கல்லால் அடித்து கொல்லப்பட்ட கள்ளக்காதல் ஜோடி: 6 பேர் கைது

pakistan– SHM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியை கல்லால் அடித்துக் கொன்ற 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பலூசிஸ்தான் பகுதியில் உள்ள லோரலய் கிராமத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்,திருமணமான இன்னொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.

அந்த பெண்ணும் திருமணமானவர் என்பதால் இந்த தகாத உறவு பற்றிய தகவல் அறிந்த உள்ளூர் பெருந்தலைகள் அந்த கள்ளக்காதல் ஜோடியை கையும் களவுமாக பிடிப்பதற்காக வலை விரித்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடி, அந்த வலைக்குள் கடந்த வாரம் அந்த ஜோடி சிக்கியது. இதையடுத்து உள்ளூர் மதத்தலைவரின் உத்தரவுப்படி பிடிபட்ட இருவரையும் ஊர் மக்கள் கல்லால் அடித்துக் கொன்றனர்.

இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக காதும் காதும் வைத்தாற்போல் அவசரம் அவசரமாக சடலங்களை புதைத்து விட்டனர். எப்படியோ பெண்ணிய ஆர்வலர்களின் மூலமாக இந்த சம்பவம் பற்றிய தகவல் பலூசிஸ்தான் உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு சென்றடைந்தது.

இதனையடுத்து உள்ளூர் பொலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதைக்கப்பட்டவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய அவர் ஏற்பாடு செய்தார்.

கொல்லப்பட்ட ஜோடியின் உறவினர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்படி, இக்கொலையில் சம்பந்தபட்ட ஆறு பேரை கைது செய்த பொலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப கவுரவம் என்ற பெயரில் பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இது போல் கல்லால் அடித்து கொல்லப்படுவதாக பெண்ணுரிமை அமைப்பினர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment