காத்தான்குடி: ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பித்ததுமே, ‘கொண்டாட்ட மாதம்’ என முன்னோர்கள் பெயர்வைத்து விடுவர். இந்தக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏனைய பெருநாட்கள் போன்று இனிப்பு, பலகாரங்கள் செய்து, மற்றும் புத்தாடைகள் அணிந்து கொண்டாடா விட்டாலும், அன்றைய தினத்தில் ஓவ்வொரு வீடுகளிலும் விசேட உணவுகள் சமைத்து உண்ணப்படுவதுடன், இக்கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓதிய மௌலீதுகளும் நிறைவுக்கு வரும்.
இந்த கொண்டாட்ட நாட்களில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் உள்ள காத்தான்குடியில் மீலாது விழாக்களும், மேடைப் பேச்சுக்களும் நிலா ராத்திரிகளை அலங்கரித்துச் செல்லும்.
ஜாமியுழ்ழாபிரீன் சதுக்கத்தில் இடம்பெற்ற இவ்வாறான ஓர் மீலாதுவிழா ஒன்றின் போதே, 1970களின் பிற்பாட்டில் காத்தான்குடி இரு பிரிவுகளாக மார்க்கத்தில் பிளவு கண்டது.
இதன் பின்னர் உலமாக்கள் என்றும், அப்துர் ரவூப் மௌலவி குழு என்றும் ஊர் முதன் முதலில் இரண்டுபட்டது.
1990 களின் பிற்பாடுகளில் இருந்து காத்தான்குடியில் செல்வாக்குச் செலுத்திவரும் தௌஹீத் எனும் இஸ்லாமியக் கொள்கையைச் சார்ந்தவர்களால், இத்தகைய கொண்டாட்டங்கள், மௌலீதுகள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது என எடுத்துரைத்து வந்ததால், ஊரில் ஓதப்பட்டு வந்திருந்த மௌலீதுகளும் அவை சார்ந்த கந்தூரிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
எனினும் அன்று முதல் இன்றுவரை காத்தான்குடி 5, பதுரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் மிக விமர்சையாக இத்தகைய கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன், ஊர்ப் பிரமுகர்கள், உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவால் பகிரங்கமாக 1979ல் அப்துர் ரவூப் மௌலவிக்கு வழங்கப்பட்டிருந்த ‘முர்தத்’ எனும் பட்டம், 2004 இல் காத்தான்குடியில் ஏற்பட்ட மார்க்கப் பிரச்சினைகளின் பின்னர் மறைமுகமாக வாபஸ் பெறப்பட்டிருந்தது.
1979ல் குறித்த மௌலவிக்கு ‘முர்தத்’ பட்டத்தை வழங்கிய அதே உலமாக்கள் இன்றும் வயது முதிர்ந்த நிலையில் இருந்தாலும், தற்போதுள்ள சமுதாயத்துக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் இந்த ‘முர்தத்’ வாபஸ் பெறப்பட்டதா அல்லது மறைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தங்களது மரணத்திற்கு முன்னர் தெளிவு படுத்தவேண்டிய கடமை இந்த உலமாக்களுக்கு இருக்கின்றன.
2004ல் கொழும்பில் இடம்பெற்றிருந்த ஓர் இரகசிய மாநாட்டில் உலமா சபையினருக்கும், மௌலவி அப்துர் ரவூப் மிஸ்பாஹி அவர்களுக்குமிடையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்னிலையில் ஓர் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.
அன்று பகிரங்கமாக முர்தத் பட்டம் வழங்கி மக்களை அப்துர் ரவூப் மௌலவியின் பக்கம் மக்கள் செல்வதைத் தடுத்த உலமாக்கள். இன்று மௌலவி அப்துர் ரவூப் அவர்களது காலடியில் சென்று பரக்கத் பெற்று வருவது கண்கூடு.
இவ்வுடன்படிக்கையின் பின்னர் ‘சுன்னத் வல் ஜமாஅத்’ என தங்களை அறிமுகப்படுத்தி வரும் அப்துர் ரவூப் மிஸ்பாஹி குழுவினர், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை கடைப்பிடிக்கும் தப்லீஹ் ஜமாஅத்தினரை அனுமதிப்பதில்லை. இதில் பல சந்தேகங்கள் தோன்றினாலும், மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன பல உண்மைகள்
இதனால் காத்தான்குடி சமூதாயம் இன்னும் தெளிவு பெறாமலேயே இருக்கின்றது. உண்மையில் அன்று இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற இரகசிய உடன்படிக்கையை சமூதாய நலன்கருதி பகிரங்கப்படுத்த வேண்டும்.
இல்லையேல் ஓர் முஸ்லிமை முர்தத் என்ற பட்டத்தில் உட்படுத்தி சமூதாயத்தையும் திரிபுபடுத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் ஊராகவே காத்தான்குடி அமையும்.
‘மழைகாலத்தில் தவளைகள் சத்தமிடுவது போல அவ்வப்போது நவீன உலமாக்கள் கொதித்தெழுந்தாலும், அவர்களாலயோ உலமாக்களாலயோ எதுவும் செய்ய முடியாது’ என்பதாக முரிதீன்களில் ஒருவர் கூறினார்.
‘அன்றிலிருந்து ஓர் கொள்கையாகவே இருக்கும் எங்களை பிரிக்க முடியாது எனவும், நவீன உலமாக்கள் இன்று 7 பிரிவுகளாக பிரிந்து விட்டனர்’ எனவும்,
‘நாய் குரைப்பதுதான் நாம போறதுதான்’ என செய்குனா எங்களுக்குச் சொல்லியிருக்காங்க’ என இன்னுமொரு முரீதீன்களில் ஒருவரும் கூறினார்.
கொண்டாட்டத்தை எதிர்ப்பவர்கள், அன்றைய நாளில் திரையரங்குகளில் நிறைந்திருப்பதும், தொழுகையில் முன் சப்பில் நின்றவர்கள் திரையரங்குகளில் பின் சப்பில் (திரையரங்கில் பின் சப்பில் இருப்பதுதான் தவாபு அதிகம்) இருப்பதும் வேடிக்கையே!
அதைவிட முகநூலில் தாங்கள் இந்த திரையரங்களில் யார் யாருடன் என்ன படம் பார்க்கிறோம் என்பதையும் போட்டு கலாய்க்கின்றனர்.
‘ஐரோப்பாவில் இல்லாத சுதந்திரம் காத்தான்குடியில் இருக்கு’ எனவும் இப்போது பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.
‘ஊரில் இப்போது எல்லாமே ஓர் வேசமாகவும் காட்சியாகவுமே சென்றுகொண்டிருக்கின்றன’ என்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவர் கூறுகிறார்.
என்னதான் கொண்டாட்டத்தை சமய ரீதியாக பலர் கொண்டாடா விட்டாலும், அதை எதிர்த்தாலும், கொண்டாட்ட நாளில் நல்ல உணவு சமைத்து உண்பதும், கடற்கரைக்குச் சென்று வருவதும், ஓர் படம் பார்த்து மகிழ்வதும், இம்மாதத்தில் திருமணங்கள் இடம்பெறுவதும் காத்தான்குடியின் கொண்டாட்டத்தின் தனிச் சிறப்புக்கள் என்பதை மறுக்க முடியாது!
Published by

Leave a reply to ஊர் மகன் Cancel reply