ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரட்டை கொள்கையினை கடைபிடிக்கும் ஒரு கட்சி

slmc[1]இர்ஷாத் றஹ்மத்துல்லா 

கட்சிகள் என்பது மதம் அல்ல, அதன் சட்டதிட்டங்கள் ஆறறிவு கொண்ட மனிதனால் இயற்றப்பட்டது. மனிதன் என்பது தவறையும், தடுமாற்றத்தையும் கொண்ட நிலையற்றவன். அவனுள் பல்வேறு குறைகளை, சில நிறைகளையும் காணலாம். இந்தநிலையில் மனிதன் வாழுகின்ற இந்த பூமியில் சில விடயங்களை அமைப்பு ரீதியாக பெற்றெடுப்பதற்கே இயக்கங்களும், கட்சிகளும் உருவாகின. இலங்கை தேசத்தை பொறுத்தவரையில் பலக்கட்சிகள் தமது அரசியல் சித்தாந்தங்களையும், மக்கள் நலன் குறித்த பிரக்ஞ்சைகளையும் அவ்வப்போது வெளியிட்டுவருகின்றன.

இதில் பிரதான கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் என்றும் தமது சமூக பெயர்களைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் நீரோட்டத்தில் ஆட்சிகளை தீர்மாணிக்கும் கட்சியாக மர்ஹூம் அஷ்ரப் உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்துவந்துள்ளது. முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அரசியல் ரீதியான சக்தியாகவும், நாட்டின் முஸ்லிம்கள் தொடர்பில் உறுதிமிக்கதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடம் பதித்து கட்சிமாக நடைபோற்றுவந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றங்களும், காட்டிக் கொடுப்புக்களும் தாண்டவ மாடியதில் பல கட்சிகள் தமது பலத்தை இழக்கலாயின. அப்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்த்துக்கு முட்டுக்கொடுத்து பாதுகாத்தே வந்துள்ளது.. இதன் மூலம் தமது பேரம் பேசும் சக்தியினை தக்க வைத்துக் கொண்ட வரலாற்றை காணமுடிந்தது.

அண்மையக்காலமாக அரசியலில் போட்டா போட்டித் தன்மை மற்றும் உரிமை தொடர்பிலான பிரச்சினைகள் தலைத்தோங்க ஆரம்பித்தது. கட்சிகளா அல்லது தனிமனித செல்வாக்குகளா? என்ற கேள்விகள் எழ ஆரம்பித்தன. இதற்கு பதில் தேடுவது முஸ்லிம் சமூகம் சார்ந்த புத்தி ஜீவிகளின் பொறுப்பாகும். இது ஒரு புறமிருக்க முஸ்லிம்களுக்கு அரசாங்கம் இழைக்கும் அநீதிகள் தொடர்பில் மட்டும் குரல் எழுப்பும் நோக்கில் செயற்படும் கட்சி என்றும், முஸ்லிம்களுக்கு அரசாங்கமும் எதிர்கட்சிகளும் இழைக்கும் அநியாயம் தொ்டர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் தம்மை அரப்பணம் செய்யும் கட்சி என்றும் இரு வேறு பிரிவுகளாக நோக்க வேண்டியுள்ளது.

இன்றைய ஆட்சியில் அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்று மூன்று முஸ்லிம் தலைமைகளை கொண்ட கட்சிகள் இருந்த போதும், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலனா தேசிய காங்கிரஸ் என்பது தேசிய பிரச்சினை தொடர்பில் ஆர்வமில்லாத தமது மாவட்ட அரசியல் பலத்தை தக்க வைத்துக் கொண்டு அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டு செயற்படும் கட்சியானதால் இது தொடர்பில் அதிகம் பேசுவதில் பெறுமானமில்லையென்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எதிர் மறையாக அரசாங்கத்துக்குள் தமது பிரதி நிதிகளை இணைத்துக்கொண்டு அமைச்சுப் பதவியுள்ளிட்ட ஏனைய சலுகைகனை பெற்றுக்கொண்டு பயணிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமை தலைவராக கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரட்டை கொள்கையினை கடைபிடிக்கும் ஒரு கட்சி என்பதை நான் சொல்லி வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை. கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு கிழக்கின் ஆட்சி தொடர்பில் அதிகம் அக்கறைகொண்டு செயற்படுகின்றதை காணலாம்.

அன்று கிழக்கு மாகாண சபையினை தமிழ் தேசிய கூட்டைமைப்பு வெற்றி பெற்றிருந்தால் இன்று கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி இருந்திருக்காது என்பதை புரிந்து கொண்டு தமது தலைமைத்துவத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம், இன்றும் அந்த கிழக்கினை தமது ஆதிக்கத்திலேயெ வைத்துள்ளது. என்பது உண்மை, தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிராக பேசப்படும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் காதுகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது என்பது யாவரும் அறிந்த உண்மை. அரசுக்கு தேவை கிழக்கின் ஆட்சி அரசாங்கத்திடமோ அல்லது அதன் சார் உடன்பாடுகள் கொண்ட கட்சிகளினாலேயே நிர்வாகிக்கப்படுவதையே விரும்புகின்றமையாகும். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறலாம்.

