1. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத் திட்டமானது தலையாய முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நாட்டை 30 வருட காலமாக அழிவுக்ளுள்ளாக்கிய சூழ்நிலைகளுக்கான காரணிகளை கண்டறிந்து அவை இனியொரு போதும் இடம் பெறாதென்பதனை உறுதி செய்வதோடு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான நீதியும் நிவாரணமும் கிடைக்கச் செய்வதன் மூலமாக தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்நாட்டில் பல்லின சமூகத் தன்மையை அங்கீகரித்து சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து மத கலாசார உரிமைகளையும் சகல சமூகங்களும் எவ்வித இடையூறுகளுமின்றி அனுபவிப்பதனை உறுதி செய்வதன் ஊடாக அர்த்தமுள்ள நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
2. இனமத ரீதியாக சிறுபாண்மை மக்களின் கலாசார தனித்துவம் பாரம்பரியம் மத நம்பிக்கைகள் மற்றும் அனுஷ்டானங்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையில் நடந்தேறிவரும் வெறுப்புணர்வுப் பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் சிறுபாண்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீதான வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அதற்கு அவசியமான சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான வெறுப்புணர்வு மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் அல்லது தனிநபர்கள் மீது பாரபட்சமின்றிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுபோன்ற வெறுப்புணர்வுப் பிரச்சாரங்களை தடைசெய்யும் புதிய சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.
அத்தோடு ஒவ்வொரு மதப்பிரிவினரும் தமது மத அனுஷ்டானங்கள் மற்றும் கலாசார விவகாரங்களை சுதந்திரமாக கையாள்வதற்கேற்ற தனியான அமைச்சுக்கள் வழங்கப்பட்டு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள மத கலாசார உரிமைகளை அனுபவிப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
3. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க அவர்களது நியாயமான அபிலாசைகளை நிறைவு செய்யத்தக்க அதேவேளை நாட்டின் ஒருமைப்பாட்டையும் தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்த்தக்க அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதற்கு முன்னோடியான சகல பேச்சுவார்த்தைகளிலும் பொறிமுறைகளிலும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூக பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டும்.
அதிகாரப்பகிர்வு தொடர்பான இறுதி இணைக்கப்பாடு எட்டப்படும்வரை 13 ஆவது திருத்த சட்ட மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டியங்கும் வகையில் மாகாண சபை கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்படவேண்டும்.
4. யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் ஊழலும் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் இந்நாட்டில் அதி உச்ச நிலைக்குச் சென்றிருக்கின்றன.
நமது தேசத்தின் நிலையான அபிவிருத்திக்கும் எதிர்கால சுபீட்சத்திற்கும் பயங்கர அபாயகரமான சாபமாக இது மாறியிருப்பதோடு சர்வதேசத்தின் பார்வையில் நம் நாட்டைப்பற்றிய தவறான பதிவுகளை அது ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் காரணமாக நாட்டின் அபிவிருத்தியின் பிரதிபலிப்புக்களை சாதாரன மக்களின் அன்றாட வாழ்வில் காணமுடியவில்லை என்பதோடு வாழ்க்கைச் செலவும் பொருளாதார கஸ்டங்களும் அதிகரித்துச் செல்கின்றன.
இந்த சூழ்நிலைகள் நம்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் ஜனநாயக மற்றும் ஏனைய ஒழுக்க விழுமியங்களின் சிதைவுக்கும் வழிகோலியிருக்கின்றன.
பயங்கரவாதத்திலிருந்து நம்நாட்டை மீட்டெடுத்தது போலவே ஊழல் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களிலிருந்து இந்நாட்டை மீட்டெடுப்பது தேசப்பற்றுள்ள அனைவரின் தலையாய கடமையாக மாறியிருக்கிறது.
இதற்கான தேசிய வேலைத்திட்டமும் விசேட சட்டங்களும் பொறிமுறைகளும் உருவாக்கப்படவேண்டும். அந்த வகையில் பின்வரும் இரண்டு விடயங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும்.
- பொது நிதியினைக் கையாளுகின்ற மற்றும் ஏனைய நிர்வாக விடயங்கள் தொடர்பாக முழுமையான தகவல்களை நம்நாட்டின் எந்தவொரு குடிமகனும் தேவைப்படும் போது பெற்றுக்கொள்வதனை உத்தரவாதம் செய்யும் “தகவலறியும் சட்டம்” உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
- இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஏற்கனவே நடைமுறையிலுள்ள பொறிமுறைகள் அனைத்தும் உரிய நோக்கத்தை நிறைவு செய்யத் தவறியிருக்கும் நிலையில் இலஞ்ச ஊழல் மோசடி நவடிக்கைகளை கண்காணிப்பதற்கான புதிய சுயாதீன பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
அதில் ஒரு அடிப்படை பொறிமுறையாக ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற மட்டத்திலும் சுயாதீன ஊழல் கண்காணிப்பு குழுக்கள் சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
5. யுத்த காலத்தின் போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாகாண மக்களின் மீள்குடியேற்றம் நஸ்டஈடு மற்றும் புனர்வாழ்வு என்பன பாரபட்சமின்றியும் துரிதமாகவும். பூர்த்தி செய்யப்படுவதோடு இடம் பெயர்ந்த சகல மக்களும் தமது பூர்வீக இடங்களில் குடியேறி வாழ்வதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படவேண்டும்.
யுத்த காலத்தின் போது தாம் இழந்த குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை அம்மக்கள் மீளப்பெறுவதனை உத்தரவாதப்படுத்தும் விசேட பொறிமுறையொன்று இதனூடாக உருவாக்கப்பட வேண்டும்.
அதனூடாக வடகிழக்கில் இனவிகிதாசார அடிப்படையில் அரச காணிகளை ஒவ்வொரு சமூகமும் தமது அபிவிருத்தி மற்றும் குடி பரம்பல் தேவைகளுக்காக பெற்றுக் கொள்வதனை உறுதி செய்வதோடு வடகிழக்கில் காணப்படும் காணிப்பிரச்சினைகள் தொடர்பான சகல பிரச்சினைகளிலும் பாரபட்சமின்றியும், இழுத்தடிப்புக்களுமின்றியும் கையாளப்பட்டு தீர்க்கப்படவேண்டும்.
6. யூத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்து நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதானது வரவேற்கத்தக்கது.
சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இது குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்புச் செய்யமுடியும்.
இருந்த போதிலும் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களைப் போலவே இதனுடைய நடவடிக்கையும் அறிக்கை விடுவதோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணமும் பெற்றுக் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
காணாமல் போதல் சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் எனக்கருதும் அத்தனை பேரும் சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
காணாமல் போனவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்படும் இடங்கள் அனைத்தையும் தோண்டி ஆராய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அத்தோடு பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் போதுமான நிவாரணம் உடனடியாக வழங்கப்படல் வேண்டும்.
7. நம்நாட்டை சுபீட்சமும், அமைதியும் நிறைந்த ஒன்றாக கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு உதவிகளையும் முதலீடுகளையும் வர்த்தக வாய்ப்புக்களைவும் எதிர்பார்த்திருக்கும் இத்தருணத்தில் அரசியல் அதிகாரங்களில் இருப்போர் அதிகாரதுஷ்பிரயோக சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் இந்நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
இது போன்ற நம் நாட்டுக்கு கேடு விழைவிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அதனை மீறி செயற்படுவோரை தண்டிக்கவும் பொருத்தமான நடவடிக்கைகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொள்வதன் மூலமாக இந்நாட்டின் நற்பெயரும், கீர்த்தியும் பாதுகாக்கப்படல் வேண்டும்.
Published by


Leave a comment