காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் மட்/பிர்தௌஸ் வித்தியாலயம், மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாயில் மற்றும் அல் குர்ஆன் மதரசா ஆகியவற்றுக்கு முன்பக்கமாக அண்மையில் அமைக்கப்பட்டு, கைவிடப்பட்டு, கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்ற வடிகான்களின் பரிதாபகரமான நிலைமையே படத்தில் காணப்படுகின்றன.
சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஓர் சாக்கடைகளின் சங்கமமாக விளங்குகின்ற இந்த அழுக்கடை நீர்த்தேக்கத்தின் மூலம் இப்பிரதேசத்திலுள்ள குடியிருப்பாளர்கள் பலரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். கடந்த வியாழக்கிழமை (20. 03. 2014) இப்பிரதேசத்தில் வசித்துவந்தவரும், இவ்வடிகானுக்கு அருகிலுள்ள மட்ஃ பிர்தௌஸ் வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்தவருமான பாத்திமா சம்ஹா என்னும் 09வயது மாணவி டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று இதே பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மேலும் ஒரு மாணவி சுகயீனம் காரணமாக காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்து தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் டெங்குக் காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டதன் பின்னர் நேற்றையதினம் (22.03.2014) மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மாத்திரமல்லாது இப்பிரதேசம் முழுவதும் அருவருப்பான துர்வாடை வீசுகின்ற ஓர் நீர் நிலையாகவும் இது காணப்படுகிறது. இரவு நேரங்களில் ஆபத்தான பல பிராணிகள் ஒன்று சேர்கின்ற சரணாலயமாகவும் இந்நீர்த்தேக்கம் இருந்து வருகின்றது.
இவ்வாறு சுமார் 150 க்கும் மேற்பட்ட 10வயதுக்குக் கீழுள்ள மாணவர்கள் கல்வி பயிலுகின்ற மட்/பிர்தௌஸ் வித்தியாலயம், அதேபோன்று அருகாமையில் காணப்படுகின்ற குர்ஆன் மதரசாவில் 145 சிறுவர்கள் கல்வி கற்கின்றனர். அத்தோடு இந்த நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் வசிக்கின்ற சுமார் ஐம்பதுக்கும் அதிகமான குடும்பங்கள் பொதுமக்கள், இளம் சிறார்கள் பலரினதும் சுகாதார வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்குகின்ற இந்த சாக்கடை நீர்த்தேகத்தின் பாதிப்புக்கள் பற்றி சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் காத்தான்குடி நகர சபைத்தவிசாளர் ஆகியோரிடம் பிரதேசத்திலுள்ள மக்கள் பலரும் பலதடவைகள், பலவழிகளிலும் எடுத்துக்கூறியும் இன்றுவரைக்கும் இது தொடர்பில் அவ்வதிகாரிகள் அனைவரும் ஓர் அசமந்தப்போக்கிலேயே காணப்படுகின்றனர்.
மரணித்துப் போன மாணவி மரணிப்பதற்கு முன்னால் தான் பாடசாலை கழிவறையில் சிறு நீர் கழிக்கின்ற போது நுளம்பு ஒன்று தன்னை தீண்டியதாகவும் அதன் மூலம் மிகவும் கடுமையாக வேதனை தனக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு பாரிய நோய்களைப் பரப்புகின்ற நுளம்புகள் உருவாகக்கூடிய எந்தவொரு நீர் தேங்கி நிற்கும் அசுத்தமான இடங்களும் குறித்த அப்பாடசாலை வளாகத்தினுள் கிடையாது.
எனவே அப்பாடசாலைக்கு அருகிலுள்ள இந்த சாக்கடை நீர்த்தேக்கத்தில் இருந்தே இந்த நோய்க்கிருமிகள் மற்றும் நுளம்புகள் பரவுகின்றன. ஆனால் இந்த அசுத்த நீரின் சங்கமமான சாக்கடை நீர்த்தேக்கத்தின் விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போடுபோக்குத்தனத்துடன் இருப்பது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும்.
காத்தான்குடி நகர சபைத்தவிசாளர், உதவித்தவிசாளர் மற்றும் ஏனைய நகர சபை உறுப்பினர்களே!
கடந்த காத்தான்குடி நகர சபைத்தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்தவருடமே ‘காத்தான்குடிப் பிரதேசத்தின் அத்தியாவசியத்தேவைப்பாடுகளில் ஒன்றான வடிகானுக்கு முற்றுமுழுதாக தீர்வுகாண்போம். காத்தான்குடி நகரைப் பசுமை மிக்க ஓர் நகரமாக மாற்றியமைப்போம்’ என்ற கோசத்துடனேயே பொதுமக்களின் வாக்குகளை அள்ளிச்சென்றீர்கள். ஆனால் நீங்கள் ஆட்சியைப் பிடித்து வருடங்கள் மூன்று முழுமையாகக் கடந்து சென்றுள்ளபோதும் வடிகான்கள் என்பவை காத்தான்குடி மக்களின் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது என்ற கசப்பான உண்மையினையும் நீங்கள் உணர்ந்துதான் ஆகவேண்டும்.
அதுமட்டுமல்லாது வடிகான்கள் எனும் பெயரில் இவ்வூரின் அதிகமான இடங்களில் சாக்கடை , அசுத்தங்களை உள்ளடக்கிய பாரிய நீர்த்தேக்கங்களே காணப்படுகின்றன. இவை அப்பிரதேச மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றன. இந்த சாக்கடை அசுத்தங்களின் காரணமாக வாழ்நாளில் கூடக்கேள்விப்படாத புதிய புதிய நோய்கள் பீடிப்பதன் காரணமாக வைத்தியசாலைகளுக்கும் இன்னபிற செலவுகளுக்கும் பணத்தை வாரியிறைக்கின்ற நமதூரிலுள்ள ஏழைக்குடும்பங்களின் இக்கட்டான நிலைமையினை நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா?
