அறிவாற்றலுடன் கூடிய ஆளுமையுள்ள ஒவ்வொரு தனி மனிதனின் பின்னணியிலும் பாடசாலைகளின் பங்களிப்பு என்பது பிரிக்கமுடியாத ஒன்று என்றால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக சிறுவர்களின் இளமைக்கால கல்வி வளர்ச்சியிலும் கலாச்சார விழுமியங்களை அட்சரம் பிசகாமல் போதித்து எதிர்காலத்தில் அவர்களை நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஓர் சிறந்த பிரஜையாக உருவாக்குவதில் பாலர் பாடசாலைகளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும்.
அந்த வகையில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களின் ஈடு இணையற்ற செல்வங்களாகக் கருதுகின்ற சிறுவர்களை ஆரம்பப் பருவம் தொட்டே அவர்களுக்கு சிறந்த கல்வியறிவையும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளையும் போதிப்பதற்காக அதிகளவு பிரயத்தனத்தை மேற்கொள்வதனை நாம் யதார்த்தமாகவே அவதானிக்கலாம்.
ஆனால் முஸ்லிம்களை மாத்திரம் செறிவாகக்கொண்டதும் இஸ்லாமிய அடிப்படைக்கலாச்சார விழுமியங்களை பின்புலமாகக் கொண்டதுமான நமது ஊரில் தற்போது நடைபெற்று வருகின்ற பாலர் முன்பள்ளிகளின் நிலையினை நாம் எடுத்துநோக்கினால் அவை கலாச்சார ரீதியாக மிகவும் பரிதாபகரமாகவே காணப்படுகின்றன. வெறுமனே பெயர்களில் மாத்திரம் இஸ்லாத்தைக் கொண்டு இயங்கிவருகின்ற இப்பாலர் முன்பள்ளிகளின் இறுதியாண்டு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பாலர்களுக்கான கலை நிகழ்ச்சி என்னும் பெயரில் கேட்போர் கூடங்களில் நடைபெறுகின்ற இன்னிசை நிகழ்ச்சிகளின் அழகைப் பார்த்தோமானால் சின்னஞ்சிறு வயதுகளில் பிஞ்சு உள்ளங்களில் ஆசிரியர்கள் என்னும் சமூகத்தின் வழிகாட்டி(?)களினால் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதைகளின் விருட்சங்களைக் கண்டுகொள்ள முடிகிறது.
ஈமானிய உணர்வையும் இஸ்லாத்தின் சுவையையும் உணர்ந்த பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கு சுமார் மூன்று வயது தொடக்கம் அல் குர்ஆனிய வசனங்கள் மற்றும் நபிகளார் கற்றுத் தந்த துஆக்கள் போன்றவை மனனமிட்டுக் கொடுக்கப்படுகின்றன.
ஆனால் அக்குழந்தைகள் பாலர் பாடசாலைகளில் சேர்க்கப்பட்ட முதல் ஓரிரு வாரங்களிலேயே சினிமாப்பாடல்களையும் அப்பாடல்களுக்கான நடனம் மற்றும் இசை நயத்தையும் குர்ஆனை மனனமிட வைத்த பெற்றோர்களுக்கு முன்னாலேயே ஒப்புவித்துக்காட்டுகின்ற போது அப்பெற்றோர்களின் மனநிலையை என்னவென்று புரியவைப்பது?
ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்கால வாழ்க்கையினைத் தீர்மானிப்பதில் அவனது இளமைப்பருவத்தின் வகிபாகமே கணிசமான பங்களிப்பை வகிக்கின்றது. இன்றைய சமூக சூழலில் இளைஞர்களின் கலாச்சார ரீதியான ஒழுக்க விழுமியங்கள் மிகவும் குன்றிப்போயுள்ள தருவாயில் இனிவரும் தலைமுறையையாவது ஒரு சீரிய வழியில் நின்று சமூகத்தின் கட்டமைப்பைக் காப்பதற்கு பயிற்சியளிக்க வேண்டிய ஓர் கட்டாய சூழ்நிலைக்கு விரும்பியோ விரும்பாமலோ இஸ்லாமிய சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.
