முஸ்லிம் அரசியல் சக்திகள் கடமையை சரிவரச் செய்திருந்தால் நாம் இந்த மாநாட்டை நடத்த வேண்டி வந்திராது – நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் பிர்தௌஸ் நளீமி

firthous naleemi– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்திகளும் அவற்றின் தலைமைகளும் தமது கடமையை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் இன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இவ்வாறானதொரு தேசிய மாநாட்டை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்பதை இந்த மாநாட்டின் செய்தியாக சொல்லி வைக்க விரும்புகிறேன் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி) தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு தலைமைiயுரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதை விடுத்து வெறுமனே தமது இனத்தினதும் பிரதேசத்தினதும் நலன்களை மாத்திரமே முன்னிறுத்திச் செயற்பட்டன. அவை ஒருபோதும் பல்லின மக்களைக் கொண்ட இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முன்வரவில்லை. ஆனால் ந.ம.இயக்கம் அப்படிப்பட்டதல்ல. அது இந்த நாட்டிலே புதியதொரு அரசியல் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறது. அந்தவகையில் ந.ம.இயக்கம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரியதல்ல. அது முழு நாட்டு மக்களுக்குமானது.

அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி)
அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி)

இந்த நாட்டில் எங்கெல்லாம் அநீதி, பாரபட்சம், ஊழல், மனித உரிமை மீறல்கள், மோசடிகள் இடம்பெறுகின்றதோ அங்கெல்லாம் நின்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் குரல் கொடுக்கும்.

முஸ்லிம் சமூகத்திற்காக மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கு அநீதியழைக்கப்பட்டாலும் , தமிழ் மக்களுக்கு அநீதியழைக்கப்பட்டாலும் கிறிஸ்தவ மக்களுக்கு அநீதியழைக்கப்பட்டாலும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதற்காக குரல் கொடுக்கும். அதனைத்தான் கடந்த 8 வருடங்களாக எமது இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

இந்த அரசியல் வேலைத்திட்டத்தில் பார்வையாளர்களாக அல்லாது பங்காளர்களாக மாறுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இந்த அரசியல் வேலைத்திட்டத்தில் இணைந்து பணியாற்றும் பல்வேறு சகோதரர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களது மானம் மரியாதையில் கைவைக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவர்கள் இன்று வரைக்கும் இந்தப் பணியில் கைகோர்த்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.

இந்த மாநாட்டுக்காக கிழக்கு மாகாணத்தின் புல்மோட்டை முதல் பொத்துவில் வரையான பகுதிகளிலிருந்தும் நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்தும் வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் இயக்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

Published by

Leave a comment