கிண்ணியா: யுத்த பயமும், இருள் சூழ்ந்ததுமாக இருந்த இலங்கை திருநாட்டில் இன்று நாம் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்வதென்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் பெற்றுத் தந்த சுதந்திரத்தினால் தான். இன்று நாட்டை உண்மையான சுதந்திரத்திற்கு இட்டுச் சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே என நகரசபை முன்றலில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது நாட்டின் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தபின் உரையாற்றிய கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.
இன்று காலை கிண்ணியா நகரசபையில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வு வெகுவிமர்சையாக நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது நகரசபைக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் நகரபிதாவின் பணிப்பின் பேரில் ஏற்றிவைக்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் நடப்பட்டது. அத்தோடு டெங்கு சிரமாதானமும் நகரபிதா ஹில்மியின் பணிப்புரைக்கு அமைவாக நகரசபை உத்தியோகத்தர்கள், சுகாதார தொழிலாளிகளால் மேற்கொள்ளப்பட்டது.
பெப்ரவரி 04 இன்று 2014 66 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த சுதந்திரத்திற்கு பாடுபட்டு உழைத்து எமக்காக பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் பயன்படுத்த வேண்டும். இந்த சுதந்திரத்திற்காக பாடுபட்ட எல்லா தலைவர்களையும் இந்த தருணத்தில் நாம் நினைவு கூரவேண்டியது அவசியமாகவுள்ளது. அது மட்டுமல்ல இன்று ஆசியாவிலேயே ஆச்சர்யமிக்க நாடாக இலங்கை வருவதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. நாமும் முஸ்லிம், தமிழ், சிங்களவர எனும் பாகுபாடின்றி தாய்நாட்டுக்காக உழைக்க வேண்டுமெனவும் நகரபிதா மேலும் தனதுரையில் தெரிவித்தார்.
இதன்போது நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், சமாதான நீதவான்கள் சங்கத் தலைவர் பாயிஸ், எம்.எம்.ஜெம்சித், எம்.ஐ. நிஜாம்தீன் நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment