நவமணி பத்திரிகையில் வெளியான செய்திக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மறுப்பு

PMGG-Logo[1]PMGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலுடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினை தொடர்பு படுத்தி நவமணி பத்திரிகையில் வெளியான செய்திக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் (26-30.03.2014) வெளியான உங்கள் நவமணி பத்திரிகையில் திரைக்குப் பின்னால் பத்தியில் ‘மாத்தறையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் ஜே.வி.பிக்கு ஆதரவு’ என்ற உபதலைப்பின் கீழ் எழுதப்பட்ட செய்தி தொடர்பாகவே PMGG தனது மறுப்பினை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நவமணி பிரதம ஆசிரியருக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எழுதியுள்ள கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

உங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட PMGG பற்றி வெளியான செய்தி பிழையான செய்தி கடந்த வாரம் (26-30.03.2014) வெளியான உங்கள் நவமணி பத்திரிகையில் திரைக்குப் பின்னால் பத்தியில் ‘மாத்தறையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் ஜே.வி.பிக்கு ஆதரவு’ என்ற உபதலைப்பின் கீழ் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. இதில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் ஜே.வி.பி. தலைமைப் பீடத்தைச் சந்தித்ததாகவும் அதனைத் தொடர்ந்து ஜே.வி.பி.யினருக்கு ஆதரவு திரட்டுமுகமாக மாத்தறை பிரதேச முஸ்லிம் பிரமுகர்களைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச் செய்தி அடிப்படைகள் ஏதுமற்ற பொய்யான செய்தியாகும். எமது பிரதிநிதிகள் எவரும் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் ஜே.வி.பி. யினரையோ அல்லது வேறு எந்தக் கட்சியினரையோ சந்திக்கவுமிலை, நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுமில்லை. அந்த வகையில் மாத்தறையில் ஜே.வி.பி. யினரை சந்தித்ததாகவும் மாத்தறை மாவட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தேடி முஸ்லிம் பிரமுகர்களைச் சந்தித்ததாக வெளியான செய்திகள் அப்பட்டமான பொய்யாகும். இவ்வாறான பொய்யான செய்தியை எவ்வாறு உங்கள் பத்திரிகை பொறுப்பற்ற முறையில் பிரசுரித்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இவ்வாறான செய்திகளை எழுதுவதற்கு முன்னால் எம்மைத் தொடர்பு கொண்டு உண்மைத் தன்மையை ஏன் உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை? இது போன்ற பொய்யான செய்திகள் மூலம் எமது இயக்கம் பற்றிய பிழையான மனப்பதிவுகளை வேண்டும் என்றே உருவாக்குவதற்காகவே பிரசுரிக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கின்றது.

எனவே, இச்செய்தி தொடர்பான திருத்தத்தை சம முக்கியத்துவத்துடன் உங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பதுடன், எதிர்காலங்களில் எமது இயக்கம் தொடர்பான விடயங்களை எம்மோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டு பிரசுரிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

பொதுச்செயலாளர்,

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,

காத்தான்குடி.

Published by

Leave a comment