தங்களை நாடிவருகின்ற இளம் சிறார்களின் மனங்களில் ஷைத்தானிய வக்கிர சிந்தனைகளை ஊட்டுவதன் காரணமாக நாளை ஓர் சமூகப்பற்றற்ற, ஈமானிய உணர்வற்ற, சமூகத்திற்கு எதுவித உபயோகமுமற்ற சமுதாயம் ஒன்று உருவாகப் போவதை இந்தப் பாலர் முன்பள்ளிகளில் கடமை புரிகின்ற ஆசிரியர்களும் அவற்றை நிருவகிக்கின்ற நிருவாகிகளும் உள்ளூர உணர்ந்தும் இவ்வுலகில் கிடைக்கின்ற அற்ப சொற்ப சில்லறைகளுக்காக அவற்றை மறைத்து விடுகின்றனர்.
அல்லாஹ் அதனது திருமறையிலே இவ்வாறு கூறுகிறான் ‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் உங்களின் பொறுப்புக்கள் பற்றி நாளை மறுமையில் நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள்.’
வேலியை மேயும் பயிர்கள்:
இதில் இன்னும் பரிதாபம் என்னவென்றால் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள ஆசிரியர்கள், உலமாக்கள், பள்ளிவாயில் நிருவாகிகள் போன்றவர்களே இவ்வாறான பாலர் பாடசாலைகளின் நிருவாகிகளாக இருப்பதுதான். ஒரு சமூகம் தனது எதிர்காலத்தை அடமானம் வைப்பதே இவ்வாறான உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களிடம் என்றால் அது மிகையில்லை. ஆனால் சமூகத்தின் வழிகாட்டிகளாக இருக்கவேண்டியவர்களே அந்த சமூகத்தை அதள பாதாளத்தில் தள்ளுவதற்கான கைங்கர்யங்களை மேற்கொள்வது நமது சமூகத்தின், பிரதேசத்தின் கலாச்சார ரீதியிலான வங்குரோத்து நிலையையே படம்பிடித்துக் காட்டுகின்றது.
மூத்த உலமாக்கள்:
இஸ்லாமிய நகரம் என்றும் மார்க்க விழுமியங்கள் பேணப்படுகின்ற, மதிக்கப்படுகின்ற ஓர் பிரதேசம் என்றும் மூச்சுக்கு முன்னூறு தடவைகள் சொல்லிக்கொள்கின்ற நமது பிரதேசத்தில் மேடைகள் தோறும் அரங்கேறுகின்ற அனாச்சாரங்களுக்கும் சீர்கேடுகளுக்கும் மூத்த உலமாக்கள் என்னும் ஓர் கூட்டமே மௌன அங்கீகாரம் கொடுக்கிறது, மட்டுமல்லாது அந்த நிகழ்வுகளுக்கும் விசேட அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும். இந்த மூத்த உலமாக்கள் என்னும் கூட்டத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றிவருகின்ற பாமர மக்களால் வழிநடாத்தப்படுகின்ற, அரங்கேற்றப்படுகின்ற இவ்வனாச்சாரங்களை அந்த உலமாக்களே புறக்கணித்தார்களானால், பிரயோசனமிக்க மிம்பர் மேடைகளை பயன்படுத்தி இவ்வாறான மார்க்கவிரோதச் செயல்களுக்கு சாட்டையடி கொடுத்தார்களானால் இந்த மண்ணிலிருந்து அவற்றை முற்றாக ஒழிக்க முடியும் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை.
ஆனால் சமூக ஒற்றுமை என்றும் பிரிவினைகள் கூடாது என்றும் பிரச்சினைகள் எழக்கூடாதென்றும் வரட்டுவாதம் பேசுகின்ற இந்த மூத்த உலமாக்கள் கூட்டம் முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களுக்குள்ள பொறுப்புக்களை மறந்து தாங்கள் கற்ற கல்வியின் மகத்துவத்தை புறக்கணித்து வெறுமனே பெயருக்கு புகழுக்கும் மாத்திரம் அறிஞர்களாக நடமாடுவது இந்த முஸ்லிம் உம்மத்துக்கே செய்கின்ற மாபெரும் துரோகம் என்பதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் தனது அருள்மறையிலே இவ்வாறு எச்சரிக்கிறான்.
مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ۚ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும். அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான் (அல்குர்ஆன்.62:05)கடமை மறந்த தலைமைகள்…
ஊரின் கலாச்சாரம் மற்றும் மார்க்க விடயங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட தலைமை நிறுவனமும் தற்போது தனது நோக்குப்போக்குத் தெரியாமல் சில அதிகாரம் பெற்றவர்களின் கைப்பொம்மையாக மாத்திரம் செயற்பட்டு வருவது இவ்வாறான கலாச்சார சீரழிவுகளை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும். இஸ்லாமியப் பாடசாலைகள் என வெறும் வார்த்தைகளால் மாத்திரம் தம்பட்டமடித்துக்கொண்டு செயற்பாடுகளில் அந்நியர்களை விடவும் கேவலமாக செயற்படும் பாலர்பாடசாலைகளில் நடைபெறுகின்ற பாட்டு, கூத்து, கும்மாளம் போன்றவற்றுக்கெதிராக தலைமை நிறுவனம் என்றவகையிலும் முஸ்லிம் நிறுவனங்களை நெறிப்படுத்துகின்ற அதிகாரபூர்வ அமைப்பு என்ற வகையிலும் ஓர் தீர்வுத் திட்டத்தையேனும் முன்வைக்கத்திராணியற்ற இந்த நிறுவனம் இனியும் இஸ்லாம் என்றும் கலாச்சாரம் என்றும் இந்த ஊர்மக்களை ஏமாற்றிப்பிழைப்பு நடாத்துவதில் எதுவித பிரயோசனமும் இருக்காது என்பதை கருத்திற்கொள்ளவேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்'(சஹீ{ஹல் புஹாரி.100)அன்பின் பெற்றோர்களே! தாய் தந்தையர்களே!
எல்லாம் வல்ல இறைவன் நமக்களித்த அரும்பெரும் செல்வங்களே நமது குழந்தைச் செல்வங்கள். ஈருலக வாழ்க்கையின் வெற்றிக்கும் ஒரே வழியான புனித இஸ்லாமிய மார்க்கத்தில் நமது குழந்தைகளும் இறுதிவரைக்கும் கால் பதித்து வாழ்வதற்கு ஏற்றவகையில் அவர்களின் இளமைக்கால செயற்பாடுகளை நெறிப்படுத்துவது பெற்றோர்கள் அனைவரின் மீதுமுள்ள தலையாய கடமையாகும். ‘சிறு பிள்ளைகள்தானே வளர்ந்ததும் பார்ப்போம்’ என்ற பொடுபோக்குத்தனம் இறுதியில் அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கிவிடும் என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.எல்லாம் வல்ல இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறிக்காட்டுகிறான்.
إِنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ ۚ وَإِن تُؤْمِنُوا وَتَتَّقُوا يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلَا يَسْأَلْكُمْ أَمْوَالَكُمْ
நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது; ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அளிப்பான். (அல் குர்ஆன்.47:36)எனவே மிகவும் அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்கான கல்வியை கற்பதற்காக நிரந்தர மறுமை வாழ்வை மறந்து வாழ்வோமானால் ஆடைகளின்றி நிர்வாணமாக எழுப்பப்படும் இறுதிநாளின் அமளி துமளிகளில் அந்த ஏக இறைவனைத்தவிர வேறு எவரும் எம்மை இரட்சிக்க முன்வரப்போவதில்லை என்பதை மனதில் இருத்திக்கொண்டு அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த கலாச்சாரத்தையும் கல்வியையும் பிஞ்சு உள்ளங்களிலே நமது பிள்ளைகளுக்குக் கொடுத்து அப்பிள்ளைச் செல்வங்கள் மீதான கடமையினை சரிவர நிறைவேற்றிய பெற்றோர்களின் வரிசையில் நாம் அனைவரும் ஒன்றிணைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.
Published by
![1052864-Royalty-Free-Vector-Clip-Art-Illustration-Of-School-Kids-Carrying-Flowers-2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/1052864-royalty-free-vector-clip-art-illustration-of-school-kids-carrying-flowers-211.jpg?w=110&h=150)
Leave a comment