டெல்லி: ‘இந்தியா எனும் அழகிய நாட்டில் பிறந்ததற்காக மிகவும் பெருமைப் படுகிறேன். எனது இந்த உயரிய விருதை எனது தாய் மற்றும் அனைத்து இந்தியத் தாய்மார்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
40 வயதான டெண்டுல்கர் சுமார் 200 டெஸ்ட் போட்டிகளிலும், 463 ஒருநாள் போட்டிகளிலும், 20 ஓவர் போட்டியில் ஒரு ஆட்டமும் சேர்த்து மொத்தம் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின். ‘கிரிக்கெட் கடவுள்’ என ரசிகர்களால் போற்றப் பட்ட சச்சினுக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது.
பாரத ரத்னா விருதை எனது தாயாருக்கும், இந்தியாவின் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும், தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக பெரும் தியாகம் செய்கின்றனர்.
கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப் பூர்வமாக ஓய்வு பெற்றபோதும், எனது ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து விளையாடுவேன்.
இந்திய தேசத்தில் பிறந்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த உயரிய விருதினை நான் பெற வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
மேலும், பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர். ராவுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய இளைஞர்கள் அறிவியல் விஞ்ஞானிகளாவதற்கு முன்னோடியாக ராவ் திகழ்கிறார்’ என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் பாரதரத்னா விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும், மிகக் குறைந்த வயதில் இந்த விருதினைப் பெறுபவர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment