முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோரின் பராமரிப்பு நிலையம் வவுனியாவில்

140117174740_vavuniya_spine_cord_centre_304x171_bbcவவுனியா: இலங்கையில் யுத்தகாலத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தோருக்காக, வடமாகாண சுகாதார அமைச்சின் பொறுப்பில் முதலாவது சுகாதார பராமரிப்பு நிலையம் வவுனியா பம்பைமடுவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு நிலையத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் சக்கர நாற்காலிகளை நம்பியிருப்பவர்களுக்கு அவசியமான சுகாதாரப் பராமரிப்பைத் தொடர்ச்சியாக வழங்கும் நோக்கத்துடன் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இத்தகைய பராமரிப்பு நிலையங்களை தேவைக்கேற்றவாறு வேறு மாவட்டங்களிலும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த வைபவத்தில் உரையாற்றிய முதலமைச்சர் தெரிவித்தார். இதற்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், அதற்கான நிதியம் ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையத்தை எம்.எஸ்.எஃப் ஹொலண்ட் என்ற சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவனமே வவுனியா பம்பைமடுவில் நடத்திவந்தது.

அந்த நிறுவனம் தனது சேவைகளை முடித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறியபோது, இந்த நிலையம் மூடப்பட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வீடுகளுக்குச் சென்றவர்கள் போதிய அடிப்படை கழிப்பறை வசதிகள் மற்றும் அவசியமான மருத்துவ பராமரிப்பின்றி பெரும் சிரமங்களுக்கு ஆளாகியிருந்தனர்.

வடமாகாணத்தில் இவ்வாறு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் அடிப்படை வசதிகளும் சுகாதார பராமரிப்பும் இன்றி தவிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு சிரமப்படுபவர்களின் நன்மை கருதியே,பழைய பராமரிப்பு நிலையம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஓர்ஹான் எனப்படும் மாற்று வலுவுள்ளவர்களின் புனர்வாழ்வுக்கான நிறுவனத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பதற்கென முதலமைச்சர் நிதியம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

 

BBC Tamil

Published by

Leave a comment