ஏறாவூர்: ஏறாவூர் நகர சபை செலவறிக்கைகள் பற்றி விசாரிக்க உள்ளக விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார். ஏறாவூர் நகர சபையின் 37 வது சபை அமர்வு நகர சபையின் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா தலைமையில் நேற்று வியாழக்கிழமை (10.04.2014) ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஏறாவூர் நகர சபையின் மார்ச் மாத வரவு செலவுகள் தொடர்பான விடயம் சபையின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டபோதே கணக்கறிக்கையில் காணப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ வுக்காக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 76810 ரூபா மற்றும் காகிதாதிக் கொள்வனவுக்காக செலவிடப்பட்ட 133702 ரூபாய் செலவுகள் நிராகரிக்கப்பட்டன. இது குறித்து நகரபிதா சபையில் உத்தரவொன்றைப் பிறப்பித்தார்.
இச்சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட மாதாந்தக் கணக்கறிக்கை தெளிவின்மை காரணமாகவும், அதற்குரிய நிதிக்குழுவினர் உரிய நேரத்தில் தமது சிபார்சுகளைச் செய்யாத காரணத்தினாலும் நகர சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கேற்ப கணக்கறிக்கை சிபார்சு செய்யப்படுவது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது விடயமாக விசாரிக்க உள்ளக விசாரணைக் குழுவினர் நியமிக்கப்பட்டுளார்கள். அக்குழுவினர் குறிப்பிட்ட செலவீனங்கள் குறித்து ஆராய்ந்து விசாரணை செய்து தமது அறிக்கையை மே 08 ஆம் திகதி இடம்பெறும் விஷேட கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் உள்ளக விசாரணைக் குழுவினரின் அறிக்கையைப் பரிசீலித்து குறித்த கணக்கறிக்கையை சபை நிராகரிப்பதா அங்கீகரிப்பதா என்ற முடிவெடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டதாக நகரசபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையினால் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு உறுப்பினர்களின் அங்கீகாரம் பெறப்படாத செலவீனங்களையும் முறைப்படியான கேள்விப் பத்திர நடை முறைகளைப் பின்பற்றாத சகல செலவீனங்களையும் தாங்கள் முற்றாக நிராகரிப்பதாக உறுப்பினர்கள் கடந்த மார்ச் மாத சபை அமர்வின்போது ஏகோபித்த தீர்மானத்தை எட்டியிருந்னர்.
இன்றைய சபை அமர்வில் ஏறாவூர் நகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா, உப தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், எம்.எல். அப்துல் லத்தீப், எம்.எல். ரெபுபாசம், பி.எம். அமீன் இஸ்ஸத் ஆஸாத், ஐ. அப்துல் வாசித், ஆகியோரும் ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஜே.எம். முஸ்தபா, ஏ.ஆர். பிரௌஸ் ஆகியோரும் சுயேட்சைக் குழு சார்பான பி. கஜேந்திரகுமாரும் சமுகமளித்திருந்தனர்.
நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் உட்பட இன்னும் சில நகரசபை நிர்வாக உத்தியோகத்தர்கர்களும் உடனிருந்தனர்.
Published by


Leave a comment