உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சர்வதேச தலையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியனவா? என்ற வாதப் பிரதிவாதங்கள் தற்போது உச்ச நிலைக்குச்சென்றிருக்கின்றன. இச்சூழ்நிலையில், தற்போது நாடு எதிர் நோக்கியிருக்கும் நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தற்காலிக வழிவகைகளைத் தேடுவதை விடுத்து பிரச்சினைகளின் அனைத்துப் பரிமாணங்களையும் கவனத்திற் கொண்டு முழுமையான நிரந்தரத் தீர்வினை நோக்கி நகர வேண்டியது ஒரு தேசிய கடமையாக மாறியிருக்கிறது.
இந்த வகையில், சமூகங்களிடையே மீள் இணக்கத்தையும் நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டியது அடிப்படைத் தேவையாக மாறியிருக்கிறது உண்மைகள் கண்டறியப்பட்டு பரஸ்பரம் தவறுகள் ஏற்றுக் கௌளப்பட்டு, பரஸ்பரம் மன்னிக்கக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டு அர்த்தபூர்ரவமான மீள் இணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கடந்த பல தசாப்தங்களாக நிலவி வரும் இன முரண்பாடுகளினால் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்கள் அனைத்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன.
வன்முறை, பயங்கரவாதம், படுகொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, சித்திரவதை, மனித உரிமை மீறல்கள், காணாமல் போதல், இனச் சுத்திகரிப்பு, சொத்துக்கள் அழிப்பு, ஆட்கடத்தல், சூறையாடல், கப்பம், நில அபகரிப்பு, நில ஆக்கிரமிப்பு மற்றும் வாழ்வாதார இழப்புகள் என இப்பாதிப்புகள் நீண்டு செல்கின்றன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள தற்போதைய நிலையில், இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதியும், நிவாரணமும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சமூக நீதியை நிலை நிறுத்தல் என்ற அனைவரினதும் கடமைப்பாட்டினது அடிப்படை அம்சமாக இது அமைந்துள்ளது.
அத்தோடு, இலங்கை தேசத்தில் இன முரண்பாடு என்பது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தோன்றிய, நீண்டகாலமாக நிலவிவரும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகும். அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க, அனைவரது அரசியல் அபிலாஷைகளையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வின் மூலமே இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்து, நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும். எனவே, அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய அனைத்து சமூகங்களினதும் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்யத்தக்க அர்த்த பூர்வமான தீர்வுமுயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அது போலவே வெளித்தலையீடுகளை கையாள்வதற்கான சமநிலையான புதிய அணுகு முறையொன்றும் அவசியப்படுகிறது. சுதந்திரத்தைத் தொடர்ந்து மாறி மாறி பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சீறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள், இன முரண்பாட்டுக்கான அரசியல் காரணிகளை உரிய காலத்தில் கவனத்தில் எடுக்கவில்லை. அவை உரிய முறையில் தீர்க்காமல் விட்டு வைக்கப்பட்டது. இந்நிலையே நாட்டை வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் கொடிய யுத்தத்திற்கும் இட்டுச் செல்ல வழி வகுத்தது.
உள்நாட்டில் நியாயமான தீர்வு அடையப்படாத நிலையில், உள்நாட்டுப் பொறிமுறைகளிலும் தீர்வு முயற்சிகளிலும் இருந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் படிப்படியாக தளரத் தொடங்கியது. இந்நிலை பிராந்திய அரசுகளினதும் சர்வதேச சமூகத்தினதும் தலயீடுகளுக்கு வழிகோலியது. இதற்கு கீழ்வருவனவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம்.
• 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம்
• தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள், 1990 இல் ஜெனீவாவிற்கு கொண்டு சென்ற மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகள்.
• 2002 இல் நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமும், அதனைத் தொடர்ந்த இடம்பெற்ற நிகழ்வுகளும்.
• 2007இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பகவதி தலைமையிலான மாண்புமிக்கோர் குழு ஏற்படுத்தப்பட்டமையும் பின்னர் அது கலைக்கப்பட்டமை.
• 2009 இல் ஐ.நா. செயாளர் நாயகம் பான் கி மூன் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கண்டியில் வெளியிட்ட கூட்டறிக்கை.
• 2011 இல் ஐ.நா. வினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட தாருஸ்மான் அறிக்கை
• 2012 முதல் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு கூட்டத் தொடர்களில் அமெரிக்காவினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பிரேரணைகள்.
• 2103 இல் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை மேற்கொண்ட இலங்கை விஜயம்.
எனவே, இலங்கையின் தேசிய பிரச்சினை விடயத்தில் சர்வதேச தலையீடுகள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகவே காணப்பட்டு வருவதோடு அதன் தாக்கமும் அளவும் படிப்படியாக அதிகரித்தே வந்திருக்கின்றன. இருப்பினும், அவை பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் எந்தவொரு தரப்பும் திருப்திப்படும்படியான விளைவுகளை இது வரை ஏற்படுத்தவில்லை. சர்வதேச தலையீடுகள் பற்றிய ஏனைய நாட்டு அனுபவங்களும் அவதானங்களும் கூட இதனையே நிரூபிக்கின்றன.
