சான்டியாகோ: தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் வட மேற்கு கடல் பகுதி அருகே நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
சிலி நாட்டில் உள்ள இக்யூக் நகரின் வடகிழக்கில் 99 கிமீ தொலைவில் பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இது 8.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த இடத்தில் கடந்த 2 வாரங்களாக பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கடல் அலைகள் 6.5 அடி அளவுக்கு உயர்ந்து வந்து ஊருக்குள் நீர் புகுந்தது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல வீடுகள் சேதமடைந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கியும்இ மாரடைப்பு ஏற்பட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி அலைகள் எழுந்தன. நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன. தீ விபத்துகள் ஏற்பட்டன. நிலம் குலுங்கியதில் விமான நிலையம் ஒன்று சேதம் அடைந்தது. மேலும் கடற்கரையோரம் உள்ள உணவகத்தில் தீப்பிடித்தது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இக்யூக் நகரில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து 300 பேர் தப்பியோடினர். உடனே ஒரு விமானத்தில் சிறப்பு படையினரை சிலி ராணுவம் அனுப்பியது. அந்த படையினர் 40 பெண் கைதிகளை பிடித்து அழைத்து வந்துவிட்டனர்.
கடந்த 2010ம் ஆண்டு மத்திய சிலியில் 8.8 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி ஏற்பட்டதால் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்இ 2 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment