பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது நிதிகளைக் கையாளும் விடயத்தினை அர்த்தபூர்வமாகவும் அர்ப்பணத்துடனும் மேற்கொள்வதற்கான பிரேரணை

safeel naleemiPMGG ஊடகப்பிரிவு

ALM. ஸபீல் நளீமி
நகர சபை உறுப்பினர்
சுயேட்சைக் குழு 01
நகர சபை
காத்தான்குடி
17.03.2014

தவிசாளர்
நகர சபை
காத்தான்குடி

பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது நிதிகளைக் கையாளும் விடயத்தினை அர்த்தபூர்வமாகவும் அர்ப்பணத்துடனும் மேற்கொள்வதற்கான பிரேரணை

உள்ளுராட்சி மன்றக் கட்டமைப்பிற்குள் வரும் பிரதேச / நகர / மாநகர சபைகளின் செயற்பாடுகளுள் மிக முக்கியமானதாக கருதப்படுவது, பொதுச் சொத்துக்களின் முகாமைத்துவமும் நிதி முகாமைத்துவமுமாகும். உள்ளுராட்சி சபைகளுக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் ஏனைய அசையாச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய அதே நேரம் நிதி முகாமைத்துவம் மற்றும் ஏனைய விடயங்களிலும் பொறுப்புணர்வுடன் தீவிர கவனம் செலுத்தி வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வதும் மக்கள் பிரதிநிதிகளான நமது தலையாய கடமையாகும்.

கடந்த 02.03.2014ம் திகதி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது தேசிய மாநாட்டை நடாத்துவதற்காக காத்தான்குடி ஹிஸ்புள்ளா மண்டபத்தின் அனுமதியைப் பெற்று சகல ஆயத்தங்களையும் பூர்த்தி செய்திருந்த இறுதி நேரத்தில், ஒரு அநாமதேய துன்டுப் பிரசுரத்தினைக் காரணம் காட்டி அரச சொத்துக்களை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கில் நகர சபையின் பிரதித் தவிசாளரினால் மண்டபத்திற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டதை தாங்கள் அறிவீர்கள்.

இந்நாட்டில் கடந்த 30 வருட காலம் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்த காவல் துறையினரைக் கொண்ட காத்தான்குடி பொலிஸ் நிலையமும் அத்தோடு இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களும் அரச சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு பக்கபலமாக இருக்கின்ற நிலையில், அவர்களது அர்ப்பனிப்பைக் கொச்சைப் படுத்தும் வகையில் ஒரு அநாமதேய துண்டுப் பிரசுரத்திற்குப் பயந்து காத்தான்குடி நகர சபை நிர்வாகமானது இம்மாநாட்டு மண்டபத்தின் அனுமதியை இரத்துச் செய்த விடயமானது ஆச்சர்யமான ஒன்றாகும். முழுமையான அரச பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்ற நிலையில் இது போன்ற சாதாரண சூழ்நிலைகளில் கூட அரச சொத்துக்களைப் பாதுகாக்க முடியாத நிலையிலேயே நமது நகர சபை நிர்வாகம் இருக்கிறது என்பதனையே இது நிரூபிக்கின்றது என்பதோடு இது நாம் எல்லோரும் கவலைப்பட வேண்டிய ஒரு விடயமுமாகும்.

எவ்வாறெனினும், அரச சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற காத்தான்குடி நகர சபை நிர்வாகத்தின் எண்ணம் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஆனால் பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பது வெறுமனே கட்டிடங்களை மாத்திரம் பாதுகாத்தல் என்ற விடயத்தோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட முடியாததாகும். மாறாக நகர சபையின் வருமான, செலவீன முகாமைத்துவம், அபிவிருத்தி நிதி முகாமைத்துவம் போன்ற பல்வேறு நிதி நடவடிக்கைகளில் நூறு வீதம் பொறுப்புணர்வுடனும், மற்றும் வெளிப்படைத்தன்மையாகவும் அத்தோடு நூறு வீதம் மக்களின் நலன்களை மையப்படுத்தி உறுதிப்படுத்துவதாகவும் அது அமைதல் வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சபையினது நிர்வாக கட்டமைப்புக்கள் பயன்படுத்தப்படுவதோடு அது நூறு வீத வெளிப்படைத்தன்மையினையும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரினதும் சமமான பங்குபற்றுதலினை உறுதி செய்வதாகவும் இருத்தல் வேண்டும். அத்தோடு சபை உறுப்பினர்கள் ஒவ்வெருவரும் அந்த நோக்கங்களை நிறைவு செய்வதற்கான தமது உறுதிப்பாட்டையும், அர்ப்பணத்தையும் வெளிப்படுத்தியு அதனை நடவடிக்கைகளில் காட்டவும் முன்வர வேண்டும்.

இந்த வகையில் நோக்கும்போது பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல் என்ற விடயத்தில் நகர சபை நிர்வாகம் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையாகவும் தனது கடமையினைச் செய்யவில்லை என்பதனையே எமது கடந்த கால அவதானங்களும் அனுபவங்களும் நிரூபிக்கின்றன. ஏறத்தாழ கடந்த மூன்று வருட காலத்திலும் நடாத்தப்பட்ட சபைக் கூட்டங்களில் நாம் இதனை ஆதாரபூர்வமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியும், நிரூபித்தும் வந்திருக்கின்றோம்.

