நடக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவருக்கு அங்கு அழைப்பு கிடைத்ததையடுத்து அனைத்தும் வேகமாக நடந்தது. அவர் இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டு ஒரு சில தினங்களில் நாடுதிரும்பியதன் பின் தனது பதவியில் இருந்து விலகிக்கொண்டார். இந்த நேரத்தி நாம் இதனை எதிர்பார்க்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தோம். அவர் இருந்த குறுகிய காலத்தில் சிறந்த சேவையை செய்தார்.’ tk
Published by
![SRI LANKA CRICKET LOGO[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/sri-lanka-cricket-logo1.jpg?w=150&h=150)
Leave a comment