29 ஆண்டுகளுக்குப்பின் சொந்த கிராமத்தில் குடியேறும் முஸ்லிம்கள்

vavunathivuமட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள இருநூறுவில் கிராமத்திலிருந்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த கிராமத்தில் மீளக்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

1985ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த இன வன்முறைகளையடுத்து அப்போது அந்த கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் காத்தான்குடியில் தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருகின்றனர்.

 1985 தொடக்கம் அவ்வப்போது ஏற்பட்ட இன வன்முறைகள், யுத்தம் மற்றும் அந்த பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமை போன்ற பல்வேறு காரணங்களினால் இந்த குறிப்பிட்ட தொகுதி முஸ்லிம் குடும்பங்கள் அங்கு செல்ல முடியாத சூழல் நிலவியதாக அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது போர் முடிவடைந்த நிலையில் 2011ம் ஆண்டு தொடக்கம் ஒரு சில குடும்பங்கள் மீன்பிடி, விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களின் நிமித்தம் அங்கு சென்று தங்கியுள்ளன.

vavunathivu

இக் குடும்பங்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் ஆராயும் பொருட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ். எச். முஸாம்பில் கூட்டமொன்றை கூட்டி அவர்களது கருத்துக்களை கேட்டபோது சகல குடும்பங்களும் சொந்த கிராமத்தில் மீள் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளன.

தமது வெளியேற்றம் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய இருநூறுவில் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான அப்துல் கபூர் 1985 ம் ஆண்டு ஆயுதம் தரித்த நபர்களினால் தமது கிராமத்திலிருந்து தாங்கள் பலவந்தமாக கையில் அகப்பட்ட பொருட்களுடன் விரட்டப்பட்டதாக கவலையுடன் கூறினார்.

அந்த நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட தமிழ் ஆயுத குழுக்கள் இருந்தமையால் இதற்கு பொறுப்பானவர்கள் யார் என உறுதி பட தங்களால் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1985ஆம் ஆண்டு 105 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தன. 29 ஆண்டு காலத்தில் அந்த குடும்பங்கள் விரிவடைந்து தற்போது 175க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றத்தை எதிர்பார்த்து உள்ளதாக அவர் கூறினார்.

பிரதேச செயலாளரால் கூட்டப்பட்ட மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டத்தில் இது தொடர்பான உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்பிக்குமாறு தங்களை கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

– BBC Tamil

Published by

Leave a comment