பொய்யான கதைகளை கூறி சமூகங்களுக்கு மத்தியில் இன விரிசலை ஏற்படுத்தும் பௌத்த கடும் போக்கு சக்திகள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்

red_eyes__by_havocangel03-d56ilt6[1]இர்ஷாத் றஹ்மத்துல்லா

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பறிக்கப்பட்ட உரிமைகள் ஏராளம் என்பது பதிவுகளாகும். இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமை தொடர்பிலும், மீட்சி தொடர்பிலும் எவர் செயற்பட்டாலும் அவர்களை இனவாதியாக அடையாளப்படுத்தும் செயற்பாடுகளும் ஏராளம் என்று கூறினாலும் அது மிகையாகாது.

குறி்ப்பாக இலங்கை முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு அனுபவித்த வேதனையும், வலிகளும் மறந்துவிட கூடியதொன்றல்ல. அது வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் உச்ச கட்டமே பலவந்தமான வெளியேற்றம். இந்த வெளியேற்றத்துடன் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தனர். அன்று அமைச்சராக இருந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்த மக்கள் தொடர்பில் மேற்கொண்ட முயற்சிகளும், உதவிகளும் ஏராளம், அன்றைய இந்த வடமாகாண மக்களின் பிரதி நிதியாக இருந்தவர்களுல் முன்னால் பிரதி அமைச்சர் எஸ்.எஸ்.எம். அபூபக்கர் ஹாஜியார் அவர்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவர். புத்தளம் – மன்னார் வீதியில் இன்று காட்சியளிக்கின்ற 4 ஆம் கட்டை அன்று காடுகளாக முற்புதர்களாக இருந்தன. அவற்றை துப்பரவு செய்து புதிய கிராமத்தை உருவாக்கி மக்களை குடியமர்த்தினார். அதே போல் பாலாவி-கல்பிட்டி வீதியில் கரம்பையில் அரச காணிகளை அடையாளப்படுத்தி அவற்றை பெறுகின்ற போது பெரும்பான்மையினத்தவர்கள் பிரதி அமைச்சர் அபூபக்கர் அவர்களை துப்பாக்கி முனையில் அழிக்க வந்த போதுஅதனை எதிர் கொண்டு இன்று மக்கள் வசிக்கும் கரம்பை சபா-மர்வா உள்ளிட்ட கிராமங்களை உருவாக்கி வடபுல மக்களை வாழச் செய்தார். அதன் பிறகு முன்னால் அமைச்சர் மர்ஹூம் நுார்தீன் மசூர் அவர்கள் பல கிராமங்களை உருவாக்கி இம்மகளுக்கு உதவி செய்தார். அதனையடுத்து வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் ஆதெ பணியில் தமது பங்களிப்பினையும் செய்துவந்துள்ளனர்.

இவ்வாறு இடம் பெயர்வுக்குள்ளான மக்களிளை தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் அவர்களது அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதில் மிக ஆர்வத்துடன் செயற்பட்டவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட மக்களை மீள்குடியேற்ற முயற்சிகளை செய்த போது அதற்கெதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களும்,னச் சாயங்களும் அவர்கள் மீது பூசப்பட்டன. தொடர்ச்சியாக அவரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை பின்னடைவு காணச் செய்யும் வகையில் பல்வேறு பட்ட சதிகள் அரங்கேற்றப்பட்டன. அவற்றை தகர்த்து பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையும், உணர்வும் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் ஆழமாக குடிகொண்டிருந்தததை பாரக்க முடிந்தது.

இவ்வாறான சூழ் நிலையில் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் இருந்து வந்த தமிழ் மக்களுக்கு எதனை  செய்ய வேண்டுமோ அதனை அன்று மீள்குடியேற்ற அமைச்சராக இருந்து  அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்து காட்டியதை தமிழ் சமூகம் ஒரு போதும் மறந்துவிடாது. இந்த நிலையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை  அவர்களது சொந்த மண்ணில் வாழ வைப்பதற்காக எடுத்த முயற்சிகளை பிழையாக சித்தரித்து அதனையும் தடுத்தனர், சில சிங்கள ஊடகங்கள் மன்னாரில் முஸ்லிம்களுக்கான தனியானதொரு வலயத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் உருவாக்குவதாக கட்டுரைகளை எழுதின. இந்த அவதுாறுகளையும், அநியாயத்தையும் செய்கின்றவர்களின் பின்னணி தொடர்பில் பல்வேறு உண்மை தகவல்கள் அப்போது அம்பலமாகின. வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்ற சொந்த காணியினை பெற்றுக் கொடுப்பதில் காணப்பட்ட இழுபறிகளுக்கு மத்தியில் முஸ்லிம் வலயத்தை உருவாக்க முயற்சிப்பதா என்ற குற்றச்சாட்டு உப்பு சப்பற்றதாக மாறியதையடுத்து தற்போது வேதாளம் முருங்கை ஏற ஆரம்பித்த கதையினை பொதுபலசேனா கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

