காத்தான்குடி: பாடசாலைக் கல்வியினைத் தொடர்வதற்கு அடித்தளமாகவும் ஆணிவேராக இருப்பது முன்பள்ளி கற்கைகளே என்றால் அது மிகையாகாது. முழுமையான கல்வி என்பது ஏட்டுக் கல்வியுடன் விளையாட்டு, கலை மற்றும் சுற்றுலா போன்ற அம்சங்களும் அதில் அடங்கும். அந்த வகையில் காத்தான்குடியில் இயங்குகின்ற பல முன்பள்ளிகள் விளையாட்டு என்கின்ற அம்சத்தினை தவிர்த்து கலை நிகழ்ச்சிகளை மாத்திரம் மேடையேற்றுகின்றன.
பாலர் சுற்றுலா என்று வரும்போது அத்தனை முன்பள்ளிகளும் ஏற்பாடு செய்து மாணவர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளன. இது உண்மையிலேயே மாணவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், அண்மைக் காலமாக எமதூர் முன்பள்ளிகளின் சுற்றுலாச் செயற்பாடு மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கின்றதா? அல்லது சோர்வினை ஏற்படுத்துகின்றதா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
(இந்த பந்தியை எழுதி முடித்த தருணத்தில்தான் மில்லத் பாலர் பாடசாலை சிறுவர்கள் சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது. அந்த சுற்றுலாவிற்கு எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் சென்றிருந்தனர். எனவே, அந்த சுற்றுலா சம்பந்தமான எனது நிலைபாடு என்னவாக இருந்தது என்ற விபரங்களை வாசகர்களோடு முதலில் பகிர்ந்து கொண்டு பொதுவான விடயங்களை ஆராயலாம் என நினைக்கின்றேன்.)
மில்லத் பாலர் பாடசாலையின் சுற்றுலா சம்பந்தமான கூட்டம் ஒன்றிற்கு சென்று வந்த எனது மனைவி இம்முறை கண்டி நகருக்குச் செல்லவிருப்பதாக சொன்னார். புhலர்களைப் பொறுத்தவரை கண்டி மாநகரம் பொருத்தமற்ற ஒன்று என்று மனைவியிடம் சொன்னவாறு அந்த பாடசாலை நிருவாகத்தில் எனக்கு தெரிந்த ஒரே ஒருவர் என்ற வகையில் ‘பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன’த்தின் நிருவாகத்தில் முக்கிய பங்கு வகிப்பவரும் நல்லாட்சிக்ன மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினருமான ‘ஹில்மி’ என்பவரைத் தொடர்பு கொண்டு கேட்டேன்.
‘கண்டி செல்வதற்கு எந்த பெற்றோரும் மறுப்பு தெரிவிக்கவில்லை (பெண்கள் மாத்திரமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்). அதனால்தான் அந்த முடிவை எடுத்தோம்.’ ஏன்று சொன்னார். அதற்கு நான் அவரிடத்தில் ‘தற்போது ஒரு பெற்றார் என்ற ரீதியில் நான் மறுப்புத் தெரிவிக்கிறேன் இப்போது உங்கள் நிலைபாடு என்ன’ என்று கேட்டேன்.
மீண்டும் அவர் ‘நிர்வாகத்தில் நான் மாத்திரம் இல்லை. மற்றவர்களும் இருக்கிறார்கள் நீங்கள் விரும்பாவிட்டால் உங்கள் பிள்ளையை அனுப்பாமல் நிறுத்திக் கொள்ளமுடியும்’ என்று அற்பத்தனமான பதில் ஒன்றை சொல்லிவிட்டு மீண்டும் அவர் ‘தற்போது நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள் போல் தெரிகின்றது. எனவே நான் பிறகு அழைக்கிறேன்’ என்று தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
அவரது பதிலிலிருந்தே இது நிருவாகத்தின் உறுதியான முடிவுதான் என்பதை புரிந்து கொண்டேன். இருந்தபோதும் இது சம்பந்தமாக நிர்வாகத்திடம் எழுத்து மூலமாக விளக்கம் கேட்பதென முடிவு செய்தேன் அதன்படி 19.02.2014 ம் தேதி இடப்பட்ட பின்வரும் கடிதம் ஒன்றை நிருவாகத்திற்கு அனுப்பியிருந்தேன். (கணணி பதிப்புச் செய்யப்பட்ட அக்கடிதத்தினை இதனுடன் இணைத்துள்ளேன்).
