கொழும்பு: இலங்கையிலிருந்து கடற்பயணங்கள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறும் கனவில் பல்லாயிரம் பேர் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் நல்ல நிலையில் இருந்தவர்கள் இச்சட்ட விரோத பயணங்களை ஏற்பாடு செய்யும் முகவர்களின் மந்திர வார்த்தைகளில் மயங்கி, அவுஸ்திரேலியா கனவில் தான் சேமித்த பணங்களை கடலில் கரைக்கும் ஆபத்தான நிகழ்வுகள் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்தன.
ஆபத்தான இத்தகைய பயணங்களால் படகுகள் மூழ்கி, பலர் உயிரிழந்ததும், அதே போல் அவுஸ்திரேலியா சென்றவர்கள்கூட மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்ததும் அனைவருக்கும் ஞாபகமிருக்கலாம்
இவ்வாறாக வீசா இல்லாமல் அதாவது சட்டவிரோதமாக அவுஸ்திரேயா செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியாது எனவும், அவுஸ்திரேலியா குடியுரிமையைப் பெற முடியாது எனவும் அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்திருக்கின்றது.எனவே, கஷ்டப்பட்டு உழைத்த பணம், தங்க நகைகளை விற்று அல்லது வங்கியில் வைப்புச் செய்து பெற்ற பணம் மற்றும் கடன் பெற்றுக் கொண்ட பணம் இவற்றை அவுஸ்திரேலியாக் கனவில் போலி முகவர்களிடம் கொடுத்து இன்று அதிகளவான மக்கள் நிர்க்கதியாகி வருகின்றனர்.
அவுஸ்திரேலியா மாத்திரமன்றி ஐரோப்பா கனவிலும் போலி முகவர்களிடம் இலட்சக்கணக்கான பணத்தைக் கொடுத்து ஏமாறும் நிகழ்வும் இன்று இலங்கையில் காணப்பட்டு வருகிறது.
ஓர் நாட்டுக்குச் செல்ல வேண்டுமானால் அந்நாட்டில் தங்கும் அனுமதி பிரயாணிக்குக் கிடைக்க வேண்டும். அதற்கான நவீன திட்டங்களும் செயன்முறைகளும் இன்று இவ்வாறான நாடுகளின் வீசா நடைமுறைகளில் இருந்து வருகின்றன.
எனவே குறித்த நாட்டின் வீசா நடை முறையிலுள்ள அலுவலகங்களுக்குச் சென்று, முறையான விண்ணப்பங்களைக் கொடுத்து, கை விரல் அடையாளங்கள் கொடுத்துப் பெறும் நடை முறைகளை பொதுமக்கள் தெரிந்திருக்க வேண்டும்.
‘முதல்ல காசத் தாங்க, உள்ளுக்குள்ளாள எல்லாம் நடக்கும்’ என்று ஆசை வார்த்தை கூறி, பணத்தையும் பெற்று, விண்ணப்பத்திரத்தையும் நிரப்பி, விரல் அடையாளத்தையும் தனி நபர்கள் உங்களிடம் பெற்றுக் கொண்டால் நீங்கள் செல்வது அவுஸ்திரேலியாவோ, ஐரோப்பாவோ இருக்காது. ஒன்று கடல் அல்லது கடன் எனும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள் என்பது மாத்திரம் திண்ணம்.
அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் இலங்கை மக்களுக்கு தமிழில் அறிவுறுத்தப்பட்ட துண்டுப்பிரசுரம் பொதுமக்கள் நன்மை கருதி இங்கு பதிவேற்றப்படுகிறது.
Published by





Leave a comment