எனவேதான், கடந்த கால உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவங்களின் அடிப்படையில் சர்வதேச தலையீடுகளை கையாள்வதற்கான சமநிலையான புதிய அணுகுமுறை ஒன்று அவசியப்படுகிறது. மேலும், இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும், சமூகங்களிடையே மீள் இணக்கத்தைக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் மேற்கொண்ட உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது, மக்களும் சர்வதேச சமூகமும் படிப்படியாக நம்பிக்கை இழந்து வருகின்றனர். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் ஊடாக எட்டப்பட்ட அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகள் உதாசீனப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டது. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக பெறப்பட்ட பரிந்துரைகள் உரியமுறையில் அமுல் படுத்தப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையிலும் அரசியல் உறுதிப்பாட்டிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், சிறுபான்மையினர் மீதான நெருக்கு வாரங்களும், அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. இனங்களுக்கிடையிலான நல்லுறவைப் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டு வருகின்றமை நாட்டை நேசிக்கும் அனைவரையும் கவலை கொள்ளச் செய்திருக்கின்றது. மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் உரிய முறையில் நிலைநாட்டப்பட தவறும் நிலமை தொடர்வதானது தற்போதைய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு பிராந்திய அரசுகளினதும் சர்வதேச சமூகத்தினதும் தலையீடுகளை நியாயப்படுத்தக் கூடிய சூழ்நிலையை, மாறி மாறி ஆட்சி செய்த இந்த நாட்டின் அரசாங்கங்களே ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றமை துரதிஷ்டமானதாகும்.
எனவே, அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற நம்பகத் தன்மையுள்ள உள்நாட்டு தீர்வு பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு அதன் சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இத்தீர்வுப் பொறிமுறையின் மிக முக்கிய அம்சமாக அமைய வேண்டிய விசாரணை நடவடிக்கையானது யுத்தத்தின் இறுதிப் பகுதியோடு மாத்திரம் வரையறுக்கப்படாமல் பயங்கரவாத மற்றும் இன வன்முறை நடவடிக்கைகள் அனைத்தையும் உள்டக்கியதாக அமைவதோடு இச்சூழ்நிலைகளுக்கு வழிவகுத்த காரணிகளையும் விசாரித்து கண்டறிந்து தீர்வுகாணும் வகையிலும் முழுமையானதாக அமைதல் வேண்டும்.
மேற்சொன்ன பின்னணிகளின் அடிப்படையில் நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை காணும் வகையில் பின்வரும் விடயங்களை முன்மொழிவுகளாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்வைக்கிறது.
1. உண்மை கண்டறியப்பட்டு, தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரஸ்பர மன்னிப்புக்கான சூழ்நிலைகள ஏற்படுத்துவதன் மூலம் இனங்களுக்கிடையே மீள் இணக்கத்தைக் கட்டியெழுப்பி நிரந்தர சமாதானத்தை எட்டுதல்.
2. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் நீதியையும், நிவாரணத்தையும் பெற்றுக் கொடுத்தல்.
3. இந்நாட்டின் சகல இன மக்களும் தத்தமது மத கலாசாரதனித்துவங்களைப்பேணி அவர்களுக்கு உரித்தான சட்ட பூர்வ உரிமைகள் யாவற்றையும் சுதந்திரமாக அனுபவிப்பதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக்கப்படுவதோடு அதனை உறுதிசெய்யும் வகையில் இந்நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாரபட்சங்கள் ஏதுமின்றி அமுல் செய்யப்படல்.
4. தீர்வுக்கான சகல நடவடிக்கைகளிலும் பொறிமுறைகளிலும் அனைத்து சமூகங்களினதும் நலன்கள், அபிலாஷைகள் நியாயமான அடிப்படையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
5. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தீரக்கக் கூடிய, அனைவரும் ஏற்றுத் கொள்ளத்தக்க நிரந்தர அரசியல் தீர்வொன்றினைப் குறித்த கால வரையறைக்குள் ஏற்படுத்துதல்.
6. சர்வதேச தலையீடுகளைத் தவிர்த்து நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் தேசிய நலனையும் பாதுகாக்கக் கூடிய வகையில் உள்நாட்டுப் பொறிமுறைகளை துரிதமாக அமுல்படுத்தலும், தேவையேற்படும் போது அவற்றை சாத்தியப்படுத்துவதற்கு பொருத்தமானசர்வதேச உதவிகளை பெற்றுக் கொள்ளுதலும். நாட்டு மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பவும், அவசியமற்ற சர்வதேச தலையீட்டைத் தவிர்த்து நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கும் இத்தகைய அணுகுமுறையே மிகச் சரியானது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நம்புகின்றது.
Published by
![pmgg-cap[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/pmgg-cap1.jpg?w=150&h=102)
Leave a comment