நடிகைகளின் கவர்ச்சி அடையாளத்துக்கு முன்னுரிமை வேண்டாம் என்கிறது கஃபே

ELECTION-non-colour[1]கொழும்பு: இலங்கையில் வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தல்களில் கட்சியின் அடிமட்டத்தில் இருந்தே அரசியல் அனுபவத்துடன் வரக்கூடியவர்களுக்கு வேட்பாளர்களாக இடமளியாமல், முக்கிய கட்சிகள் இரண்டும், சினிமா நடிகைகள் போன்ற கவர்ச்சி அடையாளம் உள்ளவர்களுக்கு இடமளிப்பதாக கஃபே எனப்படும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளரான அஹ்மட் மனாஸ் மக்கீன் அவர்கள் கூறுகையில், இப்படியான நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்துக்கும், இறைமைக்கும் எதிர்காலத்தில் பிரச்சினையை உள்ளாக்கலாம் என்று கூறியுள்ளார்.

 கட்சியிலும், அதன் தொழிற்சங்கங்களிலும் அடிமட்டத்தில் இருந்து வரக்கூடிய அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு இதனால் வாய்ப்பு இல்லாமல் போய்விடுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால், அரசியல் அனுபவம் மிக்கவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்ற கருத்தை தாம் ஏற்பதாகக் கூறும் சுயாதீன பத்திரிகையாளரான தேவகௌரி அவர்கள், இருந்தபோதிலும், பெண்களுக்கு கவர்ச்சி அடையாளம் வழங்கப்படுவதை நிராகரிக்கிறார். இலங்கையைப் பொறுத்தவரை ஆண்களும் கூட அவர்களது அரசியல் அனுபவத்தை, அறிவை அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்களிடம் இருக்ககூடிய பணம், பிரபலம், சண்டித்தனம் செய்யக்கூடிய திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அரசியலில் உள் ஈர்க்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

ஆகவே இந்த விடயத்தில் பெண்களை மாத்திரம் இலக்கு வைப்பது தவறு என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் தற்போது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், அரசியல் அனுபவமற்ற சினிமா நடிகைகளை கொண்டுவருவதன் மூலம் பெண்களுக்கான சிறிய வாய்ப்புக் கூட தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாகவே தாம் இதனை கூறுவதாக கஃபே அமைப்பு கூறுகிறது.

அனுபவமற்றவர்களுக்கு வழங்கப்படக் கூடிய வாய்ப்பு இலங்கையின் ஜனநாயகத்தையே சீர்குலைத்துவிடும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

– BBC

Published by

Leave a comment