19/02/2014.
From:
A.Mohamed Faizer
7/7, Saihul Falah road,
Kattankudy-03.Via:
The PrincipalTo :
The President,
Milleth Nursery,
Kattankudy.பாலர் கல்விச் சுற்றுலா சம்பந்தமான முறைப்பாடு
மேற்படி தங்கள் நிர்வாகத்தில் இயங்கும் மில்லத் பாலர் பாடசாலையில் 2ம் ஆண்டில் எனது மகள் M.F. றிபா அமான் கல்வி கற்று வருகின்றார். கடந்த ஆண்டு உங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாலர் கல்விச் சுற்றுலாவிற்கு ‘பாலூட்டும் கைக்குழந்தை’ ஒன்று இருந்த காரணத்தினால் எனது மகளை அனுப்ப முடியவில்லை.
அதனால் அவர் சிறு மன உளைச்சலுக்குள்ளானதை என்னால் அவதானிக்க கூடியதாக இருந்தது. எனவே, இம்முறை பாலர் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யும் போது கண்டிப்பாக அனுப்பி வைப்பதாக அவரிடம் உறுதியளித்திருக்கின்றேன்.
ஆனால், கடந்த 18.02.2014 ம் தேதிய தங்கள் நிருவாக தீர்மானத்தின்படி இம் முறை கண்டி மாநகருக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லவிருப்பதாக அறிகிறேன். ஒரு பொறுப்புள்ள தகப்பன் என்ற வகையில் தங்கள் தீர்மானம் சம்பந்தமாக சில விடயங்களை உங்களுடன் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
கண்டி மாநகரத்தைப் பொறுத்தவரை தளதா மாளிகை, தெப்பக்குளம், பல்கலைக் கழகம் மற்றும் தாவரவியல் பூங்கா என்பவைதான் பிரதான சுற்றுலாத் தளங்களாகும். இவை அனைத்துமே வளர்ந்த மாணவர்களுக்குத்தான் பொருத்தமான தளங்களாக காணப்படுகின்றன.
எனவே, கண்டி மாநகரென்பது 5 வயது மாணவர்களுக்குரிய பொருத்தமான சுற்றுலாத்தளம் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும். அது மட்டுமல்லாது வெகு தூரப் பயணம் என்பதால் நள்ளிரவுவரை தொடரப் போகும் இப்பிரயாணத்திற்கு கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களின் சிரமங்களையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதோடு தகப்பன்மார்களை அனுமதிப்பதில்லை என்ற தங்கள் நிர்வாகத்தின் உறுதிமிக்க முடிவில் மாற்றம் இல்லை எனும்போது தூரப் பயணங்களை தவிர்ப்பதுதான் அறிவுடைமையாக இருக்கும் என்பதும் என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.
எனவே, ஒரு பொறுப்புள்ள தகப்பன் என்ற வகையில் எனது வேண்டுகோள் என்னவென்றால்,
1. தெரிவு செய்துள்ள சுற்றுலாத்தளத்தை சிறார்களின் உளவியல் தன்மையினைக் கருத்திற்கொண்டு கிழக்குமாகாணத்திற்குள் ஒரு பொருத்தமான இடத்தை தெரிவு செய்யுமாறும்.
