குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்
ஹைத்தான்: அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் குவைத் வாழ் தமிழ் மக்களுக்கான சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ‘காயல் மஹ்பூப்’ அவர்கள் எழுதிய ‘இட ஒதுக்கீடு பார்வையும் சமுதாய கடமையும்’ நூல் வெளியீடும், இவ்வாண்டு சங்கம் ஏற்பாடு செய்த புனித உம்ரா பயணத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்றோருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும்
என முப்பெரும் விழாவாக கடந்த வெள்ளிக்கிழமை (04.04.2014) நண்பகல் 12:30 முதல் 1:30 வரை குவைத் ஹைத்தான் பகுதியில் அமைந்திருக்கும் K – Tic சங்கத்தின் தமிழ் ஜும்ஆ குத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தது அல்ஹம்துலில்லாஹ்.
சங்கத்தின் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா பாஜில் பாகவீ அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க, சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ. அவர்கள் ‘சோதனைக் காலங்களில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்’ என்ற தலைப்பில் ஜும்ஆப் பேருரை (ஃகுத்பா) நிகழ்த்த, சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் ஜும்ஆ தொழுகையை நடத்த, குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்திருந்த சமூக நல்லிணக்க மாநாட்டின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில அமைப்புச் செயலாளர் ‘சிம்மக்குரலோன்’ நெல்லை ஜே. அப்துல் மஜீத் அவர்கள் அழகான முறையில் சிறப்புரையாற்றினார்.
சங்கத்தின் தலைவர் சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார். ‘இட ஒதுக்கீடு பார்வையும், சமுதாய கடமையும்’ நூலை சிறப்பு விருந்தினர் வெளியிட தலைவர் பெற்றுக் கொண்டார். பொதுச் செயலாளர். நூல் குறித்த அறிமுகத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். புனித உம்ரா பயணத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்றோருக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார். உம்ரா சென்று வந்தவர்கள் தமிழ் குத்பா பள்ளிவாசலுக்கு மின்னனு தொழுகை நேர கடிகாரத்தை சிறப்பு விருந்தினர் முன்னிலையில் சங்க நிர்வாகிகளிடம் அன்பளிப்பாக வழங்கினர். சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு செயலாளர் மவ்லவீ முஹம்மது ஷஃபீக் நுழாரீ அவர்கள் துஆ ஓத விழா இனிதே நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் ஏறக்குறைய 800க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்…! அனைவருக்கும் புனித ஸம் ஸம் தண்ணீர், பேரீத்தம் பழங்கள் போன்றவை வழங்கப்பட்டன.
நன்றி! வஸ்ஸலாம்.
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K – Tic),
குவைத்.

Leave a comment