வவுனியா: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக சொல்லப்பட்ட கோபி உட்பட மூன்று பேர் ராணுவத்துடனான மோதல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. வவுனியா நெடுங்கேணி என்ற இடத்தில், நேற்று அதிகாலை இலங்கை ராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரான கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவரும் தப்பிச் செல்ல முயன்றனர். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலில் மூவருமே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவன் வணிகசூரியா அறிவித்துள்ளார்.
கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது காசியன் மாஸ்டர் என அழைக்கப்பட்ட கோபிக்கு வயது 31. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் ராணுவத்திடம் சரணடைந்தார். பின்னர் தடுப்பு முகாமில் இருந்தார். அவர் அங்கிருந்து தப்பி கத்தார் நாட்டில் பணி புரிந்திருக்கிறார்.
பின்னர் ஐரோப்பாவுக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெடியவன் பிரிவினருடன் இணைந்திருக்கிறார். பின்னர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க நெடியவனே கோபியை அனுப்பி வைத்தார் என்கிறது தகவல்கள்.
இதற்கு முன்னர் கடந்த 24-ந் தேதியன்று கிளிநொச்சியில் வீடு ஒன்றில் கோபி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்திருக்கின்றனர். அப்போதும் கோபிக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றதாகவும் அதில் கோபி தப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்துதான் கைது நடவடிக்கைகள் அதிகரித்தன என்றும் இலங்கை ஊடகங்கள் கூறுகின்றன.
இம் மோதலின்போது இலங்கை இராணுவ வீரர் ஒருவர் பலியாதாக வெளியான செய்தியை இலங்கை இராணுவம் மறுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment