இன்றைய இலங்கை முஸ்லிம் அரசியல் மனங்கமிழும் சந்தனமா அல்ல சாக்கடையா….??

srilankaமுஹம்மது காமில்

எமது இலங்கைதீவானது உலக வரைபடத்தின் ஆச்சரியங்களில் ஒன்றான நிலப்பரப்பாகும் நாற்புறங்களிலும் கடலால் சூழப்பட்ட இந்துசமூத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் அழகிய தீவாகும். இதன் இயற்கையான அமைவிடத்தின் சிறப்பை இந்த உலகமே அறியும். இங்கு இனம் மதம் மொழியால் வேறு பட்ட சமூக அமைப்புகள் இருந்தாலும் சகல சமூகங்களும் அன்னியோனியமாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெரும்பான்மை சமூகமாக பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களும் ஏனைய சிறுபான்மை இனமாக இந்துக்கள்இமுஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனைய சில இனக்குழுக்கள் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வாழும் மக்கள் தக்களுக்கென்று தனியான பாரம்பரிய மிக்க சமூக கலாச்சார விழுமியங்களை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முப்பது வருடங்கள் நீடித்த கொடிய யுத்தத்திற்கு தீர்வு கண்ட தற்போதைய நிலையில் இலங்கைதீவில் தோன்றி இருக்கும் அசாதாரண நிலையானது எமது முஸ்லிம் சமூகத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்குமா என்று எண்ணத்தோன்றுகின்றது அதற்க்கான காரணங்களும் இல்லாமல் இல்லை அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பேரினவாத சக்திகள் எல்லாம் ஓன்று சேர்ந்து ஒரு சமூகத்தை காவுவாங்க கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் இன்றைய சூழ்நிலையை எவ்வாறு நாம் எதிர்வு கொள்ளுவது எமக்கான இருப்பை தக்கவைத்துக்கொள்வது என்பது பற்றி நாம் சிந்தித்தோமா?

எமது இலங்கை தாய் திருநாட்டில் இன்றைய நிலையில் முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில் அவர்களுக்கான அரசியல்இ சமூக இகாலச்சார விழுமியங்களை பேணிப் பாதுகப்பதர்க்கும் எமது சமூகத்தின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதர்க்குமான அரசியல் சார்ந்த பல்வேறுபட்ட தலைமைகளை கொண்ட கட்சிகள் எம்மிடையே இருந்தும் நாம் கண்ட உயர் அடைவுகள்தான் என்ன? காலத்துக்கு காலம் நிகழும் அசம்பாவிதங்களையும் பழிவாங்கல்களையும் முன்வைத்து அரசியல் செய்ய நினைக்கும் கேடுகெட்ட அரசியல் தலைமைகள் நம்மிடையே இருக்குமட்டும் இதுதான் எமது சமூகத்தின் நிலை! சற்று சிந்தித்து பார்ப்போமா..!

எமது நாட்டில் வெறும் பத்து வீதமே இருக்கும் சிறுபான்மையான எமது முஸ்லிம் சமூகத்தை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தோன்றி இருக்கும் கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள் எத்தனை எத்தனையோ பேர். இருந்தும் நடைபெறும் அக்கிரமங்களை தடுப்பதற்கு யாராலும் முடியவில்லை எனக்கூறுவது உண்மையில் வெட்கப்படவேண்டியதும் அவமானப்பட வேண்டியதுமாகும். உண்மையில் எமது முஸ்லிம் சமூகம் செய்த பாவம்தான் என்ன?

இலங்கை தீவை பொருத்தமட்டில் ஆட்சியில் அமரும் சகல அரசாங்கங்களும் முஸ்லிம்களுக்கு என்றென்றும் ஆதரவாகவே இருந்தன மற்றும் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும் ஆனால் எமது சமூகத்தை விற்று பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகள் இருக்குமட்டும் பல்வேறுபட்ட இடர்களை நாம் தினம் தினம் அனுபவித்துதான் ஆகவேண்டும் இதுதான் இயற்கையின் நியதி. தற்போதைய நிலையில் எமது இலங்கை திருநாட்டில் முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சி என்று சொல்லப்படுகின்ற அத்தனை கட்சிகளும் அரசாங்கத்தின் பால் ஓன்று கூடி இருக்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை. சகல அரசியல் தலைமைகளும் அரசாங்கத்தில் ஒன்றுடன் ஓன்று கலந்து இருக்கும் இத்தறுவாயில் எமது சமூகத்துக்கெதிராக நாள் தோறும் சில பேரின வாத விஷம சக்திகளால் அரங்கேற்றப்படும் சம்பவங்களை எதிர்க்காமல் இருப்பதற்கான காரணம்தான் என்னவோ?

எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைமைகள் அத்தனையும் அரசாங்கத்தின் பல்வேறுபட்ட அமைச்சிப்பதவிகள் உயர்பொறுப்புகளில் இருந்தபொழுதிலும் எமக்கான சலுகைகள் மற்றும் எமது சமூகத்தின் பாதுகாப்புக்கள் கேள்விக்குறியாக்கப்படும் தருணத்தில் வாய் மூடி அவதானிப்பதன் சூட்சுமம்தான் என்ன ? தேர்தல்கள் நெருங்கி வரும் நேரங்களில் அரசாங்கத்தை விமர்சிப்பதும் பின்னர் தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கத்துடன் சேருவதும் மாக நாடகங்களை நடத்திவரும் எமது அரசியல் வாதிகளின் அறிவுகெட்ட தனத்தை பற்றி என்ன சொல்லுவது மக்களுக்கா சேவை செய்வேன் என்ற உறுதியுடன் அரசியலில் கால்வைக்கும் இவர்கள் பதவி மற்றும் அந்தஸ்த்துகளை அடைந்தவுடன் மக்களின் பக்கம் புறமுதுகு காட்டுவது எதற்க்காக.

நாம் அரசாங்கத்தின் மேல் பழிபோடுவதில் எந்தவகையிலும் நியாயமில்லை காரணம் கண்டிப்பாக இருக்கு. ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் சகல மக்களுக்கும் பொதுவானது மக்களின் அபிவிருத்தியை பேணவேண்டியது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் அவர்களிடமிருந்து அதாவது ஆட்சியாளர்களிடமிருந்து எமது சமூகத்துக்காக சமூகத்தின் அபிவிருத்திக்கான திட்டமிடலை மேற்கொள்ளுவது எம்மை பிரதிநித்திவப்படுத்தும் தலைவர்களுக்குரியதாகும் வெறுமனே அமைச்சுப்பதவிகளுக்காகவும் கொந்துராத்துகளுக்ககவும் ஏனைய சுகபோகங்களுக்ககவும் எமது சமூக இருப்பை அடைமானம் வைக்கும் இப்படிப்பட்ட கயவர்களை தொடர்ந்து நாம் நம்புவதன் காரணத்தினால் எமக்கு ஏற்ப்படும் சகலவிதமான சோதனைகளையும் அனுபவித்துதானே ஆகவேண்டும்.

இன்றைய நிலையில் எமது நாட்டில் ஒரு சில பேரினவாதிகளின் சூழ்ச்சியினால் அரங்கேறிவரும் சம்பவங்கள் எமது சமூகத்தின் எதிர்கால இருப்பையே கேள்விக்குரியாக்குமோ என்று எண்ணத்தோன்றுகின்றது இந்த சந்தர்ப்பத்தில் எம்மால் தேந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர். எமது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கிட்டத்தட்ட கலாச்சார போர்ப்பிரகடனம் செய்துள்ள பொது பலசேனா மற்றும் இரவாய அமைப்புகளினால் நாள் தோறும் அரங்கேறிவரும் பல்வேறுபட்ட நிகழ்வுகளை கண்டும் காணாது போல மௌனமாக இருப்பதன் அர்த்தம்தான் என்னவோ ?

இதுவரையில் எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற இவ்வாறான சூழ்ச்சி மிகுந்த சம்பவங்களை எதிர்த்த அரசியல் தலைமைகளை சற்று காட்ட முடியுமா நிச்சயமாக இல்லை எத்தனை அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் எத்தனை எத்தனை அரச உயர்பதவிகளில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் சுயநலம் பிடித்த அரசியல் வாதிகள் எல்லாம் எங்கே? என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் சந்தர்ப்பவாதத்தை பிரதிநித்துவப்படுத்தி எமது சமூகத்தின் முன் தோன்றும் சில புதிய அரசியல் வாதிகள்தான் எங்கே? ஏதாவது ஒன்றை கூறி சமூகப்பிரச்சினைகளை முன் வைத்து நமது சமூகத்தை மீண்டும் மீண்டும் முட்டாளாக்கி தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் கைகரியம் தெரிந்த சூழ்ச்சிமிக்க நயவஞ்சக அரசியல் சகுனிகளை உருவாக்கும் சமூகமாக நாம் மாறியதன் பின்னணிதான் என்ன?

