முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடும் காத்தான்குடி மீடியா போரம்அதன் 15வது வருடாந்த மாநாடு

kattankudy media forum– காத்தான்குடி மீடியா போரம்

காத்தான்குடி: முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடும் காத்தான்குடி மீடியா போரம்அதன் 15வது வருடாந்த மாநாடு 15ம் திகதி காத்தன்குடியில் நடைபெறுகிறது.

காத்தான்குடி மீடியா போரத்தின் 15வது வருடாந்த மாநாடு எதிர்வரும் 15.03.2014 சனிக்கிழமை முழுநாள் நிகழ்வாக காத்தான்குடி ‘நியூ கடாபி ரெஸ்ட் இன்’ மாநாட்டு மண்டபத்தில் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நூர்தீன் ஜே.பி அவர்களின் தலைமையில் அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது.

உயரிய இலட்சியங்களுடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி மீடியா போரமானது, 1½ தசாப்த காலத்திலும் கரடு முரடான பாதைகளையும், சவால்களையும் தாண்டி சமய, சமூக, கலாசாரப் பணிகளிலும், ஊடகத்துறைசார் செயற்பாடுகளிலும் பெரும் பங்களிப்புக்களை வழங்கி வந்துள்ளது.

காத்தான்குடிப் பிரதேச ஊடகவியலாளர்களின் பல்துறை வளர்ச்சிக்கும், சமூக அபிவிருத்திக்கும், சமூகங்களுக்கிடையிலான சமாதான சக வாழ்வுக்கும் பாரிய பங்காற்றி வந்துள்ள காத்தான்குடி மீடியா போரம், காலத்தின் தேவை கருதி இப்பிரதேசத்தில் காத்திரமான இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் பணியிலும் தனது பணியினை விஸ்தரிக்கவுள்ளது.

அந்த வகையில் அதன் 15வது வருடாந்த மாநாடு நடைபெறவுள்ள வரும் 15ம் திகதி சனிக்கிழமையன்று முதலாவது இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை ஆரம்பித்து வைக்கின்றது. இந்த இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிச் செயலமர்வில் காத்தான்குடிப் பிரதேசத்தையும், அயற்பிரதேசங்களிலும் வாழும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த க.பொ.த. உயர் தர மாணவர்களும், ஊடகத்துறையில் பிரவேசிக்க ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வழிகாட்டலில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் காத்தான்குடி மீடியா போரத்தின் இந்த இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு அன்றைய தினம் காலை 09:00 மணிக்கு ஆரம்பமாகும்.

மாலை 06:30 மணிக்கு காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும் நடைபெறும்.

இவ்வருடாந்த மாநாட்டின்போது காத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டைகளைக் கையளிக்கும் நிகழ்வும், 15வது வருடாந்த மாநாட்டையொட்டிய நினைவுச் சிறப்பு மலர் வெளியீடும் மற்றுமொரு நிகழ்வாக இடம்பெறவுள்ளது.

அத்துடன் காத்தான்குடிப் பிரதேசத்தில் நீண்ட காலமாக ஊடகப்பணியாற்றி வரும் மூத்த ஊடகவியலாளர்களான மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி), றிஸாலா எப்.எம். வானொலி ஸ்தாபகர் அல்ஹாஜ் கபீர் எம். ஹஸன் ஆகியோரையும் பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னங்களும் வழங்கப்படவுள்ளன.

காத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவர்களுடைய பிள்ளைகள் கல்வி அடைவில் பெற்றுள்ள திறன்களை கௌரவித்துப் பாராட்டும் சிறப்பு நிகழ்வும் இவ்வருடாந்த மாநாட்டு நிகழவுகளில் ஒரு அங்கமாக இடம்பெறுகின்றது.

அந்த வகையில் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் சித்தி பெற்று பொறியியல் துறையில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு தகைமை பெற்றுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவரும், மீடியா போரத்தின் அங்கத்தவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் சிரேஷ்ட புதல்வருமான ஆர். ஸிந்தாஹ் நவாஸ் மற்றும் 2013ம் ஆண்டு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் ஓதல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்ற மீடியா போரத்தின் அங்கத்தவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எல்.எம். பழுலுள்ளாஹ்வின் புதல்வி எம்.எஃப். பாத்திமா பதினா ஆகியோர் பாராட்டப்படவுள்ளனர்.

இவ்வருடாந்த மாநாட்டின் இறுதி நிகழ்வு இரவு 08:00 மணிக்கு ஆரம்பமாகும். இந்நகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம். முஹம்மத் இஸ்மாயில் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவரும், காதி நீதிபதியுமான ‘அமீறுல் ஹாஜ்ஜாஜ்’ மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எல். அப்துல் ஜவாத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், சமய, சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், அதிபர்கள், பெற்றோர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இவ்வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் மௌலவி அல்ஹாஜ். எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment