கல்யாணப் பேச்சு
கட்சிதமாய் முடிந்தது.
கேட்டதெல்லாம் கிடைத்ததால்
மாப்பிள்ளை தரப்பாருக்கு
மட்டற்ற மகிழ்ச்சி..
ஊருப் பெரியவர்களும்
இதற்கு
உடன் பட்டுக் கொண்டார்கள்.
பெண்பார்க்க வந்தவர்களுக்கும்
பெருமிதம்.
பொண்ணு ரொம்ப அழகு
நம்மிட
மாப்பிள்ளைக்கு
மனசப்போல கிடைச்சிருக்கு
பெண்கள் சிலர்
பேசிக் கொண்டார்கள்.
மாப்பிள்ளையின்
தொழில், படிப்பு, நடத்தை
மார்க்க பக்தி
எதைப் பற்றியும்
எவரும்
அக்கரை கொண்டதாக
அறிய முடியவில்லை.
மகளுக்கு
மாப்பிள்ளையாய்
எவனோ ஒரு
ஆண்பிள்ளை வந்தால் போதும்
என்ற
பெற்றோரின் கனவு
பெரும்பாலும் நிறைவேறியது.
இதுவரை
பொண்ணு வேடத்திற்கு
ஒன்பது முறை
ஓப்பனை போட்டு
பல கற்பனைகளுடன்
தோற்றுப் போன
மணப் பெண்ணிடம்
ஒரு வார்த்தையேனும்
ஒருவரும்
கேட்டதாகத் தெரியவில்லை.
ஒப்பனையை உதறிவிட்டு
வெளியே வந்தாள்
வீரப் பெண்மணி
‘தாசிப் பெண்ணிடம் கூட
ஒருவன்
காசி கொடுத்த பின்புதான்
கட்டிலுக்குப் போகிறான்.
ஆண் மகனுக்கு
பொறுப்புணர்ச்சி வேணும்
இங்கே
பொறுப்பேயில்லாமல்
உணர்சியோடு மாத்திரம்
உட்கார்ந்திருக்கும்
மாப்பிள்ளைச் சிங்கமே..!
நான் உழைக்கிறேன்
உனக்கு வேண்டிய
உதவிகளையும் செய்கிறேன்.
படுக்கைக்கு
பாய் விரிக்கிறேன்.
போதவில்லை யென்றால
நமக்கு
பிறக்கும் குழந்தையை
பேணி வளர்க்கிறேன்
கொஞ்சம்
தலையை குணிந்து கொள்
தைரியமில்லாத உனக்கு
ஒரு
தாலியையும்; கட்டி விடுகிறேன்.’
Published by

Leave a comment