இதே வேளை அரசாங்கத்துடன் இணைந்துள்ள மற்றுமொரு கட்சி தான் அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை பொருத்த வரையில் கிழக்கு மாகாண சபையில் 3 உறுப்பினர்களையும், வடக்கு மாகாண சபையில் 3 உறுப்பினர்களையும், வடக்கிலும் கிழக்கிலும் பல நகர, பிரதேச சபைகளின் தலைமைத்துவத்தையும், 61 உறுப்பினர்களையும் கொண்டு ஒரு பலம் வாய்ந்த சிறுபான்மை முஸ்லிம் மற்றும் பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்காகவும் வள்ளமையினை கொண்டுள்ளதை காணமுடிகின்றது. அரசாங்கத்தில் பலம் பொருந்திய அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு என்பன அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம், கட்சியின் செல்வாக்கு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி வேகம் என்பது அதமன் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தனிப்பட்ட பங்களிப்புடனேயே மெற்கொள்ளப்பட்டது என்பது யதார்த்தமாகும். இந்த கட்சியினை வளர்ப்பதன் மூலம் அரசாங்கத்துக்குள் இருந்து முஸ்லிம்களுக்கு வருகின்ற சதிகளையும், அதே போல் எதிர் கட்சிகளும், இனவாத கட்சிகளும், மத வாதிகளினாலும் மேற்கொள்ளப்படும் சதிகளுக்கு எதிராக போராடக் கூடிய குரல் எழுப்பக் கூடிய மனதைரியத்தை கொண்டுள்ளமையினை கடந்த கால செயற்பாடுகள் மூலம் புடம் போட்டுக் காட்டியுள்ளது.

வடக்கிலும் அதற்கு வெளியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக போக்குகளும், நகர்வுகளும் என்றும் இல்லாதவாறு ததைதுாக்கியுள்ள இந்த காலக்கட்டத்தில் மக்கள் தீர்ப்பு தொடர்பில் அதிகமாக பேச்சுக்களும் இடம் பெறுகின்றன. இதனை உராயந்து பார்க்கும், அல்லது அடுத்து பொது மற்றும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த எதிர்கால தொடர்பில் ஒரு போஸ்ட்மோட்டம் ( பிரேத பரிசோதனையின்) வெள்ளோட்டமாகவே மேல் மாகாண சபை தேர்தல் அமைந்துள்ளது.

இந்த தேர்தல் கலத்தில் ஜொலிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு முஜிபுர் ரஹ்மான் மற்றும் பைரூஸ் ஹாஜியாரினால் மட்டுமே தீர்மாணிக்கப்பட போகின்றதா. அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரங்களாக பேசப்படும், அப்துல் ஹை, அர்ஷத் நிசாம்தீன் அகியோரினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுவிடுமா? அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றி நாயகர்காளக பார்க்கப்படும் முகம்மத் பாயிஸ், நவாஸ் முஸ்தபா ஆகியோரினால் வெற்றி கொள்ளப்படுமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் மத்திய ஆட்சியிலும் இந்த வெற்றிகள் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு நகர்வாகவே ஆய்வாளர்கள் கூர்ந்து அவதானித்து வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் இடம் பெறும் மேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம்கள் யாரை ஆதரிக்க வேண்டும்? ஏன் ஆதரிக்க வேண்டும்? இதன் மூலம் எமது எதிர்கால நன்மைகள் என்பன? தொடர்பிலும் அசட்டுத்தனமாக எம்மால் இருந்து விட முடியாது. எந்தக் கட்சி உண்மையாகவும், மக்கள் நலனை முதன்மைபடுத்தி செயற்படுகின்றதோ அந்தக் கட்சியினை வாழச் செய்வது காலத்தின் தேவையாகும், பெருமைக்கு மாவிடிக்க முடியாது என்ற பழமொழிக் கொப்ப காலகாலம் நான் வாக்களித்து வந்துள்ளேன். இந்தக் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் நான் முர்த்ததாகிவிடுவேன். இவருக்கு வாக்களிக்காவிட்டால் முகம் காட்ட முடியாது என்பன போன்ற பொருத்தமற்ற கருத்துக்களுக்கும் இபேச்சுக்களுக்கும் இடம் கொடுப்பதா, அல்லது உரிமை, யதார்த்தம், அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டம் என்பவை தொடர்பில் தீர்மாணம் எடுப்பதா என்பது தான் எமது கண் முன் தோற்றுவனவாகும்.

எது எவ்வாறாக இருந்த போதும் இறுதி தீர்மானத்தினை உடனடியாக மேல் மாகாண முஸ்லிம் வாக்காளர்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த தீர்மானத்தை எடுக்காவிட்டாலும் எப்போதும் எமது சமூகத்திற்கு விமோசனம் இல்லை என்ற உண்மையினை புரிந்து கொள்ள வேண்டும். எமக்கான அரசியல் பலம் எமது கைகளில் இருந்து நழுவி பெரும்பான்மை தலைமைகளின் கீழ் செல்லும் எனில் அவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்கும், அற்ப சொற்ப சலுகைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக கொழும்பு சமூகம் மாறிவிடும். எதிர்கால சமூகத்தின் விமோசனம், விடிவு, தேவை தொடர்பில் எம்முடன் நெருக்கமாக பணியாற்றும் கட்சிகளுக்கு ஆதரவளிப்பதும் தலை நகரில் அரசியல் அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம், வடக்கிலும், அதற்கு வெளியிலும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை கொழும்பிலும் எமது சமூகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்கள் மற்றும் கழுத்தறுப்புக்கள் என்பனவற்றினை வெளிப்படுத்தி அவரகளது முகத் திரையினை கிழித்தெறியும் புதிய அரசியல் கலாசாரத்தின் தலைமைத்துவத்துக்கு எமது பங்களிப்பின வழங்குவதே சாலச்சிறந்ததாகும்.

Published by

Leave a comment