வில்பத்து காட்டுப்பகுதியினை அபகரித்து 5000 முஸ்லிம்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் குடியேற்ற முற்படுகின்றார் என்று ஞானசார தேரர் கூறிய கருத்து தொடர்பில் உண்மையினை தெளிவுபடுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாகப்பிரிவில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி கிராமத்தில் அமைந்துள்ள மரைக்கார் தோட்டம் காணியில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் 1990 க்கு முன்பிருந்து வாழ்ந்துவந்தனர், இங்கு முஸ்லிம்களின் மைய்யவாடி இன்னும் அடையாளமாக இருக்கின்றது.பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் இங்கு தமது தளங்களை அமைக்கலாயினர்..அவர்களுக்கு போதுான காணிகள் இருந்த போதும், மேலும் தமது படை நடவடிக்கைகளுக்காக இந்த காணிகளை சுவீகரித்து முல்வேலயினையும் போட்டனர்.யுத்தம் ஒய்ந்து மக்கள் இற்கு வந்த போது இந்த காணியினை பெற்றுக் கொள்ளமுடியாமல் அங்கலாயித்தனர்.தங்களது நிலம் தமக்கு வேண்டும் என்றும் அவற்றை பெற்றுத்தருமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் ஊடாக உயர் தரப்பிற்கு வேண்டுகோளையும் வழங்கினர். இருந்த போதும் அது ஏட்டில் எழுதியவாறே இருக்கின்றதே ஒழிய இன்னும் மக்கள் கரம் கிட்டவில்லை. இந்த நிலையில் அந்த மரைக்காயர் தோட்டத்திற்கு முன்பாக மறிச்சுக்கட்டி பிரதான வீதிக்கு முன்பாக உள்ள காணியினை இம்மக்களுக்கு வழங்க பிரதேச செயலாளர் ஊடாடக நடவடிக்கைகள் அமைச்சரின் பணிபுரைக்கமைய வனபரிபாலன அமைச்சின் பங்களிப்புடன்  மேற்கொள்வதென தீர்மதாணிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் 5000 வெளிமாவட்ட முஸ்லிம்களை குடியமர்த்த முயற்சிக்கின்றார் என்று ஞான சாரதேரர் தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானதும், நடை முறை சாத்தியப்பாடுகளுக்கு ஒவ்வாதகருத்துமாகும். முஸ்லிம்கள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுக்கும் முயற்சிகள் பொதுபல சேனாவுக்கு சவாலாக அமைந்துள்ளதும், இலங்கை முஸ்லிம்களின் குரல் வளையினை நசுக்குவதன் மூலம் சிறுபான்மை மக்களை தமது அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம் என்று ஞானசாரர் போன்ற இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீனின் யதார்த்தபூர்வமான அரசியல் செயற்பாடுகள் சாவு மணியாக அமைந்திருப்பதும் ஒரு விதத்தில் தாங்கிக் கொள்ளமுடியாமையே இவ்வாறான கருத்துக்கள் வெளிப்பட காரணமாகும் என்பதை காணமுடிகின்றது.

கடந்த 25 வருடங்களுக்குள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இவர்களது குடும்பங்கள் வாழ்வதற்கு வீடுகளும், வசதிகளும் தேவை அவற்றை எங்கிருந்து பெருவது என்ற கேள்விக்கு இந்த ஞானசோர தேரரினால் பதிலளிக்க முடியுமா? அரச காணிகளை எவராலும் பலாத்காரமாக அபகரிக்க முடியாது, காணிகளை மக்கள் பாவணைக்கு பெருவது என்பது கல்லில் நார் உரிப்பது போன்றது. இப்படி இருக்கையில் வில்பத்து காட்டையளித்து முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய அமைச்சர் முயற்சிக்கின்றார் என்ற போலியான குற்றச்சாட்டை இனவாதிகள் வெளிப்படுத்துவது இந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிகளின் நல்லென்னத்தை இல்லாமல் செய்யும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.

பொய்யான கதைகளை கூறி சமூகங்களுக்கு மத்தியில் இன விரிசலை ஏற்படுத்தும் பௌத்த கடும் போக்கு சக்திகள் தொடர்பில் விளிப்புடன் இருப்பதுடன்,ஏற்றுக்கொள்ளும் சிங்கள சகோதரர்களுக்கு உண்மையினை விளக்கப்படுத்த எமது சமூகத்தின் துறைசார் நிபுணர்கள்,மற்றும் நலன் விரும்பிகள்,இதனை சமூகப் பணியாக எண்ணி முன்வர வேண்டும்.

Published by

Leave a comment