கொழும்பு: ஓய்வூதியக்காரர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா பணிக்கொடை (gratuity) கடன் திட்டம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரசாங்க வங்கிகளுக்கூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
இவ்வருடம் பணிக்கொடை கடனைப் பெற்றுக்கொள்வதற்காக 13ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு தாமதமின்றி உரிய நேரத்தில் பணத்தினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே அரசாங்க வங்கிகளுக்கூடாக இதனை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பணிக்கொடை கடன் வங்கிகளுக்கூடாக வழங்கப்பட்ட போதிலும் எச்சந்தர்ப்பத்திலும் இதற்கான வட்டி ஓய்வூதியக்காரர்களிடமிருந்து அறவிடப்படமாட்டாதென அழுத்தமாகக் கூறிய அமைச்சர், இதற்குரிய வட்டியினை அரசாங்கம் பொறுப்பேற்குமெனவும் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கிணங்க இரண்டு வருடங்களுக்கான ஓய்வூதியப் பணம் வட்டியின்றி கடனாக வழங்கப்படும். ஆரம்ப காலம் முதல் இந்தக் கடன் வழங்கும் திட்டம் ஓய்வூதியத்திணைக்களத்திலேயே நடைமுறையிலிருந்தது.இதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கையில் உரிய தொகையினை திறைசேரியிலிருந்து பெற்றுக்கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் ஓய்வூதியக்காரர்கள் ஏமாற்றங்களை சந்திக்கவேண்டி நேரிடுகிறது.இவற்றுக்குரிய தீர்வாகவே வங்கி களுக்கூடாக கடன் திட்டம் வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதெனவும் அமைச்சர் கூறினார்.
Leave a comment