இன ரீதியாக பேசுவதை விட்டு விட்டு இலங்கையர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் பேசுங்கள் – வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உரை

Shibly– பழுலுல்லாஹ் பர்ஹான்
 
திருகோணமலை: இன ரீதியாக பேசுவதை விட்டு விட்டு இலங்கையர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் பேசுங்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்துரையாற்றுகையில் ஒரு நாட்டினுடைய அபிவிருத்தியானது பலவகையான கோணங்களிலிருந்து உருவாக்கப்பட வேண்டியுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு அபிவிருத்திப் பணி என்பது, மக்கள் உட்பட அவர்களுக்கு அத்தியவசியமான வீடு, உறைவிடம் என்பதோடு அந்த நாட்டு அபிவிருத்தியில் மிகப் பாரிய பங்கு செலுத்துகின்ற ஓர் அங்கமாக வீதி அபிவிருத்தியும் காணப்படுகின்றது. இதற்கு நான் ஒரு உதாரணத்தை கூற வேண்டும். மலேசிய அபிவிருத்தி அடைவதற்கு அந்த நாட்டில் அமைக்கப்பட்டிருக்கின்ற வீதி அமைப்பும், அதில் கொண்டிருக்கின்ற முன்னேற்றமும் தான் பிரதான காரணம் இதனை 25 வருடங்களாக பிரதம மந்திரியாக இருந்த டாக்டர் மகதீர் மகமூத் அவர்களிடம் உங்களினுடைய நாட்டு அபிவிருத்தியுனுடைய இரகசியம் என்னவென்று ஒரு நேர்காணலின் போது நான் அரசாங்கத்தை பாரமெடுக்கின்ற போது முதலாவதாக வீதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தேன். வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலமாகதான் ஒரு நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியும் என்று அவர் கூறியிருந்தார்.
 
மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளில், பாலைவனங்களில் வீதிகளை அமைத்திருப்பார்கள் நீங்கள் சென்று பார்த்தால் தெரியும். மக்கள் இல்லாத பாலைவனங்களில் வீதிகளை ஏன் அமைக்கீன்றீர்கள் என்று நாங்கள் கேட்டால், எங்களை நாங்களே முட்டாள்கள் என்று கூறுகின்ற மாதிரித்தான் இருக்கும். ஏனென்றால் வீதிகளை அமைத்தால்தான் அங்கு மக்கள் குடி ஏறுவார்கள். அப்போதுதான் பல வகையான உற்பத்தி பொருட்களைச் செய்யக் கூடிய முதலீடு அங்கு வரும். ஆகவே நாங்கள் அதைச் செய்ய வேண்டும் என்ற அந்த விடயத்தை விளங்கிக் கௌ;ள வேண்டும். இதேபோன்று இஸ்ரேல் நாட்டில் எவ்வாறு அபிவிருத்தி செய்தார்கள் என்றால், ஒரு பாலைவனத்தில் வீதியை அமைத்து அந்த வீதி முடிகின்ற இடத்தில் ஒரு வியாபார சந்தையை கட்டுவார்கள். அதன்போது ‘மக்களே இல்லாத இடத்தில் வீதியைப் போட்டு வியாபார சந்தையை கட்டுகின்றீர்களே எதற்காக இதைச் செய்கின்றீர்கள்?’ என மக்கள்  கேட்டார்கள். ஆனால் அந்த வியாபார சந்தை அமைக்கப்பட்டு ஒரு சில வருடத்திற்குள்ளேயே அதனைச் சூழ உள்ள இடங்கள் மக்களால் நிரப்பப்பட்டு அந்த இடங்கள் அபிவிருத்தி அடைந்து விட்டது.
 