2. அல்லது, கண்டி போன்ற தூர பிரதேசங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதில் நிர்வாகம் உறுதியாகவிருந்தால் விருப்பப்படும் தகப்பன்மாரையும் உடன் அழைத்துச் செல்வது பற்றி பரிசீலிக்குமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
மீண்டும் ஒரு முறை எனது பிள்ளையினை சுற்றுலாவுக்கு அனுப்பாமல் அவரை மன உளைச்சலுக்குள்ளாக்குவதற்கு நான் விரும்பவில்லை.
எனவே, இந்த விடயத்தில் ஒரு தகப்பன் என்ற வகையில் எனது வேண்டுகோள்களைப் பரிசீலித்து ஒரு பொறுப்புமிக்க நிர்வாகம் என்ற அடிப்படையில் இந்த பாலர் கல்விச் சுற்றுலா சம்பந்தமான தங்கள் தீர்மானங்களை மீள் பரிசீலனை செய்து விரைவில் எனக்கு அது பற்றிய இறுதி முடிவனை அறிவிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
இப்படிக்கு
உண்மையுள்ள
A.Mohamed Faizer.மேற்படி எனது கடிதத்திற்கு பதில் கடிதமாக கடந்த 03.03.2014 என்று திகதியிடப்பட்ட பின்வரும் பதில் கடிதம் ஒன்று நிருவாகத்தினரால் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
மேற்படி அவர்களின் பதில் கடிதத்தை பெற்றுக் கொண்ட நான் மிகவும் மனப் போராட்டத்தின் பின் எனது மகளின் உளவியல்தாக்கத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இச்சுற்றுலாவில் இணைந்து செல்வதற்கு அவருடைய பெயரையும் பதிவு செய்து கொண்டேன்.
இதன் பிறகு சுற்றுலா செல்லும் மாணவர்களின் பெற்றாருக்கு மாத்திரம் ஒரு ஒன்றுகூடலை கடந்த 19.03.2014ம் தேதி ஏற்பாடு செய்திருந்தனர். மீண்டும் ஒரு முறை அவர்களின் சுற்றுலா முடிவினை மீள் பரிசீலனை செய்யுமாறு கோருவதற்காகத்தான் வழமைக்கு மாற்றமாக எனது மனைவிக்கு பதிலாக நான் முதன் முதலாக அந்த கூட்டத்திற்கு சென்றிருந்தேன்.
அந்த கூட்டத்தில் பெற்றார் என்ற வகையில் கலந்து கொண்ட ஒரேயொரு ஆண் நான் மட்டும்தான். ஆனால் சுற்றுலாவுக்கு எல்லாம் ஏற்பாடாகி ஆசனங்களும் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இறுதிக் கூட்டமாகத்தான் அது நடைபெற்றது என்பதை அங்கு போன பிறகுதான் நான் புரிந்து கொண்டேன்.
எனவே, மீண்டும் தனியொருவனாக நின்று அந்த ஏற்பாட்டை குழப்புவதற்கு நான் விரும்பவில்லை. எனவே, கூட்டம் முடியும் வரை நீண்ட மௌனம் காத்திருந்துவிட்டு எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்குமான ஆசன பதிவுச் சீட்டுக்களை நானே பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
அக்கூட்டம் பி.ப 4.00 மணிக்கு என்று அழைப்பிதழ் கொடுக்கப்ட்டிருந்தாலும் நிருவாகிகள் பி.ப 4.50 மணிக்குத்தான் சமுகமளித்தனர். அக்கூட்டத்தில் ஒரு நிருவாகியின் உரையை முழுமையாக கேட்ட பிறகுதான் பாலர் சுற்றுலாக்களில் இது போன்ற முன் பள்ளி நிருவாகங்களால் எவ்வளவு பிற்போக்குத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
அதிலே அவர் ‘நாங்கள்தான் திருகோணமலை பிரயாணத்தை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தோம் அதன் பிறகுதான் ஏனைய பாலர் பாடசாலைகள் திருகோணமலைக்குச் சென்று வந்தனர்.
