இலங்கை அணியின் 7 வருட கனவு நனவாகுமா?

WorldT20trophy-600hR40-

டாக்கா: உலக இருபது20 உலகக் கிண்ணப் போட்டி முதன் முதலாக 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்றது. தற்பொழுது 2014 உலக இருபது20 இறுதிப்போட்டிக்காக இந்தியாவுடன் விளையாட இலங்கை அணி காத்திருக்கின்றது. வெற்றிக்கனவுகள் நிறைவேற இலங்கை இரசிகர்கள் ஆராவாரத்துடன் காத்திருக்கின்றனர்.

2009,  2012 ஆகிய உலக இருபது20 இறுதிப் போட்டிகளில் இலங்கை விளையாடி இருந்தது. எனினும் எதிர்பாராத விதமாக இலங்கை அணி தோல்வியைத் தழுவி தனது வெற்றிக் கனவை இழந்தது. பலம் பொருந்திய இந்தியாவை எதிர்த்து தாங்களும் சளைத்தவர்களல்லர் என இலங்கை வீரர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலக இருபது20 இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றனர்.

இலங்கையின் பந்து வீச்சுக்களுக்கு சரளமாக ஆடும் இந்திய வீரர்களின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது. ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களிடமிருந்து பெற்ற அனுபவங்கள் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என சில கிரிக்கட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

India-vs-Sri-Lanka

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் இதுவரை 5 இருபது20 போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றுள் 3 போட்டிகளில் இந்தியாவும், 2 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்நிலையில் இலங்கை வெற்றி பெறுமிடத்து இலங்கை வீரர்களுக்கு பணப் பரிசில்களும், வெகுமதிகளும் வழங்க அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இறுதிப்போட்டியில் இலங்கை தனது 7 வருட கனவை நனவாக்குமா? என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம். 

WorldT20trophy-600h

Published by

Leave a comment