ஆகவே ‘வீதி’ என்பது ஒரு நாட்டினை அபிவிருத்தி செய்வது மட்டுமல்லாது அந்தந்த நாட்டிலுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் உட்பட அனைத்து விடயங்களையும் அபிவிருத்தி செய்கின்ற விடயம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
இன்னுமோர் முக்கியமான துறையாக நீர்ப்பாச துறையை எடுத்துக் கொள்ளலாம். இதனை பொறுத்த மட்டில் சிறிய சிறிய குளங்களை அபிவிருத்தி செய்கின்ற இந்தப் பணிகள் செவ்வனே செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
 
ஆனால் எதிர்காலத்திலும் இதே போன்று பல குளங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டிருக்கின்ற ஆயிரக்காணக்கான ஏக்கர் நிலங்கள் வயல்கள் செய்வதற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுவதனால், அமைச்சர் அவர்களே  இதை நீங்கள் கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் நீர்ப்பாசனத்திற்காக கூடிய நிதியினை ஒதுக்குவதன் மூலமாக கிழக்கு மாகாணத்தில் உருவாகக் கூடிய தேசிய வருமானத்திற்குபங்கு செலுத்தக் கூடியதும் வருமானத்தை அதிகரிக்கக்கூடியதுமான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் தங்கி வாழ்கின்ற நெற்பயிர்ச் செய்கையை எடுத்துக் கொண்டால் அந்தப் பயிர்ச் செய்கையில் கிடைக்கின்ற அறுவடைகளைக் கொண்டு மாகாண மக்கள் எவ்வளவு தூரம் பலனைப் பெறுகின்றார்கள், என்ற சிந்தனையை உங்கள் முன் வைக்கலாம் என்று நினைக்கின்றேன். இங்கு அறுவடை செய்யப்படுகின்ற நெற்கள் நெற்களாகவோ அல்லது அரிசிகளாகவோ கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியே சென்று அதற்குரிய பெறுமதி சேர்க்கின்ற எந்த விதமான விடயங்களும் இல்லாமல், ஏழை விவசாயிகளுக்கு கிடைக்கின்ற வருமானம் மிகக் குறைவாகவும், கிழக்கு மாகாணம் இலங்கை நாட்டின் அபிவிருத்திக்கு கொடுக்க வேண்டிய பங்களிப்பினுடைய பெறுமானமும் மிகக் குறைவாக இருக்கின்றது.

 ஆகவே இவ்வாறான விடயங்களில் நாங்கள் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
 
இது மட்டும் அல்லாது எங்களுடைய விவசாயம் ஓய்ந்த நிலையில் இருக்கின்ற காலங்களில் அந்த விவசாயிகள் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வாறு சேனைப்பயிர்ச் செய்கையில் முக்கியமாக சோளம் பயிரிடப்படுகின்றது. வெளிநாடுகளில் இளம் சோளனுக்கு மிக அதிகமான கிராக்கியும், பெறுமதியும் இருக்கத்தக்கதாக, அதனை வெறுமனே அந்த காலங்களில் உருவாக்கி, நாங்கள் சாப்பிட்டு விட்டு எஞ்சியதை மாடுகளுக்குத் தீனாகக் கொடுக்கின்ற விவகாரம் தான் நடந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களை நீங்கள் உள்வாங்கி எதிர்காலத்தில் உற்பத்திப் பொருட்களை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கும், அதனூடாக இம் மாகாணத்தில் தேசிய வருமானத்திற்கு கொடுக்கின்ற பங்களிப்பினை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றும் மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
 
நாட்டில் பால்மா பாவிக்கின்ற விகிதம் அதிகரித்துக் கொண்டு இருக்கின்ற அதே வேளையில் இந்தியாவிலும் மற்றைய ஆசிய நாடுகளிலும் இருப்பது போன்று எந்த விதமான கிருமித் தாக்கங்களும் இல்லாமல் சுகாதாரமாகக் கிடைக்கக் கூடிய பக்கட் முறையில் அடைக்கப்பட்ட தூய பசும்பாலினை வீடுகளிலிருந்தவாரே பெற்றுக் கொள்வதற்கான இலகு வழிகளை நாங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக நாட்டில் இறக்குமதி செய்கின்ற பால்மாவின் அளவினைக் குறைப்பதோடு மிகவும் கஷ்டப்பட்டு ஏழ்மையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் ஒரு விடிவினைக் கொடுக்கக் கூடிய ஒரு சாதகமான காரணியாக இருக்கும் என்பதை உங்கள் முன் எடுத்துரைக்கின்றேன்.

