கோலாலம்பூர்: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மலேசிய விமானத்தை அதன் விமானியே கடத்தினாரா என்ற கோணத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது.
முதலில் அவ்விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து கிடைத்த சந்தேகத்திற்கிடமான தகவல்களின் அடிப்படையில் விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என அஞ்சப் படுகிறது.
எனவே மாயமான விமானத்தை மீட்கும் முயற்சியில் பிற நாடுகளின் உதவியை நாடியது மலேசியா. அதன்படி இந்த விமானத்தை தேடும் முயற்சியில் 24 நாடுகளின் விமானங்கள், கப்பல்கள், செயற்கைக்கோள்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக ஈடுபட்டும் திருப்புமுனை எதுவும் ஏற்படவில்லை.
அடுத்தடுத்து கிடைக்கப்பெறும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களால் அவ்விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அளித்த பேட்டியில்
‘மர்மமான விமானத்தை தற்போது வடக்கே கஜகஸ்தான், துர்க்மேனிஸ்தான் தடத்திலும், தெற்கே இந்தோனேசியாவிலிருந்து இந்தியப்பெருங்கடலின் தென்பகுதி தடத்திலும் தேட முயற்சிகள் நடப்பதாகவும், புதிய செயற்கைக்கோள் தகவல்படி மலேசிய கிழக்கு கடலோரப்பகுதியை அந்த விமானம் சென்றடைவதற்கு சற்றுமுன்னர் விமானத்தில் இருந்த ஒரு நபரால் தகவல் தொடர்பு சாதனங்கள் திட்டமிட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார்.
அதேபோல், விமானத்தின் சிக்னல் கிடைத்ததாக பெறப்பட்ட தகவலும் விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானம் மாயமான விவகாரத்தில் அதிகாரிகள் தங்கள் புலன் விசாரணை வெவ்வேறு கோணங்களில் விஸ்தரித்தனர்.
அதன்படி, விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி, இணை விமானி மற்றும் பயணிகள் பக்கம் திரும்பி உள்ளது.விமானத்தை ஓட்டிய விமானி கேப்டன் ஜஹாரி அகமது ஷா (வயது 53), நீண்ட அனுபவம் பெற்றவர். பயிற்சியாளர். அவரது வீட்டை சோதனையிட்டதில் அங்கு விமானம் ஓட்டுவது தொடர்பாக பயிற்சி அளிக்கும் ஆள் உயரக்கருவி ஒன்று சிக்கியது அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
கேப்டன் ஜஹாரி மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமின் தீவிர ஆதரவாளர் என கருதப்படுகிறது. இந்த விமானம் மாயமாவதற்கு முந்தைய நாள் தான் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திய அத்தீர்ப்பின் விளைவாகக் கூட விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. அதாவது அன்வர் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக விமானி அதிரடி நடவடிக்கையில் இறங்கி விமானத்தை கடத்தினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
அதேபோல் மாயமான விமானத்தில் இணை விமானியாக சென்ற 27 வயது வாலிபர் ஹமீத்தின் வீட்டிற்கு சோதனையிடச் சென்றனர் அதிகாரிகள். அங்கு அவருடைய வீட்டின் முன்பாக இரண்டு வேன்களில் பைகளை ஏற்றிக்கொண்டிருந்ததை அதிகாரிகள் நேரில் கண்டுள்ளனர்.இது அவர் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஒருவேளை விமானம் கடத்தப்படாமல் விபத்தில் சிக்கி இந்தியப் பெருங்கடல் பகுதியில் வீழ்ந்திருந்தால் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி நிகழ்ந்திருந்தால் மாயமான விமானத்தை தேடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
காரணம் உலகின் 3-வது பெரிய கடலான இந்தியப்பெருங்கடலின் ஆழம் 2 மைல் ஆகும். அட்லாண்டிக் பெருங்கடலை விட இது ஆழமானது.
கடந்த 2009ம் ஆண்டு ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. அதன் எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்கவே சுமார் இரண்டு ஆண்டுகள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இந்தியப்பெருங்கடலில் இந்த விமானம் விழுந்திருந்தால் அதன் சிதைந்த பாகங்களைக் கண்டுபிடிக்க இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என கூறப்படுகிறது.
Published by

Leave a comment