காத்தான்குடி: காத்தான்குடி வரலாற்றில் முதன் முதலாக கட்டப்பட்ட ஜூம்ஆ பள்ளிவாயலாக காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல் திகழ்கிறது. காத்தான்குடிக்கு அராபியர்கள் அல்லது எமன் நாட்டவர்களின் வருகையைத் தொடர்ந்து,
கட்டப்பட்ட முதலாவது பள்ளிவாயலாக காத்தான்குடி 5, மஸ்ஜிதுல் ஹுதா (சின்னப்பள்ளிவாயல்) பள்ளிவாயலுக்குப் பின்னர் ஜாமியுழ்ழாபிரீன் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இப்பள்ளிவாயல் அமைக்கப்பட்டதிலிருந்து 2000ஆம் ஆண்டு காலப்பகுதிவரைக்கும் காத்தான்குடியின் அதிக வருமானம் கூடிய பள்ளிவாயலாக இப்பள்ளிவாயல் திகழ்ந்தது. தற்போதும்கூட அதிக வருமானம் பெரும் பள்ளிவாயல்களில் ஒன்றாக இப்பள்ளிவாயல் திகழ்கிறது.
இப்பள்ளிவாயல் அமைக்கப்பட்டதிலிருந்து சுமார் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிவரைக்கும் எவ்வித மாற்றங்களுமின்றி, பழையவடிவில் இருந்து வந்தது. 1990 காலப்பகுதியில் இருந்த நிர்வாகத்தினர் இப்பள்ளிவாயலை திருத்தியமைப்பதற்கு முயற்சித்தனர்.
பின்னர் 2000ஆம் காலப்பகுதியில் மீண்டும் நவீன அபிவிருத்தி என்ற போர்வையில் பல மாற்றங்கள் இப்பள்ளிவாயல் கட்டடத்திலும், சுற்று வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் ஓர் நவீன அபிவிருத்தியை நோக்கி பழையவை களையப்பட்டு, இப்பள்ளிவாயல் கட்டடங்கள் திருத்தியமைக்கப்பட்டன. இவற்றுள் அநேகமானவை பொதுமக்களுக்கு பயனளிக்கும் முகமாகவே காணப்படுகின்றன.
இருந்தும் சுமார் 25 வருடங்களாக தொட்ட கை விடாமல் அபிவிருத்தி என்ற பெயரில் இப்பள்ளிவாயல் அங்குமிங்கும் கட்டட சிதைவுகளாக காணப்பட்டு வருகின்றன.
இதற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட எத்தனையோ பள்ளிவயால்களின் திருத்தங்கள் மிகக் கச்சிதமாக அமைக்கப்பட்டு பள்ளிவாயல் வேலைகள் முழுவதும் நிறைவடைந்து மிக அழகாக காட்சியளிப்பதுடன் பொதுமக்களுக்கு இடைஞ்சல்களின்றி காணப்படுகின்றன. இதே போல் எத்தனையோ பள்ளிவாயல்கள் மிக அழகாக காத்தான்குடியில் அண்மைக்காலமாக புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டும் இருக்கின்றன.
அதிக வருமானத்தைக் கொண்டமைந்த இப்பள்ளிவாயல் மாத்திரமே காத்தான்குடி வரலாற்றில் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக அபிவிருத்தி என்ற பேரில் ஆங்காங்கே சிதைவுகளுக்குள் மூழ்கிக் காணப்படுவதுடன், ஓர் ஜூம்ஆவை ஒழுங்காக நிறைவேற்ற முடியாமல் மக்கள் அவதிப்படுவதையும் காணமுடிகிறது.
நிர்வாகத்தின் அசமந்தப்போக்கும், நிர்வாக உறுப்பினர்களின் இழுபறிகளுமே சுமார் கால் நூற்றாண்டு அபிவிருத்தி(?) என்ற இந்த நவீன மாற்றங்களுக்கான காரணம் என ஜமாஅத்தார்களில் அதிகமானோர்கள் தங்களது அதிருப்திகளைத் தெரிவித்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment