சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு

sangakkaraSMH

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்களுக்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சங்ககார உரையாற்றி கொண்டிருந்த போது, ‘சங்ககார நாடாளுமன்றத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளதாக’ ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட சங்ககார சிறந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் இந்த கருத்துக்களுக்கு எந்த பதிலையும் வழங்காத சங்ககார சிரித்ததாக கூறப்படுகிறது.

பொது வேட்பாளருக்கு அமைச்சர்கள் சிலரும் ஆதரவு- மாதுளுவாவே சோபித தேரர்,

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் முன் வைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதித்து வருவதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளரான மதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 

parliament

பொது வேட்பாளர் தொடர்பில் சில அரசியல் கட்சிகள் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றில் விவாதிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஜனநாயகக் கட்சி மற்றும் சில முஸ்லிம் கட்சிகளுடன் பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பது எமது நோக்கமல்ல. அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதும் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை வழங்குவதுமே எமது நோக்கம்.

எமது பொது வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்கு வந்து 6 மாதங்களில் அரசியல் அமைப்பில் மாற்றங்களை செய்ய அவசியமான திருத்தங்களை செய்ய வேண்டும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

Published by

Leave a comment