காத்தான்குடியின் கடை நிலவரங்கள்…

kattankudy (4)M-16

காத்தான்குடி: ஒரு காலத்தில் காத்தான்குடியில் கடை வாங்குவதென்றால், அல்லது வாடகைக்கு பெறுவதென்றால் போட்டி போட்டு பெறும் நிலை காணப்பட்டது. மக்கள் பணத்தை கையில் வைத்துக் கொண்டு கடைகளை வாங்க அல்லது பெற்றுக் கொள்ள முண்டியடித்துக் கொள்வர்.

ஆனால் இப்போதெல்லாம் எங்கு பார்த்த போதிலும், ‘கடைகள் வாடகைக்கு’, ‘வீடு-காணிகள் விற்பனைக்கு’ என விளம்பரங்கள் தொலை பேசியூடாகவும், துண்டுப் பிரசுரங்கள் ஊடாகவும், ஏனைய விளம்பரங்கள் ஊடாகவும் காண முடிகிறது.

காத்தான்குடியின் பிரதான வீதி, கடற்கரை வீதி உட்பட உள்ளுர் வீதிகளிலும் இவ்விளம்பரங்களைக் காணமுடிகிறது.

ஓர் கடையை முக்கிய இடத்தில் வாடகைக்குப் பெறவேண்டுமானால் ஒரு மாதம் வாடகைப் பணம் ரூபா 25,000  நிர்ணயிக்கப்படுகிறது. 3 வருடங்களுக்கான வைப்புப் பணமாக ரூபா 900,000 செலுத்த வேண்டும்.

இதே போல் மாதாந்தம் ரூபா 20,000,  ரூபா 15,000 ஆகிய வற்றிற்கும் கடைகள் இருந்த போதிலும், 3 வருடத்துக்கான வைப்புப்பணம் பலரது வியாபார எண்ணங்களை திசை திருப்புவதாக மக்கள் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தற்போதய நிலையில், ஓர் தொழிலை ஆரம்பிக்க ஆகக் குறைந்தது 50 இலட்சம் ரூபாய்களாவது இருக்க வேண்டும் என்பதால், வெளிநாடுகளில் இருந்து உழைத்து வந்தவர்கள்கூட, தொழில் செய்து,  நஷ்டப்பட்டு கடன் சுமையுடன் மீண்டும் வெளிநாடு சென்ற பரிதாப நிலைகளும் காத்தான்குடியில் இடம்பெற்று வருகின்றன.

வீடு, நகைகளை வங்கிகளில் அடகு வைத்து வட்டிக்குப் பெற்று புகழுக்காக தொழிலைத் தொடங்கிய பலரும் இன்று வட்டிக்கு மேல் வட்டி செலுத்தி அதள பாதாளத்துக்குள் செல்கின்ற மோசமான நிலையினையும்  மேலும் காண முடிகிறது.

இதன் காரணமாக பல சமூகப் பிரச்சினைகளுக்கும் குடும்பப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலையினையும் இங்குள்ள வியாபார முறைகளில் காண முடிகிறது.

 

Published by

Leave a comment