தற்போது கண்டி மாநகருக்கும் நாங்கள் செல்லவிருப்பதை தெரிந்து கொண்ட 2 பாலர் பாடசாலைகள் (அபிமான் ஆசிரியர் நடாத்தும் ஒரு பாலர் பாடசாலை மற்றும் றவ்லதுல் அத்பால் பாலர் பாடசாலை)எங்களுக்கு முன்னமே சென்றுவந்து விட்டார்கள்.
எனவே இதிலும் நாங்கள்தான் முன்னோடி. ‘எதிர்காலத்தில் இன்னும் தூர பிரதேசங்களுக்கு செல்ல முடியுமாயின் அது பற்றியும் பரிசீலிப்போம்’ என்று தங்கள் சாதனைகளை அடுக்கிக் கொண்டே சென்றார்.
தொடர்ந்தும் அவர் பெற்றார்களைப் (பெண்கள்) பார்த்து ‘நீங்கள் பெரும்பாலும் கண்டி சென்றிருக்க மாட்டீர்கள். அதுவும் 18 வளைவுகளில் பயணிக்கும் திரில்லிங்கை நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள்’ என்று பெண்களுக்கு ஆவலூட்டினாரே தவிர கண்டியில் பாலர்கள் பார்ப்பதற்கான இடங்கள் என்ன? அவர்களின் கல்வியோடு சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சி நிரல் எங்களிடம் உள்ளது? அவர்களின் உளவியலுக்கு இந்த சுற்றுலா எப்படி பயன் கொடுக்கும் என்ற எந்த கருத்துக்களும் அவரால் முன்வைக்கப்படவில்லை.
மேலும் அவர் தளதா மாளிகைக்கு செல்வதென்றால் ‘பெண்கள் பர்தாவை கழட்டிவிட்டுத்தான் செல்ல வேண்டும். எனவே, அந்த இடத்தை நாங்கள் எங்களது கலாச்சாரம் கருதி தவிர்த்திருக்கின்றோம்’ என்றும் மறு நிமிடமே ‘பெண்கள் யாரும் திரைப்படம் போடும்படி எங்களை நிர்ப்பந்திக்க கூடாது. சிறுவர்களுக்குரிய கரர்டூன் படம்தான் பஸ்ஸினுள் போடுவோம்’ என்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து பேசினார்.
குறிப்பு: அவர் சொன்ன படி அங்கு கார்டூன் படம் போடவில்லை. மாறாக சுபுகு தொழுகையுடன் சுற்றுலாவை ஆரம்பிக்கும் போதும் சரி பாரிய விபத்திலிருந்து மீண்டு ஊர் வரும் போதும் சரி சினிமாப் பாடல்களையே போட்டு வந்தார்கள்.
இதனை எனது மனைவிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு எடுக்கும் போது நேரடியாகவே கேட்கக் கூடியதாக இருந்தது. (பர்தாவை போட்டுக் கொண்டு சினிமாப் பாட்டை கேட்பதற்கும் பர்தாவை கழட்டிவிட்டு தளதா மாளிகை பார்த்து வருவதற்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது எனது பணிவான கருத்து)
இது இவ்வாறிருக்க மற்றொரு நிர்வாகி தனதுரையில்அவரது பங்கிற்கு ‘எங்களுடைய மனைவி பிள்ளைகள் கூட காசு கட்டித்தான் இதில் கலந்து கொள்கிறார்கள்’ என்று தங்கள் குடும்ப உறுப்பினர்களின் வருகை பற்றியும் முன்னறிவிப்புச் செய்து யாரும் கருத்து கேட்காதவாறு தகவலை உட்புகுத்தினார்.
இப்படி தொடர்ந்து சென்ற கூட்டத்தில் பெற்றோரின் சுற்றுலா சம்பந்தமான ஆலோசனைகளையும் கேட்பதற்கு நிர்வாகம் மறக்கவில்லை. இருந்தும் வந்திருந்த பெண்கள் அனைவரும் 18 வளைவு பிரயாணம் பற்றிய கனவில் மௌனத்தை மட்டுமே பதிலாக அளித்திருந்தனர்.
