கொழும்பு: சவூதி அரேபியாவுடன் செய்து கொண்ட தொழில்சார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாகத் தொழில் புரியும் இடங்கள், நியாயமான சம்பளம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது.
பணிப்பெண்கள் சித்திரவதைக்குள்ளாவது, சம்பளம் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுவது என்பன பெருமளவு குறையும் எனவும், ஏதும் தொழில்கள் பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய கூறினார்.
இலங்கை அரசுக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்களன்று கைச்சாத்திடப்பட்டது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், இதற்கு முன்னர் சவூதியுடன் இவ்வாறான ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை. அதனால் எமது ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.
ஆனால் புதிய ஒப்பந்தம் மூலம் சவூதியிலுள்ள சுமார் 4 1/2 இலட்சம் இலங்கை ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட இருப்பதோடு பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்க்கவும் இந்த ஒப்பந்தத்தில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர ஒப்பந்தக் காலம் முடிந்தவுடன் இலங்கைப் பணிப்பெண்கள் தாமதமின்றி நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் இதில் சரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. புதிதாக தொழில்பெற்று செல்லும் பணிப் பெண்களும் இதனூடாக நன்மை அடைய உள்ளனர்.
– தினகரன்
Published by

Leave a comment