அது மட்டும் அல்லாது கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறையில் அதிவேக வளர்ச்சி கண்டு வருகின்றது. ஆனால் பாரம் பரியமாக எங்களுடைய ஊர்களில்  பின்னுகின்ற சிறு கைப்பணிப் பொருடகள் வெளிநாட்டில் இருந்து வருகின்றவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான, பெறுமதிமிக்க பொருளாக இருக்கின்றது. எனவே, தனிப்பட்ட ரீதியாக இல்லாமல் குறிப்பிட்ட ஒரு ஊரைத் தெரிவு செய்து, அதனை ஒரு மாதிரி கிராமமாக மாற்றி அங்குள்ள மக்களை நீங்கள் மேலும் பலவிதமான பயிற்சிகளுக்கு உட்படுத்துவதன் மூலமாக சிறந்த பொருட்களை உற்பத்தி செய்யலாம். அதை இங்கு வருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளுக்கு அதே போன்று அவர்கள் பார்வையிட செல்கின்ற கொழும்பில் நடைபெறும் அல்லது இலங்கையில் எப்பாகத்திலாவது நடைபெறும் பொருட் கண்காட்சிகளுக்கு  அனுப்புவதன் மூலமாக எமது வருவாயைக் கூட்டுவதோடு, அந்த ஏழை மக்களுக்கும் விடிவுகளை கொடுத்ததாக இருக்கும்.
மற்றும் இன்னுமொரு குறைபாடு என்னவென்றால், கால காலமாக இங்கு இருக்கின்ற மாடுகளுக்கு செயற்கை முறையில் சினைப்புச் செய்யப்படுகின்றது. இதைப் பாரம்பரியமாக ஏற்கனவே இருந்து வந்த, பெரிய பட்டிகளுக்கு உகந்ததாக  அதாவது நல்ல இன மாப்பிள்ளை மாடு என்பதாகும். அதனைப் பட்டிகளுக்கு அறிமுகப்படுத்துவதன் காரணமாக சினைப்புக்களைச் செய்வதன் மூலம் நல்லவிதமான கன்றுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க முடியும். இதை உங்களுடைய சிந்தனைக்காகத் தருகின்றேன்.

அது மட்டுமல்லாமல் மட்டக்களப்பில்  மிருக பரிசோதனை நிலையம் இல்லாது இருப்பது மிகப் பாரிய குறைபாடாக இருக்கின்றது.  ஆகவே, நீங்கள் அதனை அங்கு மிக விரைவாக அமைக்க வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

‘வேலைவாய்ப்புக்களை கொடுக்கின்ற போது இன ரீதியாகவும் அதன் விகிதாசாரத்திற்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்’ என்றும் சில கௌரவ எதிர்த்தரப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூறினார்கள். ஆனால் விவசாய கால் நடை சுற்றுலாதுறை அபிவிருத்தி அமைச்சினை பார்க்கின்ற போது அங்கு வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு விகிதங்களை பார்க்கின்ற பொழுது கௌரவ எதிர்தரப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சொல்வதற்கு எதிர்மாராக இருக்கின்றது.

அதற்கு ஒரு சில உதாரணங்களை உங்களுக்குக் கூறலாம் என்று நினைக்கின்றேன். உங்களுடைய திணைக்களத்திற்குள் வருகின்ற மீன் பிடித்துறைக்குக் கிட்டத்தட்ட 66 விகிதமான தமிழ் சகோதரர்களும் 16 விகிதமான முஸ்லிம் சகோதரர்களும் 16 விகிதமான சிங்கள சகோதரர்களும் உள்வாங்கப்பட்டு இருக்கின்றார்கள். எனவே, எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்குகின்ற பொழுது இவ்வாறான பாகுபாடுகள் இல்லாமல், சரியான முறையில் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று நான் மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இதே போன்று உற்பத்தி திணைக்களம்; கிட்டத்தட்ட தமிழ் சகோதரர்கள் 76 விகிதம், முஸ்லிம் 12 விகிதம், சிங்களவர் 10 விகிதம் என இவ்வாறாக மிக மோசமான நிலையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை நீங்கள் உங்களது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நான் தொடர்ந்து கூறிக் கொண்டே சொல்லலாம். எந்த திணைக்களத்தை எடுத்தாலும் விலங்கியல் உற்பத்தி எடுத்தால் தமிழ் சகோதரர்கள் 50 விகிதம் முஸ்லிம் சகோதரர்கள் 22 விகிதம், சிங்களவர்கள் 22 விகிதம். இவ்வாறு விவசாய திணைக்களம்  இல் தமிழர்கள் 55 விகிதம், முஸ்லிம்கள் 24 விகிதம், சிங்களவர்கள் 20 விகிதம் இவ்வாறு அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