வடிகான் அபிவிருத்தியின் அரைகுறை வேலைத்திட்டங்களின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டுள்ள இந்த சாக்கடைகளில் இருந்து பரவுகின்ற நோய்க்கிருமிகளினால் பாரிய நோய்களுக்குள்ளாகி மொட்டுக்கள் மலரும் பருவத்திலேயே தங்களின் வாழ்நாளை முடித்துக்கொண்டு இறையடி சேர்ந்த அந்த இளம் பிஞ்சுகளை ஈன்றெடுத்த பெற்றோர்களின் மன நிலையினை நீங்கள் எப்போதாவது எண்ணிப்பார்த்ததுண்டா?
எனவே இத்தனை காலமும் புதிய காத்தான்குடி வாழ் மக்களுக்கு வடிகான்கள் என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்துவந்துள்ளது. உங்களின் அபிவிருத்தியின் மூலம் வடிகான்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு ஓர் உயிரைப் பலியெடுத்த இன்னும் எத்தனயோ உயிர்களைப் பலியெடுக்க இருக்கின்ற இந்த சாக்கடைச் சமுத்திரங்களுக்கு முதலில் ஓர் தீர்வை முன்வைப்பதன் மூலம் எதிர்காலத்தின் இழக்கப்போகும் உயிர்களின் எண்ணிக்கையை குறைக்கமுன்வாருங்கள்.
பிரதான வீதிகளில் கார்பட் இட்டு, ஈச்சை மரங்களை நாட்டி, மலர்ச்சாடிகளை வைத்து வெளியுலகிற்கு இவ்வூரை அபிருத்தியும் தன்னிறைவும் அடைந்த ஓர் பிரதேசமாக காண்பித்தபோதிலும் இங்கே உள்ளக வீதிகளில் காணப்படுகின்ற சுற்றுப்புறச்சூழல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. சுகாதார சீர்கேட்டினால் மரணங்கள் கூட சம்பவிக்கின்ற அளவிற்கு நமது ஊரின் சுகாதார சீர்கேட்டின் அவலநிலை மிதமிஞ்சிக் காணப்படுவது வெறும் பெயரளவிலும் வாய்ப்பேச்சளவிலுமான உங்களின் அபிவிருத்தியையே படம்பிடித்துக்காட்டுகின்றது.
பொதுச் சுகாதாரப் பரிசோதனை அதிகாரிகளே!
காத்தான்குடி வாழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலம் தொட்டே பரம்பரை பரம்பரையாக வீடு, மற்றும் சுற்றுப்புறங்களை கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்திருப்பதில் கைதேர்ந்தவர்கள். காலை எழுந்தவுடன் முதல் வேலையாக வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் ஒவ்வொருநாளும் சுழற்சிமுறையில் மாறி மாறி வீடு வாசலைப் பெருக்குவதில் மிகுந்த சிரத்தை எடுப்பவர்கள். விதிவிலக்காக ஒரு சிலர் இருந்தால் அவர்களை விழிப்புணர்வூட்டுவதன் மூலம் சரிப்படுத்தமுடியும்.
ஆனால் ஒருவருடைய வீட்டில் நீர் தேங்கி நிற்கும் யோகட் கோப்பைக்காக ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்ற நீங்கள் அப்பிரதேசங்களின் காணப்படுகின்ற அரச சொத்துக்களில் தேங்கிநின்று பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவுள்ள இந்த சாக்கடைகளின் விடயத்தில் கண்மூடித்தனமாக செயற்படுவதேன்?
குறித்த மாணவியின் மரண செய்தியை கேட்டவுடன் அம்மாணவி கல்வி பயின்ற பாடசாலையை முற்றுகையிட்டு அந்த வளாகத்தையும் அப்பிரதேசத்தையும் அங்குலம் அங்குலமாக அளந்தெடுத்த நீங்கள் அருகிலே காணப்படுகின்ற 250 அடிக்கும் மேற்பட்ட நீளத்தைக் கொண்ட இந்த சாக்கடை சமுத்திரத்தை கண்டுகொள்ளாமல் போனதேன்?
ஒரு வீட்டிலுள்ள உரிமையாளர்கள் யாரும் தங்களின் வீட்டினை அசுத்தமாக வைத்திருப்பதற்கோ, நோய்கள் பரவும் இடமாக மாற்றுவதற்கோ விரும்புவதில்லை. சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இவ்வாறான நீர்தேங்கி நிற்கும் பொருட்களின் விடயத்தில் தற்போதுள்ள பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடனேயே காணப்படுகிறார்கள். ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.
ஆனால் அதைவிடவும் அதிகமாக அரைகுறையாக அமைக்கப்பட்டு வடிந்தோடாத கான்களின் மூலமாகவே இவ்வாறான நோய்க்கிருமிகளும், தீங்குவிளைவிக்கக்கூடிய நுளம்புகளும் பரவுகின்றன என்பதை உணர்ந்து செயற்படுங்கள். வீடுகளில் காணபடுகின்ற அசுத்தங்களை விடவும் அரச பொது நிடங்களில் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்ற இவ்வாறான சாக்கடைகளின் காரணமாகவே மேற்படி மரணங்கள் சம்பவிக்கின்றன என்ற விடயத்தையும் உங்களின் கவனத்தில் பதியவைக்கிறேன்.
Published by

Leave a comment