சண்டிகர்: இலங்கைக்கு எதிரான டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது மகா மந்தமாக விளையாடியதால் யுவராஜ் சிங் மீது ரசிகர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். இந்தக் கோபத்தை அவரது வீட்டில் கல்வீசித் தாக்கி வெளிப்படுத்தியுள்ளனர்.
நேற்றைய இறுதிப் போட்டியில் மகா மந்தமாக ஆடினார் யுவராஜ். 21 பந்துகளைச் சந்தித்த அவர் ஏதோ டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல சிங்கிளாக எடுத்து 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
மிக மிக முக்கியமான ஆட்டத்தின்போது இப்படி மகா மந்தமாக ஆடியதால் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு 40 ரன்களைச் சேர்க்கும் வாய்ப்பு பறி போய் விட்டது. யுவராஜ் மட்டும் சற்று அதிரடியாக அல்லது குறைந்தபட்சம் சற்று வேகமாக ஆடியிருந்தால் கூட 30 ரன்கள் கூடுதலாக கிடைத்திருக்கலாம். ஆனால் அதை அவர் தவற விட்டு விட்டார்.
கடைசியில் இந்தியா மிகவும் குறைந்த ஸ்கோரையே எடுக்க முடிந்தது. அதை இலங்கை அணி அழகாக சேஸ் செய்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்துள்ள ரசிகர்கள் யுவராஜ் சிங்கை, பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கடுமையாக திட்டி விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக சண்டிகரில் உள்ள அவரது வீடு மீது கல்வீசித் தாக்கியுள்ளனர். ஆனால் யுவராஜ் சிங்கை ரசிகர்கள் விமர்சிப்பதற்கு ஹர்பஜன் சிங் வருத்தமும், அதிர்ச்சியும் தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் வெளியிட்டுள்ள ஒரு டிவிட் செய்தியில், அனைவரும் யுவராஜை விமர்சிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்தான் நமக்கு 2 உலகக் கோப்பைகளை வாங்கிக் கொடுத்தவர் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இந்தியாவுக்காக உறுதியுடன் ஆடக் கூடிய அரிய வீரர்களில் யுவியும் ஒருவர்.
2007ல் நடந்த முதலாவது டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்றது. 2011ல் நடந்த உலகக் கோப்பையை வென்று கொடுத்தது என்று யுவராஜின் சாதனையைப் பாருங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில எந்த ஒரு வீரராவது யுவியைப் போல விடா முயற்சியுடன் செயல்பட்டவர்கள் இருக்கிறார்களா? என்பதைக் கூறுங்கள். இது ஒரு மோசமான தினம். மேலும் போட்டியில் யுவராஜ் சிங் மட்டும்தானா ஆடினார். மேலும் 10 பேர் இருக்கிறார்கள். அதையும் மறந்து விடக் கூடாது. நாம் சிறந்த அணியிடம்தான் தோற்றுள்ளோம். தோல்விக்கு ஒருவரை மட்டும் பலிகடாவாக்குவது ஏன். இது அணி விளையாட்டு என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.
Published by


Leave a comment