வருடாந்தம் 6 இலட்சம் சவூதி நாட்டவர்கள் தொழில் சந்தையினுள் பிரவேசம் – திண்டாடுகிறது சவூதி அரசு

அபூஹக்-

Saudi-Job-fair--சவூதி: வருடாந்தம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்யும் 6 இலட்சம் சவூதி நாட்டவர்கள் தொழில் சந்தையினுள் பிரவேசிப்பதாகவும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் சவூதி அரசாங்கம் பாரிய சவால்களை எதிநோக்குவதாகவும் சிரேஷ்ட தொழில் அமைச்சு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஓவ்வொரு வருடமும் 330 000 இற்கும் அதிகமான சவூதி மாணவர்கள் பாடசாலைகளில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்கின்றனர் மற்றொரு அறிக்கையின்படி கிட்டத்தட்ட 318 000 சவூதி நாட்டவர்கள் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்கின்றனர் என மக்காவில் அமைந்துள்ள தொழில் அலுவலகத்தின் பணிப்பாளரான அப்துல் மொனெம் அல் ஷஹ்ரி தெரிவித்தார்.

இப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு தொழில்சார் கல்வி வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும் என ஏ.எல்.ஜே. சமூக முன் முயற்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் இப்றாஹீம் பாதாவூத் சுட்டிக்காட்டினார்.

அரப் நியூஸ் செய்திச் சேவையுடன் பேசிய அவர் ‘படித்துக் கொண்டிருக்கும்போதே வேலை செய்வதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது அவர்களிடையே தொழில் கலாச்சாரம் விருத்தியடையவும் சந்தைத் தேவைப்பாடுகளை அவர்கள் பூர்த்தி செய்து கொள்ளவும் உதவும். கம்பனிகள் அவர்களை தவணை அடிப்படையில் பணிக்கமர்த்தி தொழில்சார் பயிற்சிகளை வழங்க வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் துறைகளிலுள்ள மொத்த தொழிலாளர் படையில் 77 வீதமானோர் மூன்று பிராந்தியங்களையும் சேர்ந்தோராவர் அவர்களுள் 35 வீதத்தினை றியாத்தும், 21 வீதத்தினை கிழக்கு மாகாணமும், 19 வீதத்தினை மக்காவும் கொண்டுள்ளன.

சவூதி நாட்டவர்களின் அதிக சம்பள மட்டத்திற்கு மூல காரணம் அமைச்சினது சம்பளப் பாதுகாப்பு திட்டமாகும் என அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மாதந்தம் மூவாயிரம் சவூதி றியால்களை பெற்று வந்தோரின் சம்பளம் 109 000 தொடக்கம் 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.

Saudi-Job-fair--

Published by

Leave a comment