Engr. M. M. அப்துர் ரஹ்மான்,
கடற்கரை வீதி,
காத்தான்குடி.
30.03.2014
தலைவர்/ செயலாளர்,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.
அன்புடன் சம்மேளன நிருவாகத்தினருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு புத்தக வெளியீடு தொடர்பாக…
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். நமது மண்ணிலே எல்லா வகையிலும் முன்மாதிரியான ஒரு சமூகத் தலைவராக வாழ்ந்து மறைந்த மதிப்புக்குரிய அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிகளின் வாசிப்புக்காக எழுதிப் பதிய வேண்டிய சமூகக்கடமை இத்தனை காலமும் தொக்கி நின்றது.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை என்கின்ற உயர்ந்த மனிதனின் வாழ்க்கைக் குறிப்பு அவர் வாழ்ந்து மறைந்த மண்ணிலேயே அவர் உருவாக்கிய சம்மேளனத்தினாலேயே வெளியிடப்படுகின்றது என்ற செய்தி எல்லோரும் சந்தோஷப்படக் கூடிய ஒன்றே. ஆனால், இவ்வாறான ஒரு உத்தம நிகழ்வு எவ்வாறான நபர்களை அழைத்து நடாத்தப்பட்டது என்பது பெரும் வேதனையையும் கவலையையும் அளிக்கிறது.
ஏனெனில்……..
நாம் பெருமையோடு நினைவு கூறும் அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் அரசியலையும்இ சமூகப் பணியினையும் கனவான் தனமாகவும்இ முழுக்கமுழுக்க அல்லாஹ்வுக்குப் பயந்த மார்க்கக் கடமையாகவும் நிறைவேற்றினார். ஆனால் நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலர் அரசியல் என்ற பெயரில் அத்தனை அயோக்கியத் தனத்தையும் தில்லுமுல்லுகளையும் புரிந்தவர்கள், புரிந்து கொண்டிருப்பவர்கள்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் முஸ்லிம் அரசியலின் தனித்துவ அடையாளத்தை தூக்கி நிறுத்துவதற்கான அத்திவாரமிட்டவர். ஆனால், நீங்கள் அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலர் தமது அப்பட்டமான சுயநலத்துக்காக அந்தத் தனித்துவ அரசியல் சீரழிவதற்கு ஆரம்பக் காரணமாக அமைந்தவர்கள். அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் ‘மார்க்கத்தில் நடு நிலைமை இல்லை’ எனக்கூறி தௌஹீத் எனும் தூய ஈமானியக் கொள்கையைப் பாதுகாப்பதற்காக துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்பாடுபட்டவர்.
ஆனால், நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலர் அத்தனை மார்க்க விரோத சிந்தனைகளையும் தனது அற்பத்தனமான அரசியல் இலாபத்திற்காக கபடத்தனமாக வளர்த்து வருபவர்கள். அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ நமது பிரதேச முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக அர்ப்பணத்துடனும் தியாகத்துடனும் தொண்டாற்றியவர். ஆனால், நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலரோ தாம் வழங்கிய சத்திய வாக்குறுதியையும் மீறி தனது அரசியல் பதவியை பாது காத்துக் கொள்வதற்காக நமது பிரதேச மக்களின் ஒற்றுமையைச் சீரழித்து அதன்மூலம் கடந்த 25 வருடங்களாக அரசியல் ஆதாயம் பெற்று வருபவர்கள்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் காத்தான்குடி வங்கி ஒன்றினை பயங்கரவாதிகள் கொள்ளையடித்துச் சென்ற போது எந்தவொரு பதவியும் அதிகாரமும் இல்லாத நிலையிலும்கூட தனி மனிதனாக நின்று மக்களின் இழப்புக்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுத்தவர். நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலர் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் ஒன்றைத் தொடங்கி அதில் ஏழை மக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் பணத்தை முதலீடு செய்ய வைத்து அதே மக்கள் வழங்கிய பதவியைப் பயன்படுத்தி மக்களின் பணத்தை ஏப்பமிட்டவர்கள்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் சம்மேளனம் என்ற தாய் நிறுவனம் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதற்காக பல்வேறு வளங்களையும் அதற்குத் தேடிக்கொடுக்கப் பாடுபட்டவர். ஆனால், நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலர் சம்மேளனத்தினால் அமானிதமாக