நகர சபையின் நிதி நடவடிக்கைகளில் நாம் அவதானித்த மோசடிகளையும், குளறுபடிகளையும் சுட்டிக்காட்டியதன் காரணமாக எமது உறுப்பினர்கள் சகல நிலையியற் குழுக்களிலிருந்தும் விலக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், அவ்வாறு விலக்கப்பட வேண்டும் என்ற சபைத் தீர்மானங்களும் கூட மோசடியான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதனையும் இச்சந்தர்ப்பத்திலும் சுட்டிக்காட்டி நினைவு படுத்தவிரும்புகின்றோம். இந்நிலையில் பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல் என்ற விடயத்தை அர்த்தபூர்வமாக நிறைவேற்றும் முகமாகவும், அதன் மூலம் எஞ்சியிருக்கும் சபையின் பதவிக் காலத்திலாவது நகர சபையின் நம்பகத்தன்மையையும், நன்மதிப்பையும் நிலை நிறுத்துவதற்காகவும் பின்வரும் விடயங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை நாம் இச்சபையில் முன்வைக்கின்றோம்.

பொதுச் சொத்துக்களை அல்லது பொது நிதியினை தனிப்பட்ட இலாபம் ஈட்டும் வகையிலோ அல்லது சொந்த நலன்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை நிறைவு செய்யும் வகையிலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கையாளவில்லை என்றும்இ இனிவரும் காலங்களிலும் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என்றும் இறைவன் மீது ஆணையிட்டுக் கூறும் சத்தியப் பிரமாணம் ஒன்றை நகர சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களும் இறையில்லத்தில் மக்களின் முன்பாகச் செய்து கொள்ள வேண்டும். இந்நிகழ்வு தொடர்பான முன்னறிவித்தல் காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் வாழும் சகல மக்களுக்கும் முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும்.

பொதுச் சொத்துக்களையும், பொது நிதியினையும் கையாளும் விடயங்களில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புக்கூறலையும்இ கண்காணிப்பையும் உறுதி செய்யும் வகையில் நிதிக் குழுஇ கொள்வனவுக் குழு மற்றும் கேள்விச் சபைகள் என்பன உள்ளிட்ட சகல குழுக்களிலும் எமது சுயேட்சைக்குழு 1 இன் உறுப்பினர்கள் மீண்டும் உள்வாங்கப்படல் வேண்டும் இதன்மூலம் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் நகரசபை நிர்வாகம் கொண்டுள்ள உறுதிப்பாடு மேலும் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும்.

காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் முறைகேடுகளும்இ மோசடிகளும் நடைபெறுகிறது என்ற பரவலான அவதானங்களும், குற்றச்சாட்டுகளும் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டே வருகின்றன. இதுவரை செய்து முடிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளின் தரமும், பயன்பாடும் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதாகவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அமைந்தும் இருக்கின்றன. இது தொடர்பான எமது அவதானங்களையும், கருத்துக்களையும் ஆதாரபூர்வமாக பல்வேறு நகர சபைக் கூட்டங்களிலும் நாம் சுட்டிக்காட்டியும் வந்துள்ளோம்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை உள்வாங்கி ஆராய்ந்து உண்மை நிலையினைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது பொது நிதியினையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இதுவரை எமது பிரதேசத்தில் அமுல்படுத்தப்படவில்லை என்பது பெரும் துரதிஸ்டமும் குறைபாடுமாகும்.

எனவே இது போன்ற ஊழல், மோசடி மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை உடனுக்குடன் விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சுயாதீனமான பொறிமுறை ஒன்றினை நகரசபை நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்வதானது, நமது நகர சபையின் நம்பகத்தன்மையினையும் வெளிப்படைத்தன்மையினையும் கணிசமான அளவு மேம்படுத்தும் என்பதோடு மக்களுக்குப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றும் விடயத்தில் முழு நாட்டுக்கும் ஏற்ற முன்மாதிரியாகவும் அது அமையும்.

எனவே எமது பிரதேசத்திலுள்ள பொதுச்சொத்துக்களைப் பாதுகாத்தல் என்ற விடயத்தினை இச்சபையின் மக்கள் பிரதிநிதிகளான நாம் அனைவரும் அர்த்தபூர்வமாக அமுலாக்கம் செய்து நமது நகர சபையின் நன்மதிப்பினையும் மேம்படுத்தி நம் நாட்டுக்கும் முன்மாதிரியான நடவடிக்கையாகவும் அமையும் வகையில் இந்தப் பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றுமாறு தவிசாளர் உதவித் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி
இவ்வண்ணம்

ALM. ஸபீல் நளீமி
நகர சபை உறுப்பினர்
சுயேட்சைக்குழு இல: 1

பிரதிகள் :

உதவித் தவிசாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள்
உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு

Published by

One response to “பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது நிதிகளைக் கையாளும் விடயத்தினை அர்த்தபூர்வமாகவும் அர்ப்பணத்துடனும் மேற்கொள்வதற்கான பிரேரணை”

  1. U N H A B I T A T.?.?……..??.?………..

Leave a reply to mohmedrislaam Cancel reply