என்னைப் பொறுத்தவரை ‘பிறப்பிலே முடமாம் பேயோட்டிச் சரிவருமா’ என்ற பழ மொழிக் கேற்ப இச்சுற்றுலாவிற்கே ஆதரவில்லாதவன் என்ற வகையில் ஆலோசனைக்கு அவசியமில்லை என்று அமைதியாக இருந்து விட்டேன்.
இவ்வளவையும் மீறி சுற்றுலா சென்றவர்களின் வாகனம் விபத்துக்குள்ளான செய்திகேட்டு முதலில் என்னை நானே நொந்து கொண்டேன். அது மட்டுமல்லாது என்னுடைய மனைவி பிள்ளைகள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகவில்லை என்று உறுதி செய்த பிறகும் நான்தான் அதிகமாக நிருவாகத்தினரோடு கோபப்பட்டதோடு மிக மோசமாகவும் முரண்பட்டுக் கொண்டேன்.
எனது கோபம் அதிகமானதற்கு முழுக்க முழுக்க நிருவாக உறுப்பினர் ‘ஹில்மி’ அவர்கள்தான் காரணம்.
ஏனெனில்,நான் ஒரு தகப்பன் என்ற வகையில் பதறிப்போய் அவரிடம் தகவல் கேட்கும்போது ஒரு மூன்றாம் நபருக்கு பதில் சொல்வதுபோல் மழுப்பல் பதில்களைச் சொன்னதோடல்லாமல் ஒரு கட்டத்தில் ‘நான் இங்கேய வேலைகளைப் பார்ப்பதா? அல்லது உங்களுக்கு பதில் சொல்pக்கொண்டிருப்பதா?’ என்று பொறுப்பற்ற விதத்த்pல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் (அந்த சுற்றுலாவில் ஆண் நிருவாகிகள் 5 அல்லது 6 பேர் சென்றனர் என்பது வேறு விடயம்).
எனவே நான் காவல் நிலையம் சென்று உண்மையை அறிய வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானேன்.
காவல் நிலைய விபரங்களின் படியும் தாய்மார் மூலமாகவும் நான் அறிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் நிரவாக உறுப்பினர் ‘ஹில்மி’ சொன்ன முதலாவது பொய் :
பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. (இந்த பதில் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மடிந்தவர்களுக்குத்தான் பொருத்தமாகும் தொழிநுட்பம் கூடிய இக்காலத்திற்கு பொருத்தமற்றது. Facwbook நண்பர்கள் மூலமாக திரட்டப்பட்ட தெளிவான படங்கள் இதற்கு சாட்சி)
உண்மை : வாகனம் சுயமாக குடை சாய்ந்தது.
இரண்டாவது பொய் :
யாருக்கும் சேதமில்லை.
உண்மை : 5 பேர் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேல் வைத்திய சிகிச்சை பெற்றது. (காத்தான்குடி பொலிஸ் சொன்னது)
மூன்றாவது பொய் :
10.30 ற்கு முதலாவது அழைப்பினை எடுத்து அவரிடம் கேட்ட போது நாங்கள் பயணத்தை 10 நிமிடங்களில் தொடரவிருப்பதாகவும் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்று கூறினார்.
உண்மை : விபத்து நடந்த இடத்திலிருந்து பஸ் புறப்படும் போது மணி பி.ப 3.15 மணி. பிறகும் தெல்தெனியவில் பஸ் தரித்து நின்று பொலிஸ் விசாரணை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றிருக்கின்றது.
எனவே, பெற்றோருக்கு விசுவாசமில்லாமலும் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் நடந்து கொண்ட இவர் போன்றவர்கள் சம்மேளனத்தில் அங்கம் வகிப்பது பற்றி நான் கவலைப்படவில்லை.