வைப்பீடு செய்யப்பட்ட பெருந்தொகை நிதி அநியாயமாக இழக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை என்ற மனிதரோஇ தான் பொதுப்பணி அல்லது அரசியல் பணியைச் செய்கின்றபோது பொது நிதியிலிருந்து ஒரு சதம் கூட தனது பொருளாதாரத்தில் சேர்ந்து விடக்கூடாதென்ற கண்டிப்பான கனவான் தனத்தோடு இருந்தவர். ஆனால், நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலரோ சமூகப் பணி என்ற பெயரிலும் அரசியலைப் பயன்படுத்தியும் கோடிகோடியாக மோசடியான முறையில் செல்வம் சேர்த்திருப்பவர்கள்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ தனது சமூக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தானோ தனது குடும்பமோ எவ்வித நன்மைகளையும் அடைந்து விடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தோடு வாழ்ந்து முடித்தவர். ஆனால், நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலரோ மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தி தானும் இலாபமடைந்து தனது குடும்பத்தவர்களும் தனிப்பட்ட இலாபங்களைப் பெறச் செய்திருப்பவர்கள்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ எச்சந்தர்ப்பத்திலும் உண்மை பேசி நீதிக்காக குரல்கொடுத்தவர். ஆனால், நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலரோ அற்ப சொற்ப அரசியல் சுய இலாபங்களுக்காக பொய்யும் புரட்டும் அவதூறுகளையும் கூறுவதற்குத் தயங்காதவர்கள். (உதாரணமாக இந்த நபரின் அரசியலுக்கு எதிராக சட்டத்தரணி அப்துல் ஜவாத் போன்றவர்களும் இன்னும் பலரும் நின்ற போது சந்தி சந்தியாக கூட்டம் போட்டும் அனாமதேய துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் அவர்களையும் அவரகளது குடும்பங்களையும் இழிவு படுத்தியவர்கள்.)
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்த காலத்திலும் கூட முஸ்லிம்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் உயிரையும் பணயம்வைத்து குரல் கொடுத்தவர். ஆனால், நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலரோ பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சமூகத்தின் நலன்களைத் தாரை வார்த்து காட்டிக் கொடுப்புக்களைச் செய்தவர்கள். (மிக அண்மைக்கால உதாரணமாக….. பள்ளிவாயல் ஒன்று பௌத்த தீவிர வாதிகளால் தாக்கப்பட்ட சமயம் முழு முஸ்லிம் சமூகமும் ஆழ்ந்த கவலையில் இருந்தவேளை ‘பள்ளிவாயலின் ஒரு தகரத்திற்குக்கூட எந்த ஒரு சேதமும் ஏற்பட வில்லை; எல்லாமே பொய்’ என ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கியவர்கள்)
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ பள்ளிவாயல் சொத்துக்களை பாதுகாப்பதில் மிகவும் உறுதியாகத் தொழில்பட்டவர். ஆனால், நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலரோ தனக்காகவும், தனது சகாக்களின் நன்மைக்காகவும் பள்ளிவாயல்களின் சொத்துக்களை கபளீகரம் செய்து கொண்டிருப்பவர்கள். அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ நாகரீக ஜனநாயக முறையில் மாற்றுக் கருத்துக்களை எதிர்கொண்டு அரசியல் புரிந்தவர். ஆனால், நீங்கள் விழாவுக்குஅழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலரோ மாற்றுக் கருத்துக்களை அடக்குவதற்காகவும் அரசியல் பதவிகளை வென்றெடுப்பதற்காகவும்தொடர்ச்சியான வன்முறைகளை மேற்கொண்டு வருவதோடு கொலை முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயங்காதவர்கள்.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களோ எமது இஸ்லாமிய மத கலாசார விடயங்களை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காமல் முன் மாதிரியாகத் திகழ்ந்தவர். ஆனால், நீங்கள் விழாவுக்கு அழைத்திருந்த பிரமுகவர்களில் ஒரு சிலரோ அடுத்தவர்களை சந்தோசப்படுத்தவேண்டும் என்பதற்காக சாமியார்களைகூட கைகூப்பி வணங்குதல் போன்ற மார்க்க விரோத செயல்களில் ஈடுபட தயங்காதவர்கள் என்பது மட்டுமன்றி அதற்காக இதுவரையில் எதுவித வருத்தமும் தெரிவிக்காதவர்கள்.
இப்படியாக ஒரு முன்மாதிரியான கனவானாகவும் சமூக இலட்சியத்திற்கான அர்ப்பணத்துடனும் மார்க்க வரையறை வழுவாதும் வாழ்ந்து மறைந்த ஒரு தலைவனின் வரலாற்று நூல் வெளியீட்டுக்கு இது போன்ற தில்லுமுல்லுகளும்இ நயவஞ்சகத்தனமும் நிறைந்த அரசியலை முன்னேடுப்பவர்களை அழைப்பதென்பது அந்த உன்னத மனிதரை அவமதிக்கும் செயலாகும் என நான் நம்புகின்றேன்.
இப்படியான ஒரு உயர்ந்த மனிதரை நினைவு கூறும் ஒரு நிகழ்வுக்கு அழைப்பதற்கு கொளரவமான, கனவான் தனமான, வாய்மை நிறைந்த மனிதர்களை உங்களால் ஏன் அடையாளம் காண முடியாமல் போனது என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த கனவானை நினைவு கூறுவதை விடவும் மேலே நான் விபரித்ததைப்போன்ற பிற்போக்குத் தனமான அரசியல்வாதிகளை அழைத்து அவர்களின் ஆசீர் வாதங்களை பெற்றுக்கொள்வதுதான் இங்கு முக்கியமான நோக்கமாக இருந்திருக்குமோ என எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.
அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்கள் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இது போன்ற மார்க்க விரோத தில்லுமுல்லு அரசியல் வாதிகளோடு எவ்வாறு நடந்து கொண்டிருப்பார் என்பதனை என்னை விட உங்களால் நன்றாக புரிந்து கொள்ளமுடியும். ஏனெனில் முகஸ்துதிக்காகவும் அற்ப அரசியல் அதிகாரங்களுக்காகவும் அநியாயக்கார அரசியல் வாதிகளுக்கு முன்பாக தலை வணங்குபவராக ஒருபோதும் அவர் இருந்ததில்லை. இதனை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளை ஒரு கணம் தள்ளி வைத்து விட்டு கடந்த 25 வருட அரசியல் வரலாற்றினை உங்கள் மனச்சாட்சியின் கண்ணூடாக திரும்பிப் பாருங்கள்.
‘அநியாயக்காரணைப் பார்த்து அநியாயக்காரன் என்று தைரியமாகச் சொல்லுங்கள்’ எனப்போதிக்கும் மார்க்கத்தின் கண்ணோட்டத்தில் நின்று நான் இங்கே சுட்டிக்காட்டிய அரசியல் வாதிகளின் வரலாற்றை கொஞ்சம் மீட்டிப்பாருங்கள். இந்த நிகழ்வுக்கு இவர்களைப் போன்ற பிரமுகர்களை அழைத்து முதன்மைப்படுத்துவது ஏற்புடையதுதானா என்பதனை உங்கள் மனச்சாட்சியே உங்களுக்குச் சொல்லும். ஏனெனில் என்னை விடவும் அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட்லெவ்வை அவர்கள் வாழ்ந்த சமூக வாழ்வு பற்றியும் இவ்விழாவுக்கு அழைக்கப்பட்ட அரசியல் வாதிகளின் வாழ்வும் வரலாறும் பற்றியும் நீங்கள் அதிகம் தெரிந்தவர்கள்.
