சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம்

vatticanஜெனீவா: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் , தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா மன்றம் விமர்சித்திருக்கிறது.

சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஐ.நா மன்றக் குழு, ( சி.ஆர்.சி), சிறார்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக அறியப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் பாதிரியார்களை போப் உடனடியாக அகற்றவேண்டும் என்று கூறியிருக்கிறது.

மேலும், ஒரு பாலுறவு, கர்ப்பத்தடை மற்றும் கருச்சிதைவு ஆகிய விஷயங்கள் குறித்து வத்திக்கானின் அணுகுமுறைகளையும் அது கடுமையாக விமர்சித்திருக்கிறது.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான வத்திக்கான், ஏற்கனவே , திருச்சபைக்குள் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறது.

vattican

இந்த கமிட்டியின் அறிக்கை வத்திக்கானைக் கட்டுப்படுத்தாது. அதன் பரிந்துரைகளை அமல்படுத்தும் அதிகாரங்கள் கொண்ட அமைப்பும் அங்கு இல்லை.

தாங்கள் செய்த “குற்றங்களை மறைத்த” பாதிரியார்கள் குறித்த கோப்புகளை போப் வெளிப்படுத்த வேண்டும், அதன் மூலம் அவர்கள் மீது பொறுப்பை சுமத்த முடியும் என்று ஐ.நா மன்ற சிறார்கள் உரிமைக் குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.

நடந்த குற்றங்களின் அளவை போப் ஒப்புக்கொள்ளவில்லை என்பது பற்றி தாங்கள் கவலை அடைந்திருப்பதாகவும் ஐ.நா குழு கூறியது.

குற்றமிழைத்த பாதிரியார்களை அவர்கள் பங்குத் தந்தையாக இருக்கும் பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு இடம் மாற்றுவது, சில சமயங்களில் நாடு விட்டு நாடு மாற்றுவது போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்ட்தையும் அது கண்டித்திருக்கிறது.

பல நாடுகளில் சிறுவர் சிறுமியர் இன்னும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய ஆபத்தில்தான் இருக்கிறார்கள் என்றும், இக்குற்றத்தில் ஈடுபட்ட பல பாதிரியார்கள் இன்னும் சிறார்களுடன் தொடர்பில்தான் இருப்பதாக்க் கூறப்படுதாகவும் இந்தக் குழு கூறியது.

கடந்த மாதம் வத்திக்கான் அதிகாரிகளை ஐ.நா குழு வெளிப்படையாக விசாரணை செய்து, இது குறித்த தகவல்களை வத்திக்கான் ஏன் வெளியிடக்கூடாது என்றும், எதிர்காலத்தில் இது போன்ற துஷ்பிரயோகங்கள் நடக்காமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியது.

ஆனால் துஷ்பிரயோகங்கள் குறித்த தரவுகளை, மற்றொரு நாடு கேட்டால் மட்டுமே, அதுவும், சட்டரீதியான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே, தன்னால் தரமுடியும் என்று கூறி, ஐ.நா மன்றத்தின் கோரிக்கையை டிசம்பரில் வத்திக்கான் நிராகரித்துவிட்டது.

இந்த விசாரணை அறிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்படும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

கருக்கலைப்பு, கருத்தடை மற்றும் ஒருபால் உறவு ஆகியவை குறித்த தமது நிலைப்பாட்டையும் கத்தோலிக்கத் திருச்சபை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஐ நாவின் அறிவுரைகள் கத்தோலிக்க போதனைகளில் குறுக்கிடும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது என்று வத்திக்கான் பதிலடி கொடுத்துள்ளது.

– BBC

Published by

Leave a comment