பிரிட்டனின் கல்வி ‘ஏற்றுமதி’ வருமானத்தில் வீழ்ச்சி

Rainy-Britain[1]லண்டன்: ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய வெளிநாட்டு வருமான வழிகளில் ஒன்று தான் அதன் கல்வி. நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் ஆண்டுக்கு 10 பில்லியன் பவுண்டுகளை கல்வியே ஈட்டித்தருகிறது. வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு கிடைக்கும் வருமானத்துக்கும் இங்கிருந்து செல்லும் வெளிநாட்டு செலவினத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்கின்ற இன்றைய சூழலில் கல்வித்துறையில் ஈட்டப்படுகின்ற இந்த வருமானம் மிக முக்கியமானது.

29 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 50 ஆயிரத்துக்கும் குறைவான வெளிநாட்டு மாணவர்கள் தான் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்தனர். இன்று அந்தத் தொகை 3 லட்சத்துக்கும் அதிகம்.

இருந்தாலும் பிரிட்டனின் உயர்கல்வியைத் தேடி வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2012-13ம் ஆண்டுகளில் குறைந்திருக்கிறது.

நீண்டகாலமாகவே இரட்டை-இலக்க வீதம் என்ற அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவந்த முழுநேர பட்டப்பின்-படிப்பு கற்கைநெறிகளுக்காக (post-graduate) வரும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த 2010-11 ஆம் கல்வி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2012-13 ஆண்டில் 1000 மாணவர்கள் (ஒரு வீதம்) என்ற அளவில் வீழ்ச்சியைக் காட்டுகின்றது.

இங்கிலாந்து உயர்கல்வி நிதிக் கவுன்சிலின் தகவலின்படி பிரிட்டனில் அதிகரித்துவிட்ட கல்விக் கட்டணங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்தும், புதிய வீசா கட்டுப்பாடுகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே, குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் வருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பட்டப்படிப்புகளுக்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கை நைஜீரியாவிலிருந்து 9 வீதம், பாகிஸ்தானிலிருந்து 11 வீதம், இந்தியாவிலிருந்து 13 வீதம், சவுதியிலிருந்து 15 வீதம் என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பட்டப்பின்-படிப்பு கல்வியைப் பொறுத்தவரை மிகப் பெரிய அளவில், இரானிலிருந்து 39 வீதம், இந்தியாவிலிருந்து 26 வீதம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து 20 வீதம் என்ற அளவில் வரும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ந்துள்ளது.

இந்த புள்ளிவிபரங்கள் சாதாரணமானவை அல்ல என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, 2010ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அரைவாசியாகக் குறைந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் பட்டப்படிப்புக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வருவோரில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் குறைந்துள்ளனர்.

அடுத்தபடியாக, பிரிட்டிஷ் கல்விமுறைகளின் கட்டமைப்பு காரணமாகவும் பல்கலைக்கழகங்கள் அடுத்தடுத்த காலங்களில் வெளிநாட்டு மாணவர்களை மேலும் இழந்துவிடும் பலவீன நிலையில் இருக்கின்றன. மற்ற வெளிநாட்டு பல்கலைகலைக் கழகங்களுடன் ஒப்பிடும்போது பிரிட்டிஷ் கற்கை நெறிகளின் காலம் மிகக் குறுகியவை.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் மொத்த மாணவர் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான புதுமுகங்களை பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் தேடிக்கொள்ள வேண்டும்.

தமது கல்விக்கு இங்கிலாந்து பொருத்தமான இடமில்லை என்று வெளிநாட்டு மாணவர்கள் தீர்மானிப்பது இங்கிலாந்தின் உயர்கல்வி முறையில் திடீரென்ற, மோசமான பெரிய பொருளாதார ரீதியான அடியாகத் தான் அமைந்துவிடும்.

இங்கிலாந்தில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்பின்-படிப்பு கல்வித்துறைகள் பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து வரும் பணத்தையே நம்பியே இயங்குகின்றன.

குறிப்பாக, இங்கிலாந்தின் பட்டப்பின்-படிப்பு கல்விக்கு நிதி அளிப்பதில் இங்கிலாந்தைப் போல, சீனா என்ற தனியொரு நாட்டின் பங்கும் முக்கியமானது.

கடந்த 2012-13 கல்வியாண்டில் மொத்தத்தில் 23 வீதமான மாணவர்கள் சீனாவிலிருந்து தான் மாஸ்டர்ஸ் என்கிற முதுமானி படிப்புக்காக வந்திருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 26 வீதமான மாணவர்களே இந்த கற்கை நெறிகளைப் படித்துள்ளார்கள்.

இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் மாணவர் வருகை வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், சீனாவிலிருந்து வரும் மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 9 வீத அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

குறிப்பாக, சீன மாணவர்களால் நிரம்பி வழிகின்ற கற்கை நெறிகளும் இங்கு இருக்கின்றன. கணிதம், ஊடகக் கல்வி, வணிகம், பொறியியல், படைப்புக் கலை போன்ற கற்கைநெறிகளில் சீன மாணவர்களின் ஆதிக்கமே இங்கிலாந்தில் இப்போது உள்ளன.

BBC- Tamil

Published by

Leave a comment