ஆனால், வெளிப்படைத்தன்மையினை மூலதனமாக கொண்ட ஒரு மக்கள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக வலம் வருவது பற்றி நான் மிகவும் கவலை அடைகின்றேன்.
இந்த விபத்தினைப் பொறுத்தவரை தற்செயலாக அந்தப்பக்கமாக வந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூலமாகத்தான் பல சிறார்கள் காப்பாற்றப்பட்டிருந்தார்கள் என்றும் தாய்மார்கள் மூலமாக அறியக் கிடைத்தது.
அவர்கள் அந்தப்பக்கமாக வரவில்லை என்றிருந்தால் வெறும் 5 நிருவாக உறுப்பினர்களால் மாணவர்களை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் என்றும் ‘நாம் நமது ஆண்களையும் இப்படியான பயணங்களுக்கு கூட்டி வந்திருக்க வேண்டும்’ என்று பல பெண்கள் ஆதங்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
அது மட்டுமல்லாது ஒரு பஸ் வண்டிக்கு பொறுப்பாக இருந்து வந்த சிரேஷ்ட ஆசிரியை ஒருவர் திரும்பும் வழியில் கண்டியில்வைத்து வேறு ஒரு காரணம் காட்டி தனது கணவருடன் கொழும்பு நோக்கி சென்றுவிட்டதாகவும் தகவல் ஒன்றும் அறியக்கிடைத்துள்ளது.
எது எவ்வாறிருந்தபோதும் இலங்கையில் உச்ச பட்சமான ஆபத்துப் பாதையான 18 வளைவுகள்hல் பெண்களை மாத்திரம் 2 பஸ்களில் ஏற்றிக் கொண்டு ஆண் நிருவாக உறுப்பினர்கள் ஒரு சிலரை மாத்திரம் துணையாக நம்பி நிருவாகம் எடுத்த இந்த முடிவு, படு முட்டாள்தனமானது என்பதையும் அந்த பாதையினை அறிந்திரியாத நமது அப்பாவி பெண்கள் காட்டிய ஆர்வம் விவேகமற்ற செயல் என்பதையும் அதற்கு ஆண்களாகிய நாங்கள் (நான் உட்பட) காட்டிய பச்சைக் கொடி என்பது நமது கழுத்தில் நாமே இட்டுக் கொண்ட சுருக்குக்கு சமன் என்பதையும் மன வேதனையுடன் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.
மேலும், இது போன்ற முன்பள்ளி நிருவாகங்கள் அனைத்திற்கும் பொதுவான சில கேள்விகளை நான் முன்வைக்க விரும்புகிறேன்.
1. ஒரு வியாபார நிறுவனம் போன்று போட்டி போட்டுக் கொண்டு தூர பிரதேசங்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுவது ஏன்? இலாப நோக்கமா? அல்லது வேறு ஏதாவது காரணமா?
2. பெற்றோரான ஆண்களை ஏன் இவ்வாறான பிரயாணங்களுக்கு அனுமதிப்பதில்லை? கலாச்சார சீரழிவு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் மஹ்ரம் இல்லாமல் பெண்களை கூட்டிச் செல்லும் உங்கள் செயல் இஸ்லாமிய வரம்புக்குட்பட்டதா? ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் யினைக் கூட மஹ்ரமில்லாத ஆண் துணையில்லாமல் நிறைவேற்ற இஸ்லாம் தடை செய்துள்ளதே.
3. நிருவாகத்தில் அங்கம் வகிக்கும் ஆண்கள் மட்டும்தான் Gentleman களா? பெற்றோர்களான ஆண்கள் உங்கள் பார்வையில் பொறுக்கிகளா?
