காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகரும், முன்னாள் காத்தான்குடி பிரதேச சபையின் தவிசாளரும்,மூத்த அரசியல் வாதியும் ,சமூக சேவையாளரும் ,காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரின் தியாக வாழ்வையும் ,ஈடிணையற்ற பணிகளையும் நினைவு கூறும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வெளியிடும் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம். ஹாலித் ஜேபி தலைமையில் 28-03-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
இதன் போது அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூலின் முதற்பிரதி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அஷ்ஷேய்க் அப்துல்லாஹ் றஹ்மானி , பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ஆகியோரினால் நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் , பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது.
இங்கு நூல் நயவுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தினார்.
இதில் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் தொடர்பான நினைவுச் சொற்பொழிவை ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ,இந் நூல் ஆசிரியருமான கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹி நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயட் காலத் தலைவர் தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா பஹ்ஜி, காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை பீடத்தின் பீடாதிபதியுமான அஷ்ஷெய்க் எம் அலியார் றியாதி ,முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை, உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என். மூபீன், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் ஜேபி, அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் மும்தாஸ் மதனி, சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை, சம்மேளன உப தலைவர் சுபைர், செயலாளர் மௌலவி றமீஸ் ஜமாலி, பொருளாளர் அப்துல்லாஹ் உட்பட அதன் உறுப்பினர்கள், உலமாக்கள் முக்கியஸ்ரகள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் , ஊடகவியலாளர்கள் , ஊர் பிரமுகர்கள் , கலை இலக்கிய வாதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பு: மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்தப்பட்ட ஒரு சகோதரனை மீட்பதற்காக காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் பெரியார்களுடன் ஆலோசனை நடாத்தி இஷாத் தொழுகையையும் முடித்துக்கொண்டு வுழூவுடன் வீடு திரும்பும் வழியில் வன்முறையாளர்களின் துப்பாக்கி ரவையினால் சுடப்பட்டு ஷஹீதானார். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்) தனது இறுதி மூச்சுவரை அவர் பொது மக்களுக்காகவே வாழ்ந்தார். அன்றைய தினம் இஷா தொழுகையை நிறைவேற்றி அவர் இறையச்சத்துடன் அஷ்ஷஹீட் என்ற நாமத்துடன் வீர மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a reply to புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்m Cancel reply