இறுதியாக, அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை அவர்களால் உருவாக்கப்பட்டதென்ற பெருமையைக் கொண்ட சம்மேளன நிருவாகிகளாகிய உங்களுக்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டி நினைவு படுத்த விரும்புகிறேன். அதாவது, அஷ்ஷஹீத் அவர்கள் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா என்ற இந்த முக்கிய நிகழ்வுக்காகவென யாரை அழைத்து கௌரவித்தீர்களோ அவர்களில் சிலர் தமது அரசியல் காலத்தில் காத்தான்குடியிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் செய்து முடிக்கப்பட்ட பொதுக் கட்டடங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு தமது பெயர்களை பரவலாகச் சூட்டி பிரபல்யம் தேடியிருக்கிறார்கள். மாத்திரமன்றி தமது குடும்பத்தவர்கள் மற்றும் பிள்ளைகளின் பெயர்களைக்கூட அவற்றிற்குச் சூட்டி இருக்கின்றார்கள்.ஆனால் இந்த ஊரின் நேசத்திற்குரிய தலைவராக மதிக்கப்படும் அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை அவர்களின் பெயரை சூட்டி அழகு பார்க்கும் அளவிற்கு கடந்த 25 வருடத்தில் அவர்களுக்கு மனம் இருக்கவில்லை.
அவ்வாறானவர்களைத்தான் அஷ்ஷஹீத் அவர்களின் பெயரால் நடாத்தப்பட்ட முக்கிய நிகழ்வில் முக்கியத்துவப்படுத்தி புகழ் தேடிக்கொடுத்திருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விடும்புகிறேன். அத்தோடு இனிவரும் காலங்களிலாவது அஷ்ஷஹீத் அவர்களின் நாமத்தைப் பொருத்தமான ஒரு இடத்திற்கு சூட்டி கௌரவப்படுத்துகின்ற முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரு அப்பட்டமான தவறு நடக்கின்ற போது முடியுமான வகையில் அதனை சுட்டிக்காட் வேண்டும் என்ற ஒரு முஸ்லிமுக்கு இருக்கவேண்டிய அடிப்படை உணர்வின் காரணமாகவே இதனைச் சுட்டிக்காட்டுகிறேன்.
மேலும் இவ்விழாவில் குறித்த சில நபர்களுக்கு நீங்கள் கொடுத்த முக்கியத்துவத்தினைப் பார்க்கின்றபோது அஷ்ஷஹீத் அகமட் லெப்பை அவர்களும் இப்படியான ஒருவராகத்தான் வாழ்ந்திருப்பாரோ என்கின்ற பிழையான மனப்பதிவு நம் இளைய சந்ததியினருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையின் காரணமுமாகவுமே ஒரு பகிரங்கக் கடிதமாக இதனை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
‘முகஸ்துதியும் இணை வைத்தலே’ என்ற நபி மொழியினை இறுதியாக நினைவுபடுத்தி இதனை முடிக்கிறேன்.
குறிப்பு: சம்மேளனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சுனாமி மீழ்குடியேற்ற திட்டங்களிலும் கூட, இது போன்ற அரசியல்வாதிகள் மேற்கொள்ண்ட ஊழல் மோசடி நடவடிக்கைகளை விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்குமாறு கோரி ஏறத்தாழ மூன்றரை வருடங்களுக்கு முன்னால் ஒரு விரிவான கடிதத்தை அனுப்பியது மாத்திரமல்லாமல் இது பற்றிய மேலதிக தகவல்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் தருமாறும் கோரியிருந்தேன். அதற்கான பதிலினை நீங்கள் இதுவரை எனக்கு வழங்கவில்லை என்பதனையும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
நன்றியுடன்
இவ்வண்ணம்
………………………………….
M. M. அப்துர் ரஹ்மான்
பிரதிகள்: சமூக நிறுவனங்கள், தஃவா அமைப்புகள், ஊடகங்கள்.
![rahuman[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/rahuman1.jpg?w=150&h=122)
Leave a comment