கொழும்பு: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (31.01.2014) மாலை 3.00 மணியளவில் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சந்தித்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுவாக ஆணைக்குழுக்கள் தொடர்பாக மக்களிடம் நம்பிக்கையற்றுக் காணப்படுகின்றது. எனினும் இவ்வாணைக்குழுவானது அமைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. ஆகவே சமூக செயற்பாட்டாளர்கள் இவ்வாணைக்குழுவுடன் இணைந்து செயற்படுகின்றபோது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.
இவ்வாணைக்குழுவின் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பின் ஒத்துழைப்பையும் அவர் கோரினார்.
இறுதியாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பினர் பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.1. கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவைகளைத் தோண்டுதல்.
2. கடத்தப்பட்டு கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எச்சங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான மரணச்சடங்குகளை உரிய சமய ஆசாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளல்.
3.அவ்வாறு கடத்திக் கொல்லப்பட்டோர் மற்றும் கானாமற்போனோரின் குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடுகளை வழங்குதல்.
4.மேற்படி கடத்தல், கொலைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவோரினை அடையாளங்கண்டு விசாரணைக்கு உட்படுத்தலும், உரிய தண்டனைகளை வழங்குதலும்.
Published by




Leave a comment