காத்தான்குடியின் தற்போதய கட்டுமான நிலவரங்கள்

 

BY:FM. FARHAN

– AK-77

காத்தான்குடி: பொருளாதார உச்ச கட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும், உண்ணாது குடிக்காது பணத்தை சேமித்து தனது பிள்ளைக்கு, சகோதரிக்கு ஓர் வீட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் காத்தான்குடியில் வீடுகள் துரிதமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் காத்தான்குடியில் அதிகமான வீடுகள் மாடி வீடுகளாக அமைக்கப்பட்டு  வருகின்றன. அவற்றுள் பல இரு மாடி வீடுகளாக இருந்து வந்தன. தற்பொழுது சில வீடுகள் 3 மாடிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

காத்தான்குடிக்கு கட்டுமானப் பணிகளுக்கு மாத்திரம் சுமார் 10000 க்கும் அதிகமாக கட்டடத் தொழிலாளர்கள் தினமும் வருகை தருகின்றனர். பலர் காத்தான்குடியில் தற்காலிகமாக வசித்து இத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு கட்டடத் தொழிலாளர்களுக்கான ஒரு நாட்கூலி 2500 ரூபாய் தற்பொழுது தொழிலாளர்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றுள் பிரதான தொழிலாளிக்கு (பாஸ்) 1500 ரூபாயும்,  உதவித் தொழிலாளிக்கு 1000 ரூபாயும் வழங்கப்படுகின்றன.

இதனைவிட காலை உணவாக பராட்டா, இறைச்சி ரொட்டி, பான்-பருப்பு, தேனீர் அவைபோக மத்தியான தேனீர் அல்லது குளிர்பானம், மாலை சிற்றுண்டி, தேனீர் என மிகை கவனிப்புக்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

உதாரணமாக இரு மேசன்மார் ஒரு வீட்டில் வேலை செய்தால் குறைந்தது 3000 ரூபாய் கூலிக்கும், சிற்றுண்டிக்கும் வேறாக எடுத்து வைக்க வேண்டும்.

இதைவிட செல்வந்தர்களின் வீடுகளில் இரவு பகலாக வேலை செய்வதற்குத் தயாராக இருக்கும் தொழிலாளர்கள் சாதாரண மக்களிடத்தில் சென்று வேலைகள் செய்வதற்கு ஆர்வம் குறைவாக இருந்து வருகின்றனர்.

கட்டுமாணப் பொருட்களை வீட்டில் பெற்றுக் கொள்ள முடியாத ஆண்பிள்ளைகள் உதவி இல்லாதவர்கள் உண்மையில் பாவப்பட்டவர்களே. ஏனெனில் பிரர்களிடமிருந்து பெரும் இவ்வாறான கட்டடப் பொருட்கள் தகுதியற்றவையாக அமைவதும், கூடுதலான பணங்கள் கொடுக்கப்பெற்று பெறப்படுவதும் வேதனைக்குரியவை.

ஊரில் போட்டி போட்டு சீமந்துகளாலும், கொங்கிரீட்களாலும் அடுக்கிக் கட்டப்பட்ட மாடிவீடுகள் எவற்றிலும் தரை மாடியைத் தவிர மின் விளக்குகள் எரிவதையோ, வீட்டுக்காரர்கள் மேல் மாடி அறைகளை உபயோகிப்பதையோ காண முடியாமல் இருக்கின்றன.

மேல் மாடிகளை கவனிக்க முடியாத நிலையால் தூசிபடிந்து இருப்பதையும், சில வீடுகளின் மேல் மாடிகள் பாலடைந்து அச்சமூட்டும் நிலை தோன்றுவதாகவும் உரியவர்களே சொல்லக்கூடிய நிலையினைக் காணமுடிகிறது.

தன் சகோதரிக்கு, பிள்ளைக்கு ஓர் வீட்டைக்கட்ட சொந்த பந்தங்களைப் பிரிந்து கடல் கடக்கும் எத்தனையோ சகோதர்கள் காத்தான்குடியின் கட்டட வரலாற்றை மறக்ககமாட்டார்கள்.

காத்தான்குடியில் கட்டப்படும் அதிகமான வீடுகள் வெளிநாட்டில் வியர்வை சிந்தியுழைக்கும் எமது சகோதரர்களின் தியாகப் பணம். தங்களால் எவ்வளவு உழைக்க முடியுமோ அந்த வசதிக்கேற்ப தங்களது சகோதரிகளுக்கு வீட்டை அமைத்துக் கொள்ளுங்கள்.

அந்த செல்வந்தரோடு போட்டிபோட்டு  எனது தங்கச்சிக்கும் வீட்டை அமைக்க வேண்டும் எனவோ, அறபு வீடுகள் போன்று அமைக்க வேண்டும் என்றோ நினைத்து விடாதீர்கள். தங்களால் முடியுமான அளவுக்கு வீடுகளை அமைத்துக் கொடுங்கள். இல்லாவிட்டால் காலமெல்லாம் வெளிநாடுகளில்  தங்களை அர்ப்பணிக்க வேண்டிய துர்பாபக்கிய நிலை ஏற்படும்.

ஊரை விட்டு, நாட்டை விட்டு உழைக்கச் சென்ற எமது பல்லாயிரம் சகோதரர்களுக்கு மத்தியில், காத்தான்குடிக்கு தினமும் கட்டடத் தொழில் வேலைக்காக வரும் பத்தாயிரத்துக்கும் அதிகமாக தொழிலாளர்களையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தொழில் இல்லை என்று நாங்கள் வெளியூர் சென்றாலும் தொழில் காத்தான்குடியில் இருக்கின்றன என இன்னும் தொழிலாளர்கள் காத்தான்குடிக்கு வருகை தந்துகொண்டிருப்பதும்  மற்றுமொரு சிந்தனை!

Published by

Leave a comment