காத்தான்குடியும் தலைக் கவசமும்…

helmet– M-16

காத்தான்குடி: இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் ஊராக காத்தான்குடி திகழ்கிறது. வர்த்தக மற்றும் அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களில் பெரும்பாலான மக்கள் அங்கம் பெறுகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது உலகில் உருவாக்கப்பட்ட சட்டமே தவிர காத்தான்குடிக்கு மாத்திரமுரியதல்ல!

மோட்டார் பொலிஸார் வீதிகளில் நின்றால் மாத்திரம் அல்லது அவர்களைக் கடந்து செல்ல மாத்திரம் தலைக் கவசத்தை மக்கள் அணிகின்றனர்.

இருந்த போதிலும் தற்பொழுது பெரும்பாலானவர்கள் இயல்பாகவே தலைக் கவசம் அணிந்தே மோட்டார் சைக்கிள்களை செலுத்தி வருகின்றனர்.

எனினும், ஐங்காலத் தொழுகைக்குச் சென்று வருவதற்கு இந்த தலைக் கவசங்கள் ஓர் அசௌகரியமாக தென்படுவது மறுக்க முடியாது. அதிலும் ஜூம்ஆ தினங்களில் பல சங்கடங்கள் ஏற்படுகின்றன.

பள்ளிவாயலுக்கும் வீட்டிற்கும் 50 அடிகள் இருந்தாலும், மோட்டார் சைக்கிளில் பயணித்து பள்ளிவாயலுக்குச் செல்வதுதான் காத்தான்குடியின் பெரும்பாலானோரின் ‘ஸ்டைல்’.

பள்ளிவாயலுக்கு வுழூச் செய்து நடந்து செல்லும் நன்மைகளை அறியாத இவர்கள், மோட்டார் சைக்கிளில் பள்ளிவாயலுக்குச் சென்று வருகின்றனர்.

மோட்டார் பொலிஸார் உள்ளக வீதிகளில் இல்லாவிட்டாலும், பிரதான வீதி, கடற்கரை வீதி மற்றும் சில வேளைகளில் ஊர் வீதி ஆகிய இடங்களில் தங்களது கண்காணிப்புக்களை நடாத்தி வருகின்றனர்.

தலைக் வகசம் என்பது எங்களது பாதுகாப்பிற்குரியதே தவிர, மோட்டார் பொலிஸாருக்காக அணவது என்ற தப்புக் கணக்கு அதிகமானவர்களிடம் இருந்து வருகின்றன.

தங்களது பிள்ளைகளை, மனைவிமார்களை பின்ஆசனத்தில் ஏற்றிச் செல்லும் சகோதரர்கள், மோட்டார் பொலிஸார் நிற்கும் இடங்களில் மாத்திரம் அவர்களை தலைக் கவசம் அணிவித்து, அதன் பின்னர் அகற்றிச் செல்லும் அறியாமையை பெருமிதமாகச் செய்து வருகின்றனர்.

விபத்து என்பது எதிர்பாராதது. மனிதர்களால் எதிர்வு கூறமுடியாதவை. அதிலும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் கூடுதலாக தலைப்பகுதியை தாக்குவதன் காரணமாகவே மோட்டார் சைக்கிள்களுக்கு தலைக் கவசம் உலகளவில் அவசியமாக்கப்பட்டுள்ளன. இதைவிட, ஐரோப்பா நாடுகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கும் தலைக் கவசம் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதும் கண்கூடு.

சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தலைக் கவசம் அணிந்து செல்வதைக்கூட வரவேற்காமல், ‘அங்கு பொலிஸார் இல்லை. இந்த வழியாகப் போ’ என அவர்களை தலைக்கவசம் இன்றி, அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள்களைச் செலுத்த ஆர்வம் காட்டி வருவதையும் காண முடிகிறது.

பயங்கர ஆபத்துக்கள் காத்திருக்கும் மோட்டார் சைக்கிள் பயணங்களில் தலைக் கவசம் ஓர் இன்றியமையாததாகும்.

தலைக் கவசம் அசௌகரியங்களாகத் தெரியும் குறுந்தூர வேலைகளை நடந்து சென்றே தாராளமாக நிறை வேற்ற முடியும். சுமார் ஒரு மைல் தூர நீளத்தைக் கொண்ட பிரதான வீதியில் ஒரு கடையிலிருந்து மறுகடைக்குச் செல்வதென்றாலும் அல்லது காலடியில் அமைந்துள்ள பள்ளிவாயலுக்குச் சென்று வருவதென்றாலும் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதையே எமது சகோதரர்கள் இலகுவாகவும் பெருமிதமாகவும் நினைக்கின்றனர்.

பெரும்பாலான முதலாளிமார்கள் சாப்பிட்டுவிட்டு ‘கெசியர்’ மேசையில் மின்விசிறிக்கு கீழ் இருந்துகொண்டு, பத்திரிகைகளையும், இன்டர் நெட்டையும் பார்த்துவிட்டு, ‘செல்ப் ஸ்டார்ட்’ மோட்டார் சைக்களில் பயணிக்கின்றனர்.

குறுந்தூரங்களை நடந்து செல்லுங்கள். அது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதவை.

தலைக்கவசத்தை மறக்காதீர்கள். ஒரு குடும்பத்தை ஒரே பைக்கிள் ஏற்றிச் செல்லாதீர்கள். சாரதிப்பத்திரமில்லாத இளைஞர்களை (டீன்ஏஜ் பருவத்தினர்) மோட்டார் சைக்கிளைச் செலுத்த அனுமதிக்காதீர்கள்.

இத்தகையவர்களால்தான், நடந்து செல்லும் அப்பாவிகளுக்கு உயிர் ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.

சிலர் மோட்டார் பொலிஸாரை ஏசியும், தூற்றியும் வருகின்றனர். அது அவர்களின் கடமை. இத்தகைய வீதிக் கண்காணிப்புப் பொலிஸார் அவர்களின் மேல் அதிகாரிகளால் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதைவிட மேலதிகாரிகளால் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்பதும் எங்களில் பலருக்குத் தெரியாத உண்மை!

சிந்திப்போம். செயல்படுவோம்.

Published by

Leave a comment