4. 18 வளைவுகளோ அல்லது வேறு இடங்களோ பெண்களைக் கூட்டிச் சென்று காட்ட வேண்டியது அவர்களின் கணவன்மார்கள் அல்லது பெற்றோர் சகோதரர்களின் கடமையா? அல்லது முன்பள்ளி நிருவாகங்களின் கடமையா?இறுதியாக
மில்லத் பாலர் பாடசாலையின் விபத்துபற்றிய தகவல் அறிந்த நான் முன்பள்ளி நிர்வாகங்களை கட்டுப்படுத்தும் அரச அதிகாரம் பெற்ற நிறுவனமாகிய Pre School Bureau வின் தலைவர் திரு. பொன் செல்வராசா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
‘குறிப்பிட்ட முன்பள்ளி பாடசாலை இன்று சுற்றுலா செல்வதற்குரிய அனுமதியினை பெற்றிருக்கவில்லை என்றும் தகவல்கூட எனக்கு தெரியப்படுத்தியிருக்கவில்லை’ என்றும் கவலையுடன் கூறினார்.
சிறுவர் சுற்றுலாவைப் பொறுத்தவரை சில வருடங்களுக்கு முன் ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து 35 சிறார்களை காவு கொண்ட கோர விபத்தின் பிற்பாடு சில சட்டங்களை முன்பள்ளிகளுக்கு இட்டிருப்பதாக கூறினார்.
அதிலே குறிப்பிட்ட பாடசாலை அமைந்துள்ள மாவட்டத்திற்குள் அல்லது மாவட்டம் தாண்டிய அடுத்த மாவட்டம் வரையிலுமே மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சட்டம் அனைத்து முன்பள்ளி நிருவாகங்களுக்கும் இடப்பட்டிருந்தாலும் பல முன்பள்ளி நிருவாகங்கள் இது போன்று பெற்றோரைக் காரணம் காட்டியே தூரப் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.
மேலும் எதிர்காலத்தில் முன்பள்ளி சம்பந்தமாக இறுக்கமான சட்டங்களை அமுல்படுத்த விருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புக்களும் மிக அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, எந்தவொரு முன்னேற்பாடும் சட்டரீதியாக நிருவாகத்தினால் பெறப்படாத நிலையில் தான்தோன்றித் தனமாகவே இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
இந்த விபத்தின்போது ஏதும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும் முன்பள்ளி மாணவர்கள் என்ற ரீதியில் முறைப்படி கிடைக்க வேண்டிய எந்தவொரு அரச நிவாரணங்களுக்கும் நிருவாகம் உரிமை கோரியிருக்க முடியாது.
ஏதோ அல்லாஹூ தஆலாவின் நாட்டம் இந்த அளவில் எமது சிறார்களையும், பெற்றோரையும், மில்லத் பாலர் பாடசாலை நிருவாகத்தினரையும் கறை படிந்த வரலாறு ஒன்றிலிருந்து இறைவன் தனது மேலான அருளினால் காப்பாற்றியிருக்கின்றான். இதற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாக நாம் அனைவருமே இருக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் முன்பள்ளி சுற்றுலா மாத்திரமில்லாமல் தனது பிள்ளையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் மற்றைய சமுகங்களைப்போல் நமது ஆண்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.
பிள்ளைகளின் உளவளம் தெரிந்தவர்களால்தான் முன்பள்ளி நிருவாகங்கள் நடாத்தப்பட வேண்டும். பிள்ளைகளில் உளவியலோடு சம்பந்தப்பட்ட சுற்றுலாக்கள் மற்றம் விளையாட்டு கலை நிகழ்ச்சிகளை அனைத்து முன்பள்ளி நிருவாகங்களும் சமுகத்தின் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களின் மேற்பார்வையிலேயே ஏற்பாடு செய்வதற்கு சமுக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
எனவே, காத்தான்குடி கல்விச் சமூகத்திற்கான எனது பணிவான வேண்டு கோள் என்னவென்றால்,முன்பள்ளிப்பக்கமும் உங்கள் பார்வைகளை செலுத்துங்கள்.
Published by



Leave a comment