ஆகவே எதிர்த்தரப்பு சகோதரர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களைக் கூறுகின்ற பொழுது, அதனை மிகத் தெளிவாக அறிந்து பேச வேண்டும். இவ்வாறான பங்கீடுகள் இடப்பட்டு இருக்கின்ற நிலையில், நீங்கள் மற்றைய சமூகங்களையும் மதித்து அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் உதவக் கூடிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நான் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எங்களுடைய எதிர்தரப்பு கௌரவ உறுப்பினர் ஒருவர் ஆரம்ப உரையில் பேசுகின்ற பொழுது முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களம் இருக்கின்ற உயர் அதிகாரி அதற்கு தகுதியற்றவர் என்றும், அதற்கு தகுதியானவர் இலங்கை முகாமையாளர் சேவையில் உள்ளவாராக இருக்க வேண்டும் என்றும் தற்பொழுது இருக்கின்றவர் அதனை கொண்டிருக்க வில்லை என்றும் சுட்டிக் காட்டியிருந்தார் ஆனால் வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

நாங்கள் இன வாதத்தைப் பற்றி பேசக் கூடாது என்று கூறுகின்ற இதே சபையில் அவ்வாறு இன ரீதியாக உள்ள விடயங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு உதராணத்தை மட்டும் கூறுகின்றேன். அதன் பின் பேசவில்லை. விவசாய கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சினுடைய செயலாளர் கொண்டிருக்க வேண்டிய தகைமை இலங்கை நிர்வாக சேவை வகுப்பு 1 ஆயும் ஆனால் தற்பொழுது இருக்கின்ற செயலாளருக்கு இலங்கை விவசாய சேவையே அவருடைய தகைமையாகும் அதே போன்று முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தில் இருக்கின்றவர், ஒரு முஸ்லிம் சகோதரர், இலங்கை நிர்வாக சேவை வகுப்பு 1 தகைமையுடையவர்கள்.  அதற்கு முன் கிருஸ்ணா  என்பவர் இருந்தார்.

அவர் இலங்கை கணக்காளர் சேவை. அதற்கு முன் இருந்தவர் சுவாமிநாதன். அவர் இலங்கை திட்டமிடல் சேவை  ஆறு வருடங்கள், நான்கு வருடங்கள் என்று சேவை செய்து இருக்கின்றார்கள். மேற்குறிப்பிட்ட இருவரும் இலங்கை முகாமைத்துவ சேவையில் இல்லாதவர்கள் அதே நேரம் இப்பொழுது இருக்கின்ற ஒருவர் வகுப்பு 1 இலங்கை நிர்வாக சேவையிலிருந்தும்  அவர் ஓர் முஸ்லிம் என்கின்ற ஒரே ஒரு காரணத்தினால் அவர் அதற்கு பொருத்தமற்றவர் என்று சுட்டிக்காட்டி எதிர்தரப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பேசியிருந்தார். மேற் சொன்ன இரு தமிழ் சகோதரர்களையும் நீங்கள் சுட்டிக் காட்டி பேசியிருந்தால் அது நியாயாமானது ஆனால் அப்படி நீங்கள் செய்யவில்லை ஆக இன ரீதியாக பேசுவதை விட்டு விட்டு இலங்கையர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் பேசுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Published by

One response to “இன ரீதியாக பேசுவதை விட்டு விட்டு இலங்கையர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் பேசுங்கள் – வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உரை”

  1. your bravely and intellec. speech appreciated by the community. Masa Allag

Leave a reply to silmi Cancel reply