காத்தான்குடி: ஆசன ஒதுக்கீடு செய்திருந்தும் குறித்த பயணிகளுக்கு ஆசனங்களை வழங்காததோடு இடை நடுவில் இறக்கிவிட்டுச் சென்ற சாரதியையும் நடத்துனரையும் பதவி நீக்கம் செய்ய கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கல்முனை – திருகோணமலை வழித்த தடத்தில் வழக்கமாக சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றிற்கு காத்தன்குடியில் ஆசனப் பதிவு நிலையத்தில் ஆசன ஒதுக்கீடு செய்திருந்த காத்தான்குயைச் சேர்ந்த பயணிகள் இருவருக்கு ஏறாவூர் வரை ஆசனம் வழங்கப்படாது நின்றவாறே பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
ஏறாவூரை நெருங்கியதும் நின்றவாறே பயணித்த காத்தான்குடியைச் சேர்ந்த இரு பயணிகளும் ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக தெரிவித்து ஆசனத்தை பெற்றுக் கொள்வதற்காக சாரதியிடம் பேரூந்தினை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
மேற்படி பயணிகளின் கோரிக்கையின்படி பேரூந்தை நிறுத்திய சாரதி அவர்களிருவரும் இறங்கியவுடன் இவர்களை ஏறாவூரிலேயே விட்டுச் சென்றுள்ளார்.
இவ்வாறு விட்டுச் செல்லப்பட்ட பயணிகள் இருவரும் வேறொரு பேரூந்தின் மூலம் திருகோணமலைக்கு சென்றதோடு கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர்.
பின்னர், இரு தரப்பினரையும் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு அதிகாரசபையின் பொது முகாமையாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
இரு தரப்பினரையும் விசாரித்த விசாரணை அதிகாரி பயணிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்டதோடு இந்த சம்வத்தில் தவறிழைத்த சாரதியையும் நடத்துனரையும் பதவி நீக்கம் செய்யுமாறு குறித்த பேரூந்து உரிமையாளருக்கு உத்தரவிட்டார் . அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற இடமளிக்கக் கூடாதென கண்டிப்பான ஆணையையும் பிறப்பித்தார்.
Published by

Leave a comment