மிர்பூர்: மழையின் காரணமாக ஆட்டம் தடைபட டக்வர்த் லீவிஸ் முறையிலான கணக்குப்படி இலங்கை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வென்றதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்ததை அடுத்து தனது பட்டத்தை இழக்கிறது.
மிகவும் பரபரப்புக்கு இடையே தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்தது.
![]()
மஹேல ஜெயவர்தன முதல் பந்திலேயே ஓட்டமேதும் எடுக்காமலும், குமார் சங்கக்கார ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்த போதிலும் பெரேரா, தில்ஷன், திருமான்ன மற்றும் மேத்யூஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி இலங்கை அணி 160 ஓட்டங்களைப் பெற உதவினர்.
பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினாலும் அந்த வேகத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
நான்கு விக்கெடுகள் இழப்புக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.5 ஓவர்களில் 80 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளையில், திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்து, வேகமாக ஆடுகளத்தில் மழைநீர் பரவியதை அடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் ஆட்டம் தொடர வாய்ப்பு இல்லை என்று நடுவர்கள் முடிவு செய்ததை அடுத்து, ஆட்டம் கைவிடப்பட்டு மழையினால் ஆட்டம் நின்று போனால் முடிவை நிர்ணயிக்கும் டக்வர்த் லீவிஸ் கணக்கீட்டு முறைப்படி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன.
BBC Tamil



Leave a comment