வடக்கையும், தெற்கையும் இணைக்கும் தேசத்தின் மகுடம்!

– Arivu

குளியாபிட்டி: தேசத்தின் மகுடம் 2014 கண்காட்சி குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாபிட்டி நகரத்தில் சம்பிரதாயமாக ஆரம்பம் ஆகின்றது. உன்னதமான சமாதானத்தின் ஊடாக வளமான தேசம் என்கிற தொனிப் பொருளிலான இக்கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கின்றார்.

தேசத்தின் மகுடம் கண்காட்சிக்கு இது 08 ஆவது வருடம். அனைத்து அரச துறையினரும் ஓரே கூரையின் கீழ் உற்பத்திகள், தயாரிப்புக்கள், சேவைகள், ஆவணங்கள் ஆகியவற்றை காண்பிக்கவும், வழங்கவும், விளங்கப்படுத்தவும் இக்கண்காட்சியை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் வட மாகாண சபை தேர்தல் இடம்பெற்ற பிற்பாடு இடம்பெறுகின்ற முதலாவது தேசத்தின் மகுடம் இது ஆகும்.

ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகியோர் இக்கண்காட்சியில் வட மாகாண சபையின் காட்சிக் கூடங்களை திறம்பட காண்பிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக ஈடுபடுகின்றனர். மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு பொறுப்பான கடமைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் அருமையான காட்சிக் கூடங்களை வடிவமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வட மாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை காட்டக் கூடிய காட்சிப்பாடுகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே நேரம் ஜனாதிபதி செயலகமும், ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவும் இணைந்து இக்கண்காட்சியில் காத்திரமான காட்சிப்பாடுகள், அரங்காற்றுக் கலைகள் ஆகியவற்றை வழங்க உள்ளன. குறிப்பாக தேசிய நல்லிணக்கம் சார்ந்த விடயங்கள் இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் இயக்க ஆண், பெண் உறுப்பினர்களின் நடனங்கள் இவற்றில் சிறப்பிடம் பெறுகின்றன. ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பணிப்பாளர் நந்தன விஜேசிங்க இவற்றுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை திறம்பட மேற்கொண்டு உள்ளார். இவரது ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர்கள் குழு கண்காட்சியில் செய்தி சேகரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

Published by

Leave a comment