மார்க்கத்தின் பெயரால் எமது உள்ளுணர்வை தூண்டி ஒற்றுமைஇ சமூக மேன்பாடு அபிவிருத்தி என்று கூறி மக்களை உணர்ச்சியின் பால் ஒன்றிணைத்து தனது அரசியல் வேட்கைகளை நிறைவு செய்து கொள்ளும் அரசியல் சாத்தான்கள் மலிந்து காணப்படும் இந்த தருவாயில் எமது சமூகத்தை காப்பாற்றப்போவது யாரு? காலத்துக்கு காலம் தோன்றும் பிரச்சினைகளை மையப்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் தந்திரம் தெரிந்த அரசியவாதிகளை எப்போதும் நம்புவதே எமது முஸ்லிம் முட்டாள் சமூகத்தின் வாடிக்கையாக போய்விட்டதல்லவா? இதற்க்கான தீர்வுதான் என்ன?

ஆட்சி மற்றும் அரசாங்கத்தில் இருந்து கொண்டே எமது சமூகத்தை பாதுகாக்க தவறும் இந்த சுயநல அரசியல் தலைமைகள் எவ்வாறு எதிர்கட்சியில் இருந்து கொண்டு எமது சமூக மேம்பாட்டுக்காக பாடுபடும்? இதை நாம் சிந்தித்து பார்த்ததுண்டா? எம்மை பிரதி நிதித்துவப்படுத்தும் அத்தனை அரசியல் வாதிகளும் இன்றயநிலையில் அரசாங்கத்தின் அனுசரனையிலேயே தங்களது சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். எமது சமூகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட அமானிதமான பதவிகளினால் எமது சமூகத்தின் விடிவுக்காக இவர்கள் செய்ததுதான் என்ன? ஒன்றுமே இல்லை.

ஹலால் பிரச்சினை, பள்ளிவாசல் உடைப்புகள், பெண்களின் ஹிஜாப் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மாடருப்பு போன்ற பிரச்சினை நாளுக்கு நாள் விஸ்வரூப மெடுத்து வெளிவரும் இவ்வேளையில் எந்த அமைச்சராவது அல்லது முஸ்லிம் அரசியல் தலைமையாவது இதற்காக குரல் கொடுத்தார்களா? கொடுக்கவே மாட்டார்கள் இனியும் அவர்களை நம்புவதில் எந்த பிரயோசனமும் இல்லை. திரைப்பட மற்றும் நாடக நடிகர்களைப்போல் எமது சமூகத்தின் முன் தோன்றி எமது உணர்வுகளை தூண்டி அதை ஏலம் விடுவதே இவர்களின் வாடிக்கையாய் போய்விட்டது சமூகத்தின் விடிவுக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி தொடர்ந்து இவர்களை அரியாசனம் ஏற்றியதுதான் நாம் செய்த மற்றும் செய்து வருகின்ற வரலாற்றுத்தவராகும். இது தொடரும் வரையில் எமது முஸ்லிம் அரசியல் வாதிகளின் கபாடத்தனமும் நாடகமும் தொடரும் அதுவரையில் நாம் முட்டால்களாகிக்கொண்டே இருப்போம் அதை எல்லாம் வல்ல இறைவனைத்தவிர யாராலும் தடுக்க முடியாது.

எமது சமூகம் தட்டிக்கேட்கக்கூடிய மற்றும் பிரச்சினைகளை எதிர்த்து கேள்வி எழுப்பக்கூடிய சமூகமாக உருமாற்றப்படவேண்டும். எம்மை பிரதி நிதித்துவப்படுத்தும் இவ்வாறான சுயநல அரசியல்வாதிகளை நாம் நடுத்தெருவில் நிற்கவைத்து கேள்வி கேட்கவேண்டும் அப்போதுதான் இவர்கள் சமூகத்தை விற்றுப்பிளைப்பு நடத்த முன்வரமாட்டார்கள் நமது சமூகத்தின் விடிவுக்காக உணர்ச்சியை புறந்தள்ளி நமது சிந்தனையை முன்னிருத்தவேண்டும் அப்போதுதான் எமக்கு சரியான தெளிவு கிடைக்கும். அதுவரையில் நாமும் நமது முஸ்லிம் சமூகமும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவார்கள் என்பது மிக்க உறுதி..!!

சிந்திப்போம் செயல்படுவோம்…!!

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே… அல்ஹம்துலில்லாஹ்.

Published by

One response to “இன்றைய இலங்கை முஸ்லிம் அரசியல் மனங்கமிழும் சந்தனமா அல்ல சாக்கடையா….??”

Leave a comment